கொரோனா – ஒரு நீண்ட விளக்கம் | Dr.Aravindha Raj

*முதல் உலகப்போர் தொடக்கத்தில் INFLUENZA.

*இந்த நூற்றாண்டு தொடக்கத்தில் SARS

*சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் NIPHA

*தற்போது CORONA !!!

இப்படி மனித இனம் அடிக்கடி சவாலான சில கிருமிகளுடன் தன் இனத்தைக் காத்துக்கொள்ள போராடிக்கொண்டிருக்கிறது.

~இந்த வைரஸ் கிருமித்தொற்று ஏன் டாக்டர் இவ்ளோ கொடூரமா இருக்கு ??

சூப்பர் கேள்வி சார் !!

மனிதனுக்கு பெரும்பாலான கிருமித்தொற்றுகள் பாக்டீரியா மற்றும் வைரஸ் மூலமாக பரவுகின்றன !!

இந்த பாக்டீரியா இருக்குல்ல… இது உயிருள்ள (Life) ஒரு கிருமி. தானாகவே வேதிவினைகளை(Biochemical Changes) மேற்கொண்டு இனப்பெருக்கம் செய்துகொள்ளும் தன்மை உடையது.

ஆனா, இந்த வைரஸ் உயிரற்ற (No Life) கிருமி. வேதிவினை மற்றும் இனப்பெருக்கம் செய்ய கண்டிப்பாக வேறு ஒரு உயிரை சார்ந்து இருக்கும்.

எல்லா வைரஸ்களும் பாதிப்பு தரக்கூடியவை.

ஆனா, எல்லா பாக்டீரியாக்களும் அப்படி இல்லை.

இன்னும் புரியும் மாதிரி சொல்லணும் ன்னா, நம்ம குடல் பகுதியை நல்லா வெச்சுக்க நம்ம குடல் பகுதியில் LACTOBACILLI மாதிரி சில நல்ல பாக்டீரியாக்கள் உண்டு. இவை ஆபத்தற்றவை.

~ஒஹ்ஹ்…அப்படியா டாக்டர் ?? சரி. இந்த வைரஸ் எல்லாம் கெட்டது ன்னு வெச்சிக்குவோம். அதுக்காக உலகையே உலுக்கிப் போடுற அளவுக்கு வீரியம் இருக்கா ?? பாக்டீரியா தொற்று வந்தா மருந்து மாத்திரை கொடுக்குற மாதிரி இதுக்கும் மருந்து குடுத்து சுலபமா சரி செஞ்சிடலாம் ல ??

மறுபடி சூப்பர் கேள்வி சார்.

இந்த வைரஸ் இருக்கு ல்ல. இது மனித உடலை ஊடுருவி தாக்கியதும் தன்னுள் உள்ள ஜீன்களில் சில மாற்றங்களை (Mutation) தனக்குத்தானே செய்து கொள்ளும். இதற்கு பெயர் ANTIGENIC SHIFT & ANTIGENIC DRIFT.

இதெல்லாம் செய்து கொண்டு அடுத்த முறை தாக்கும் பொழுது அதனோட அமைப்பு, தன்மை, வீரியம் எல்லாமே வேற மாதிரி இருக்கும். அதாவது ஒரு வைரஸ் தாக்கும் முன்பு இருந்த தன்மை, அது மனித உடலில் இனப்பெருக்கம் செய்து அடுத்தவரையோ அல்லது சில கால இடைவெளி விட்டு மீண்டும் தாக்கும் பொழுது வேறு தன்மையும் வீரியமும் கொண்டிருக்கும்.

அதனால தான் பாக்டீரியா தொற்றை விட வைரஸ் கொஞ்சம் சவாலான ஒன்னு.

அதனால தான் FLU போன்ற வைரஸ் கிருமிகளுக்கு சில வருட இடைவெளியில் மறக்காமல் தடுப்பூசி போடுவாங்க. வைரஸில் ஏற்பட்ட புதிய மாற்றங்கள் நம்மை மீண்டும் தாக்காமல் இருக்க சீரிய இடைவெளிகளில் போடப்படுவது தான் BOOSTER தடுப்பூசி.

~கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து நம்மைக் காத்துக்கொள்வது எப்படி டாக்டர் ??

1. ஒருவர் இருமினாலோ அல்லது தும்மினாலோ அந்த சளியானது கிருமிகளுடன் சேர்ந்து சுற்றியுள்ள 1 மீட்டர் தூரத்து பொருட்களில் படியும். இதனை Droplet infection என்று கூறுவோம்.

ஆகவே, மக்கள் புழங்கும் பகுதிகளில் உள்ள பொருட்கள் மீது கை வைக்க வேண்டாம் (படிக்கட்டு,நாற்காலி,மேசைகள், சுவர்கள்)

இந்த கொரோனா வைரஸ் தும்மல் மூலம் பரவும் Aerosol துகள்களில் 3 மணி நேரம் உயிரோடு இருக்கும்.

COPPER – 4 மணி நேரம்

CARDBOARD – 24 மணி நேரம்

STEEL – 48 மணி நேரம்

PLASTIC – 72 மணி நேரம்

ஆகவே, அநாவசியமாக எந்த பொருட்களிலும் கை வைக்க வேண்டாம்.

2. கொரோனா பாதிக்கப்பட்ட நபரின் மலத்தில் உயிருள்ள கொரோனா வைரஸ் கிருமி கண்டறியப்பட்டுள்ளது. மலத்தின் மூலம் வாய் வழியாக கிருமி பரவும். இதனை Feco-Oral contamination என்று கூறுகிறோம்.

ஆகவே, பொதுக்கழிப்பிடங்களை உபயோகிக்கும் மக்கள் தங்கள் கைகளை நன்கு சோப்பு போட்டு சுத்தம் செய்வது நல்லது. மால்களுக்கு சென்று Western Toilet பயன்படுத்த நேர்ந்தால் நியூஸ்பேப்பர் விரித்து அதன் மீது உட்கார்ந்து மலம் கழிக்கலாம்.

3. மலம் கழித்த பின்போ அல்லது வெளியே சென்று வந்த பிறகோ கைகளை சுத்தம் செய்ய சோப் / 60% அல்லது அதற்கு மேற்பட்ட கலவை கொண்ட ஆல்கஹால் உடைய சானிடைசர்கள் பயன்படுத்துவது சிறப்பு.

4.பொதுமக்கள் தும்மும் போது கைக்குட்டையோ, சுத்தமான டிஸ்யூ பேப்பர் கொண்டு இருமல் செய்தல் மிக சிறப்பு. கைக்குட்டை இல்லை என்றால் முழங்கையை (DAB COUGH) மூடி இரும வேண்டும். உள்ளங்கையில் இருமக்கூடாது

5.மருத்துவர்கள், செவிலியர்கள் போன்ற மருத்துவ துறை சார்ந்த பணியாளர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து பணியாற்றுவது அவசியம். சாதாரண மக்கள் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

6.அடிக்கடி முடி கோதுவது, மூக்கில் விரல் விடுதல் போன்றவற்றை தவிர்த்தல் நன்று.

7.தங்கள் வீட்டு கழிப்பறையை தினமும் நல்ல Disinfectant கொண்டு இரண்டு முறை சுத்தம் செய்தல் அவசியம்.

8.தினமும் அடிக்கடி உப்பு போட்டு மிதமான சுடுநீரில் வாயை கொப்பளிக்கவும்.

9.Social Distancing

அதாவது, நோய்தொற்று உடையவரிடமிருந்து ஆரோக்கியமான நபருக்கு நோய்த்தொற்று பரவக்கூடாது என்பதற்காகத் தான் Social Distancing எனப்படும் சமூகத்தில் இருந்து தங்களை துண்டித்துக் கொள்ளுதல் வலியுறுத்தப்படுகிறது.

10.நம்ம ஊர் வெயிலுக்கு லாம் கொரோனா பரவாது என்பது நிரூபிக்கப்படாத ஒன்று. ஆகவே, மக்கள் மெத்தனமாக இருக்க வேண்டாம். பிராய்லர் கோழி உண்பதால் கொரோனா பரவுகிறது என்பது முற்றிலும் வதந்தி. மக்கள் அதுகுறித்து பயம் கொள்ள வேண்டாம்.

சரி….சீனா, இத்தாலில அவ்ளோ பாதிப்பு. நம்ம இந்தியால பாதிப்பு எந்த கட்டத்தில் இருக்கு டாக்டர் ??

PANDEMIC கிருமித்தொற்று நான்கு கட்டங்களாக நகர்கிறது.

கட்டம் 1 – தொற்று நோய் பாதித்த பகுதிகளில் இருந்து புதிய இடத்திற்கு வந்திறங்கும் நோய் தொற்று உடைய மக்கள். (பயணிகள்)

கட்டம் 2 – புதிதாக பாதித்த இடங்களில் அவர்கள் மூலம் நோய்க்கிருமி அந்த பகுதிகளில் பரவுதல். (LOCAL SPREAD)

கட்டம் 3 – வரைமுறையின்றி நாட்டின் பல பகுதிகளில் பரவும் நிலை. எவ்வாறு பரவுகிறது என்பதை கண்டறிய முடியாத வண்ணம் மிக வேகமாக பரவும் நிலை இருக்கும். (COMMUNITY SPREAD)

கட்டம் 4 – மொத்த நாட்டையே உலுக்கும் கொள்ளைநோய்.

இத்தாலி, ஈரான், சீனா போன்ற நாடுகள் நான்காம் கட்டத்தில் உள்ளன. ஆகவே தான் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் மிக அதிகம்.

அப்போ இந்தியா ??

கட்டம் 2-ல் உள்ளது. அதாவது நோய்க்கிருமி பாதித்த பகுதிகளில் இருந்து வந்திறங்கிய நபர்களின் மூலம் இந்த நோய்க்கிருமி மெதுவாக பரவ ஆரம்பித்ததுள்ளது.

வரைமுறையின்றி பரவும் கட்டம் 3 இன்னும் ஒரு மாதங்களில் வந்தடையும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

கட்டம் 2 இல் இருந்து கட்டம் 3 க்கு செல்லாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் ??

1.நெடுந்தூர பயணங்களை தவிர்க்க வேண்டும்.

2.பொது இடங்களில் கூடுவதையும், மக்கள் கூட்டாக சேரும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

3. பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் ஆகியவற்றை முடிந்த அளவு தற்போதைக்கு மூடுவது சிறப்பு.

4.தயவு செய்து முடிந்தவரை வீட்டில் இருக்கவும்.

இதற்கு கண்டிப்பாக மக்களின் ஒத்துழைப்பு அவசியம்.

கட்டம் 2-ல் இருந்து கட்டம் 3 செல்ல ஒரு மாத காலம் ஆகும் என்று யூகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், மேற்கூறியவற்றை பின்பற்றினால் கட்டம் 2-லேயே கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த முடியும். கட்டம் 3 கண்டிப்பாக கட்டம் 4-ல் கொண்டு சென்று நிறுத்தும்.

கொரோனா வைரஸ் பற்றிய பீதி இருக்கு. அதனால நான் கொஞ்சம் முன்னெச்சரிக்கையா இருக்கணும் ன்னு வர்தா புயல் காலத்துல பிரட், பால் பாக்கெட் எல்லாம் வாங்கி பிரிட்ஜ்ல சேமிச்சு வெச்ச மாதிரி சூப்பர் மார்கெட் போய்ட்டு இருக்க எல்லா சோப்பு, சானிடைசர், மாஸ்க் எல்லாம் கூடைல அள்ளிப்போட்டு வீட்ல குவித்து வைக்க வேண்டாம்.

Dont create demand for available resources ன்னு சொல்றேன்.

ஒன்று அல்லது இரண்டு சோப் வாங்கிக்கோங்க.

கிடைச்சா சானிடைசர்கள் பயன்படுத்துங்கள். இல்லன்னா சோப்பு போட்டே கை கழுவலாம். எல்லாருக்கும் சானிடைசர்கள் கிடைக்காது. சோப்பு போட்டு கை கழுவினாலே போதும்.

மாஸ்க் அணிவது எல்லாருக்கும் அவசியம் இல்லை. அதனால, அவசரமா அமேசான்ல ஆர்டர் பண்ண வேண்டிய அவசியமும் இப்போது இல்லை.

தற்போதைய சூழ்நிலையில் வீட்டில் இருப்பது நலம். முடிந்தவரை மக்கள் கூடும் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
உங்களுக்கு உடல்நலம் சரியில்லை என்றாலோ அல்லது கொரோனா தொற்றுக்கான அறிகுறிகளான அதீத காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம் ஆகியன தென்பட்டால் 044-29510400/ 044-29510500/ 94443 40496/ 87544 48477 என்னும் 24 மணி நேர எண்ணுக்கு அழைக்கலாம். அவர்கள் உங்கள் வீடு தேடி வந்து, உங்களை பரிசோதித்து உரிய முறைகளை மேற்கொள்வார்கள்.

இப்போது வரை கொரோனா கிருமித்தொற்றுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. வந்தால் குணப்படுத்தும் சிகிச்சைகள் உண்டு.

தனிமைப்படுத்திக் கொள்ளுதலும் (SELF QUARANTINE) சமூகத்திலிருந்து தன்னைத்தானே துண்டித்துக் கொண்டு வீட்டில் இருப்பது (SOCIAL DISTANCING) மட்டுமே தற்போது கொரோனா கிருமித்தொற்று பரவுவதை தடுக்கும் மிகச்சிறந்த வழி.

மக்கள் தேவையில்லாமல் பீதி அடைய வேண்டாம். ஆனால், எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது அவசியம்.

இதுவும் கடந்து போகும் !!

Dr.Aravindha Raj.

PC: (left)AP Photo/Heng Sinith.

(Right) Dr. Aravindha Raj