Penbugs
Cinema

32 இயர்ஸ் ஆஃப் நாயகன்..!

தமிழ் சினிமாவின் ஆளுமைகள் ஒன்றாக ஒரு படத்தில் பணி புரிந்து ஒரு கல்ட் கிளாசிக்கை இந்திய சினிமாவிற்கு தந்த படம் நாயகன்…!

இத்திரைப்படம் டைம் வார இதழின் உலகின் நூறு சிறந்த திரைப்படங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது என்றால் அது ஏற்படுத்திய, ஏற்படுத்தி கொண்டிருக்கும் தாக்கம் அத்தகையது ..!

வரதராஜ முதலியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுத்த திரைப்படமாக இருந்தாலும் மணிரத்னத்தின் திறமையான திரைக்கதையால் படம் தூக்கி நிறுத்தப்பட்டது ..!

கமல்ஹாசனின் அறுபது வருட திரை வரலாற்றை நாயகனுக்கு முன் , நாயகனுக்கு பின் என இரண்டாக பிரித்து பார்க்கும் அளவிற்கு ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் நாயகன்‌.
நாயகனுக்கு பின் கமல் எடுத்த அனைத்து படங்களும் நாயகனோடு ஒப்பீடு செய்யப்பட்டது.

கமலுடன் மணிரத்னத்திற்கான அறிமுகம் அவர் சுப்பிரமணியாக இருந்தபோது நடந்த ஒரு விசயம். அப்போது அவர்கள் பேசிக் கொண்டது ஒரு நிழல் உலக தாதாவின் கதையை வேறு பாணியில் சொல்ல வேண்டும் என்பதே கமல் ஒரு பேட்டியில் சொன்னது காலம்காலமாக தாதா என்றால் கழுத்தில் கர்ச்சீப் கட்டிக் கொண்டு உரத்த குரலில் சிரிப்பது மட்டுமே என்பதை உடைக்க விரும்பியே இக்கதையை எடுக்க துணிந்தோம் .

காட்பாதர் படத்தை பார்த்து மையக்கருவை மட்டும் மாதிரியாக வைத்து நம் களத்திற்கு ஏற்ப திரைக்கதையை அமைத்தார் மணிரத்னம்.

கதை முடிவான பிறகு இயக்குனர் முக்தா சீனிவாசனிடம் மணிரத்னத்தை அறிமுகம் செய்து வைத்து கதை சொல்ல சொல்லி அவரை தயாரிப்பாளராக வைத்து நாயகனை எடுக்க முடிவு செய்தனர் கமலும் மணிரத்னமும் . முக்தா அவர்கள் சொன்ன ஒரு வார்த்தை எனக்கு விருதுகளுக்காக மட்டும் படம் வேண்டாம் வசூலும் வர வேண்டும் என்பதே செலவும் அதிகம் செய்ய முடியாது என கூற தயாரிப்பாளரின் செலவை குறைக்க ஆடை வடிவமைப்பாளராக சரிகா (கமலின் முன்னாள் மனைவி )அவர்களும் , மேக்கப்பை கமலே பார்த்து கொள்ளவும் செய்தனர்.

படத்தின் மிகப்பெரிய சவால் கமல் ஏற்கனவே வயதான கெட்டப்புகள் போட்டு இருந்ததால் அதே மாதிரி இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே பல ஒப்பனைகளுக்கு பிறகு நாம் பார்க்கும் கெட்டப் முடிவானது..!

அடுத்து தாரவியில் சூட்டிங் எடுக்க அனுமதி இல்லாமல் தராவி செட் முழுவதும் சென்னையில் போடப்பட்டது. ஆம் அந்த அளவிற்கு தோட்டதரணியின் சிறப்பான வேலைபாடு அது …!

இவற்றோடு பிசியின் கேமரா கோணங்களும் , இயற்கையோடு இயைந்த ஷாட்களும் படத்தை மெருகேற்றின..!

படத்தின் மிகப்பெரிய பலம் இளையராஜா ,அவரின் நானூறாவது படமாக வந்த நாயகனின் அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்…!

ராஜாவின் குரலில் தென்பாண்டி சீமையிலே பாடல் இன்றும் சோகத்தோடு கூடிய ஒரு தாலாட்டு . பின்னணி இசையில் சில இடங்களில் மௌனங்களையே இசைக்கோர்ப்பாக சேர்த்து இருந்தது படத்தின் உயிரோட்டமாக இருந்தது அதனால்தான் அவர் இசைஞானி …!

நாயகன் படம் அந்த வருடத்திற்கான தேசிய விருது பட்டியலில் சிறந்த நடிகர் ,சிறந்த ஒளிப்பதிவாளர் ,சிறந்த கலை இயக்குனர் என மூன்று விருதுகளை தட்டிச் சென்றது அதோடு மட்டுமல்லாமல் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டதும் கூட …!

படத்தின் பெரிய பிளஸ் வசனங்கள்

“நீங்க நல்லவரா கெட்டவரா ”
“அதற்கு கமலின் பதில் “தெரியல”

“நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல”

“நாயக்கரே போலிஸ் ரொம்ப அடிச்சிட்டாங்க அப்ப கூட நான் வாயே துறக்கலயே நீங்க இருக்கனும் நான் இருந்து என்ன பண்ண போறேன் ”

மகளோடு விவாதம் செய்யும் காட்சியில் ஜனகராஜின் நடிப்பு , டெல்லி கணேஷ் போன்ற பிற நடிகர்களும் நடிப்பில் உச்சம் தொட்ட படம் , வேலு நாயக்கர் மகன் இறந்தபின் கமல் அழும் காட்சி நெஞ்சை உருக வைக்கும் என்றும் ‌‌..!

உபரி தகவல் :

கமல் தன் மகன் இறந்தபின் அழ வேண்டிய காட்சியை படமாக்கும்போது பிலிம் ரோல் தீர்ந்து விட்டதால் அலுவலகம் சென்று எடுத்து வர வேண்டிய நிலைமை இருபது நிமிடங்ளுக்கு மேலாக கமல் முழு ஒப்பனையுடன் அதே சோகமான மனநிலையில் ஒருவித இறுக்கத்தோடு இருந்தாராம் அதன் பின் காட்சியை எடுக்கும்போது அவ்வளவு தத்ரூபாமக வர அதுவும் ஒரு காரணம் என பின்னர் கமல் ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார்…!

பட துவக்கத்தில் கமல் தன் சிறுவயதில் தந்தையை கொன்றவனை பழிவாங்க ஒரு கொலை செய்கிறார் , பட இறுதியில் தன்னால் கொல்லப்பட்ட ஒருவரின் மகனால் கமல் இறப்பதாக முடித்து இருப்பது மணிரத்னத்தின் கிளாசிக் டச்…!

உபரிதகவல் : படத்தின் கிளைமேக்ஸ் மணி மற்றும் கமலுக்கு திருப்தி இல்லாமல் தயாரிப்பாளரின் வணிகத்தை கருத்தில் கொண்டு அவ்வாறு எடுக்கப்பட்டதாக ஒரு தகவல் உண்டு.

இன்று வரை எந்த கேங்ஸ்டர் படம் வந்தாலும் நாயகனின் தாக்கம் இல்லாமல் இருப்பதில்லை என்பது இந்த படத்தின் மிகப்பெரிய சிறப்பு …!