Penbugs
Cinema

திராவிடம் போற்றும் “டஸ்கி”

ஒரு புதுத்துணி எடுத்தா கூட
சாமிக்கு ஆகாதுன்னு ஆசைப்பட்ட
டிரஸ்ஸ எடுக்க விடாம தடுக்குற சமூகம்
சார் இது, கேட்டா திராவிட நிறமே கருப்பு –
ன்னு பெருமையா சொல்லிக்கிறோம்
ஹ்ம்ம்,

சாமிக்கு கருப்பு நிறம் ஆகாதுன்னு
சொல்லுறாங்க அப்பறம் ஏன் சாமி
சிலை கருப்பு நிறத்துல இருக்குன்னு
கேட்டா நம்மல பைத்தியக்காரன்னு
சொல்லுவாங்க,

ஆனா அந்த திராவிட நிறம் வச்சு
எவளோ அழகான விஷயங்கள்
இருக்கு நம்ம கண்ணு முன்னாடியே,

திராவிட நிறம் (கருப்பு) இருக்குல
அது திரையில அற்புதமா வரும்
அதோட மூக்குல லேசா எண்ணெய்
படிஞ்ச முக சருமம் இருக்குல்லய்யா
அந்த அழகே தனி,

  • இயக்குநர் பாலு மஹேந்திரா : )

Dusky என்றவுடன் எனக்கு
நினைவுக்கு வருவது முதலில்
நடிகர் முரளி, இவர் பாலு மஹேந்திரா
படங்களில் நடிக்கவில்லை என்றாலும்
“கருப்பு நிறம்” என பேசும்போது
முரளி இல்லையென்றால் எப்படி,

முரளி – கருமை நிற கண்ணன் – ன்னு
சொல்லாம்,சில பேரு கருப்பா
இருந்தாலும் லட்சணமா கலையா
இருக்கான் சொல்லுவோம்ல அந்த ரகம்
தான் முரளி,

பல படங்கள் முரளி நடிச்சிருந்தாலும்
எனக்கு எப்பவுமே “இதயம்” தான்
மனசுக்கு நெருக்கமான ஒன்னு,

அவ்வளோ சீக்கிரம் “இதயம் முரளி” – ய
நம்ம மறந்துருவோமா என்ன,

உமாதேவி காலா கண்ணம்மா
பாட்டுல ஒரு வரி எழுதி இருப்பாங்க,

ஊட்டாத தாயின்
கணக்கின்ற பால் போல்
என் காதல் கிடக்கின்றதே – ன்னு

அப்படிதான் இதயம் படத்துல கீதா
(ஹீரா)கிட்ட சொன்ன ராஜா (முரளி) –
வோட காதலும்,

ராஜாவோட காதல்ல பரிசுத்தமான
அன்பு இருக்கும், பொய் இருக்காது,
தன்னோட மனசுக்குள்ளேயே கீதாவ
நினைச்சு நினைச்சு ஒவ்வொரு நாளும்
உருகிட்டே இருப்பான்,இது போல
எத்தனையோ ராஜாக்கள் இன்றும் தன்
காதலை அவள் ஏற்கவில்லை என்றால்
என்ன செய்வது என்று சொல்ல பயந்து
தங்களுக்குள்ளேயே அக்காதலை
புதைக்கின்றனர்,சில சொல்லிய
காதல்கள் நிறைவேறியும்,பல காதல்கள்
சொன்னதற்கு பின் இதயம் முரளியை
போன்று ஒரு தலையாகவும் மாறுகிறது,

இதயம் படத்துல வர அதர்வா அப்பா
மாதிரி கடைசி ரீல் வரையிலும்
லவ் – வ சொல்லாத இதயம் முரளிகள்
இங்க நிறைய பேர் இன்னும் சுத்திட்டு
தான் இருக்காங்க,

ரஜினிகாந்த்ல இருந்து விஜயகாந்த்ல
பயணிச்சு முரளி வர நம்ம மக்கள் கருப்பு
நிறம் கொண்ட கதாநாயகர்கள
ஏத்துக்கிட்ட போதிலும் கதாநாயகி
மட்டும் ஐஸ்வர்யா ராய் கேட்டால் என்ன
செய்வது..?

சினிமா உலகமே நல்லா பால்
கொழுக்கட்டை மாதிரியா வெள்ளையான
ஆட்கள கூட்டிட்டு வந்து ஹீரோயின்
கதாப்பாத்திரத்திற்கு நடிக்க வச்சுட்டு
இருந்த நேரத்துல பாலு மஹேந்திரா
ஒரு விஷயம் கையில எடுத்தார்,
திராவிட நிறமான கருப்பு ஸ்கின் உடைய
பெண்களை (Dusky) தன் படங்களில்
தன் கேமரா மூலம் எத்தனை அழகாக
அவர்களை காமிக்கலாம், அவர்கள்
நெற்றியில் வேர்க்கும் வேர்வை துளியில்
இருந்து மூக்கில் இருக்கும் எண்ணெய்
படிஞ்ச சருமம் வரை ஒவ்வொரு
ஃப்ரேம்மையும் ரசனை படுத்தி காட்சி
அமைத்தார்,

Dusky – யில் போதை உண்டா என்று
நீங்கள் கேட்டால் “சில்க் ஸ்மிதா” என்பது
என் பதில், சில்க் ஸ்மிதாவை எனக்கு
தெரிந்து இவருடைய கேமரா லென்ஸை
விட வேறு யாரும் அழகாகவும் ஒரு
போதை மிக்க ஷாம்பெயின் பாட்டில்
போலவும் திரையில் காமித்ததில்லை,

அப்பறம் நம்ம வீட்டு பிள்ளை
சிவகார்த்திகேயனுக்கு அம்மாவா
நடிச்சவங்க அதான் நம்ம அர்ச்சனா
மேடம், அவங்கள அதிகமா திரையில
அழகா காமிச்ச பெருமை பாலு
மஹேந்திரா சாரையே சேரும்,
ஐந்து படம் கிட்ட பாலு சார் கூட
பண்ணிருந்தாலும் ” வீடு ” – ல வர
சுதா கேரக்டர் எப்பவும் ஸ்பெஷல்
தான் எனக்கு,

ஆயிரம் ரோஜாப்பூ தோட்டத்துல
பூத்தாலும் ஒரு ரோஜா செடியில பூக்குற
ரோஜாப்பூ நமக்கு எப்போதும் தனியா
ஸ்பெஷலா இருக்கும் அப்படி தான் பாலு
சார் நிறைய படங்கள் இயக்கி
இருந்தாலும் மூன்றாம் பிறை மீது
எனக்கு அளவு கடந்த பிரியம் – ன்னு
முந்நூறு பக்கத்துக்கு உட்கார்ந்து எழுதுற
அளவுக்கு அவளோ பாதிச்ச படம்ன்னு
சொல்லலாம் மன ரீதியாகவும் சரி
திரை வடிவமாகவும் சரி,

கோவையில் வேலை செய்வதால் சில
நேரம் ஊட்டி செல்வதுண்டு அப்போது
செல்லும்போதெல்லாம் மூன்றாம்
பிறையில் வரும் கேத்தி ரயில் நிலையம்
அருகே செல்லும் போதெல்லாம் என்னை
மறந்து ஒரு இரண்டு நிமிடம் அங்கு
நின்று விட்டு தான் செல்வேன், அந்த
இரண்டு நிமிடத்தில் என் மனதில்
எனை பாதித்த சம்பவங்கள்,எனக்கு
ஏற்பட்ட பிரிவு என ஓராயிரம் கேள்விகள்
புதிதாக தோன்றிக்கொண்டே இருக்கும்,
சில நேரங்களில் என்னை அறியாமல்
என் சுயமின்றி கண்ணீர் வந்த
கதையெல்லாம் அந்த கேத்தி ரயில்
நிலையம் பார்த்திருக்கு,

இப்போ வர நான் சந்திக்குற மனுஷங்க,
நான் பார்க்குற விஷயம், என்னை
பாதிச்ச விஷயம், நான் ரசித்த
மனிதர்கள்,உயிர்களிடத்தில் காட்டும்
அன்பு,காதலும் அந்த காதல் சார்ந்த
ஊடலும் ஊடலுக்கு பிறகே ஆன பிரிவும்,
என நான் எத்தனையோ கிறுக்கல்களை
எழுதி இருக்கிறேன், கெளதம் மேனன்
ஸ்டைலில் எழுத முயற்சி செய்தாலும்
நான் எழுதும் எழுத்துக்களின் தாக்கம்
மட்டும் பாலு சாரிடம் இருந்து தான்
கற்றுக்கொண்டேன்,

கதையை வெளியில் தேடாதே
உனக்கு நடப்பதை எழுது
அது உன் கற்பனை அல்ல
உன் சொந்தக்கதை என்று
நீ நினைக்கலாம்
ஆனால் உன்னுடையது என்று
நீ கருதுவது உலகத்திற்கு
சொந்தமாவதை உணரும்பொழுது
நீ சந்தோஷப்படுவாய்

  • பாலு மஹேந்திரா

இது தான் நான் எழுதற
எனக்கு சொந்தமான எழுத்துக்களுக்கு
மூல மந்திரம்ன்னு சொல்லலாம்,

நான் எழுதுற குட்டி குட்டி பதிவுல
இருந்து சிறுகதை வரைக்கும் எல்லாமே
என்ன சுற்றி நடக்குற காட்சிகள்,எனக்கு
நடந்தவை போன்றவற்றை வைத்து தான்
என்னுடைய எழுத்துக்கள் மூலம் ஒரு
காட்சிக்கு உயிர் கொடுத்துக்கொண்டு
இருக்கிறேன்னு நம்புறேன் இப்போ
வரைக்கும்,அது படிக்குற நிறைய
பேருக்கு என்னோட எழுத்துக்கள்ல
அவங்க வாழ்க்கையோட இணைச்சுக்க
முடியுது, அப்போ தான் புரியுது நமக்கு
நடக்குற விசித்திரங்கள் நமக்கு மட்டும்
நடக்கலன்னு,

மல்லிகை பூ மனம் ஒரு பெண் மீது
ஏற்படும் போதை போன்ற அலாதிய
சுகம் தரும் அது போலத்தான் பாலு
மஹேந்திராவின் ஒரு ஃபிரேமும்,
அந்த ஃபிரேம்களை தினம் தினம்
பார்த்து பார்த்து என் தலைக்குள் போதை
ஏற்றுக்கொள்ளும் சுகம் ஒரு தனி ரகம்
தான்,

கருப்பு,வெள்ளை, மாநிறம்
இதெல்லாம் இங்க பொருட்டில்ல,
நம்ம கண்கள்ல தான் இருக்கு
ரசிக்குறதோட ஆழமும் அதோட
வாழ்வியல் அனுபவமும்,

” குருவே சரணம் “

HappyBirthdayIdhayamMurali

HappyBirthdayBaluMahendraSir : )