Penbugs
CinemaInspiring

From the Bottom of our Hearts

கதையை வெளியில் தேடாதே
உனக்குள் தேடு,

  • இயக்குநர் பாலு மஹேந்திரா

ஒரு படத்திற்கோ அல்லது
ஒரு சிறுகதைக்கோ ஒரு கதையை
நான் தேர்ந்தெடுத்து எழுதும் போது
எனக்கு நடந்த கதைக்கு தான்
முதலாக என் கவனம் செல்லும்,

ஏனெனில் ஒருவனின் வாழ்க்கை
என்னும் ஆழிப்பெருங்கடலில்
வலை வீசி மீன் சிக்குமா என பார்த்தால்
பல வகையான மீன்கள் சிக்கும்
மீனவனின் வலைக்குள்,

சில மீன்கள் விலை மதிக்க முடியாத
அளவு உயர் ரகத்தில் இருக்கும்,
பல மீன்கள் தவிர்க்க முடியாத
சேதாரமாக வலைக்குள் வந்து
சிக்கியிருக்கும்,இன்னும் சில
மீன்கள் இருக்கும் அது தான்
ஒருவனின் தேடல்,வலி,பிரிவு
போன்றவற்றை எல்லாம் உள்ளடக்கிய
மீன்,அது தான் நமக்கு கதை எழுத உதவும்,

பாலு மஹேந்திராவை ரசிக்கும்
ஒரு ரசிகன் நான்,நானே அவருடைய
கருத்துக்கு ஒரு மீன் இனத்தை வைத்து
ஒருவனின் வாழ்க்கையை
எடுத்துக்காட்டாக சொல்லும் போது
நான்கு வருடம் அவருடன் பணியாற்றி
அவர் கைகளில் தவழ்ந்து அவருடைய
எல்லாமுமாய் உடன் இருந்த ஒருவர்
எந்த அளவு முறையான எடுத்துக்காட்டை
சொல்லி நாம் வாசிப்பதற்காக எத்தனை பாடல்களையும் கதைகளையும்
சினிமாவில் எழுதியிருப்பார்,

எழுத்தாளர் கார்த்திக் நேத்தா
ஒரு நேர்காணலில் கூறியிருப்பார்,

உள்நோக்கி வாழுறவங்க தான்
கவிதை எழுத முடியும்,கவிதை
படிக்குறதுக்கு கண்ணு இருந்தா போதும்
ஆனா எழுதுறதுக்கு உள்நோக்கி
போகணும்ன்னு சொல்லியிருப்பார்,

உள்நோக்கி வாழுறவங்க
வாழ்க்கையில வலியும் வேதனையும்
அதிகமா இருந்தாலும் வைரமுத்து
சொல்லுற மாதிரி சின்ன சின்ன அன்பில்
தானே ஜீவன் இன்னும் இருக்குன்ற மாதிரி
அழகான குறுஞ்செயல்கள் அவங்ககிட்ட கொட்டிக்கிடக்கும்,

இப்படி பல எடுத்துக்காட்டுகள் சொல்லலாம்,பல ஆராய்ச்சி கதைகளும் எழுதலாம் அவருக்காக,

அவர் தான் நா.முத்துக்குமார்,

இன்று நான் எழுதுகிறேன்
என் எழுத்துக்கான காரணியாய்
நான் பார்ப்பது அவர் எழுத்துக்கள் மட்டுமே,

தமிழுக்கு “ழ” அழகு என்று
சொல்லுவது போல் என் எழுத்துக்களில்
நான் பயன்படுத்தும் முத்துக்குமாருக்கான
“மு” என்றும் கொள்ளை அழகு,

ஆகச்சிறந்த சோம்பேறியான
எனக்கு வாசிப்பு பழக்கத்திற்கான
விதை போட்டதும் இந்த மனுஷன் தான்,

ஆம்,என் திருமணத்தில் நிறைய பரிசுகள்
எனக்கு வந்தது,அதில் நான் சிறந்ததாக
கருதுவது நான் இமை போல் பாதுகாப்பது
என்றால் Senthil Kumar Msk – அவர்கள் பரிசாக
கொடுத்த “வேடிக்கை பார்ப்பவன்” புத்தகம்
தான்,

முத்துக்குமார் எழுதிய
வேடிக்கை பார்ப்பவன் புத்தகத்தில்
தான் என்னுடைய முதல் புத்தக வாசிப்பு
பயணம் சுபமாக தொடங்கியது,

முத்துக்குமாரின் வாழ்க்கை
பயணம்,அவருடைய தமிழ்,அவருடைய
மனைவி மற்றும் மகன்,அவர் வாழ்வில்
சந்தித்த மனிதர்கள் இப்படி பல விதமான
எழுத்து நடையில் வேடிக்கை பார்ப்பவன்
புத்தகம் என்னை அதற்கு பிறகு பல
புத்தகங்கள் மீது வேடிக்கை பார்க்க
வைத்தது,

ஒருவன் வேடிக்கை பார்க்கிறான்
என்று சுலபமாக சொல்கிறோம்,
அந்த வேடிக்கையில் அவன்
தேடல் தான் என்ன,அவன் சார்ந்த
எதிர்பார்ப்பு என்ன,அவன் பார்க்கும்
வேடிக்கை பார்வை எதன் மீது
மாயவிசையாய் ஈர்க்கிறது, என
என்னுள் பல கேள்விகள்..?

பலன்,இப்போது 25 முதல் 30
புத்தகங்கள் வரை என்னுடைய
அலமாரியை முத்துக்குமார் அவர்கள்
வாசிப்பின் மூலம் நிறைத்து வைத்து
விட்டார்,

புதுசா புத்தகம் வாசிக்க ஆரம்பிக்குற ஒருத்தருக்கு நான் பரிந்துரை செய்யுறது “வேடிக்கை பார்ப்பவன்” தான்,

வேடிக்கை பார்பவனில் வரும்
எல்லா கதைகளும் எனக்கு பிடிக்குமெனில்
” பள்ளித் தலமனைத்தும் ” என்ற தலைப்பில்
வரும் ஒரு பகுதி என்னை ஒரு மீளா
வட்டத்திற்குள் அந்த எழுத்துக்களுடன்
மட்டுமே மீண்டும் மீண்டும் சுற்ற வைக்கிறது,

அண்ணே!
ஒரு சேமியா ஐஸ் குடுங்கண்ணே
என்று கூறி நூறு ரூபாயை நீட்டினான்,

அதெல்லாம் இப்ப
யாரு தம்பி கேக்கிறாங்க..?
மேங்கோ ஆரஞ்சு ரெண்டுதான் இருக்கு
உனக்கு என்ன வேணும் என்றார்,

ஒரு மேங்கோ குடுங்கண்ணே
என்று கூறி நூறு ரூபாயை நீட்டினேன்,

கொடுத்த ரூபாயை திருப்பித் தந்துவிட்டு
சினிமாவுல பாட்டெல்லாம் எழுதறனு
சொல்ற அண்ணன மறக்காம வந்து ஐஸ்
கேட்ட பாரு,

அது ஒண்ணே போதும் தம்பி
காசு பணமெல்லாம் வேணாம்
என்று சொல்லிவிட்டு தன் முன்
இருந்த ஐஸ் பெட்டிக்குள் குனிந்தார்
அதில் காலம் கட்டிக் கட்டியாக
உறைந்து கிடந்தது,

இதான் சார் முத்துக்குமார்,
எவ்வளவு பேரன்பு பாருங்க
யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளாத
சின்ன சின்ன விஷயங்கள்ல கூட நிறைய
பேரன்பு கொட்டிக்கிடக்குன்னு மனுஷன்
எழுதி வச்சுட்டு போயிட்டாரு,

பாடல் வரிகளில் கூட அவர் இடத்தை
நிரப்ப இன்றும் யாராலும் முடியவில்லை,

கதை பேசிக்கொண்டு
வா காற்றோடு போவோம்
உரையாடல் தீர்ந்தாலும்
உன் மௌனங்கள் போதும்,

யார் அவன்
என் மனம் நினைப்பதை
பாட்டில் சொன்னான்,

பாதை முடிந்த பிறகும்
இந்த உலகில் பயணம் முடிவதில்லையே,

இன்னும் நான் எத்தனை பாடல் வரிகளை
இங்கு உங்களுக்காக சுட்டிக்காமிக்க..?

அப்படி எத்தனை பாடல்களின்
வரிகளை தனித்தனியாக நான்
சுட்டிக்காமித்தாலும் ஒவ்வொரு
பாடலின் வரியிலும் முத்துக்குமாரின்
ஜீவன் அவர் எழுத்துக்கள் மூலம்
நம் செவிகளில் நிச்சயமாக ஊசலாடும்,

அவர் இழப்பு தவிர்க்க முடியாது
என்றாலும் இன்றும் முத்துக்குமார்
நம்முடன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் ஒரு தகப்பனாக,
அண்ணனாக,நண்பனாக,
பேரன்புக்காரனாக,உயிர் காப்பானாக,


கடலில் மட்டுமே கிடைக்கும்
அரிய வகை முத்து நீ,

எங்கள் கைகளில்
நாங்கள் அள்ளி வந்தோம்
அக்கடலில் இருந்து,

ஒரு நல்ல தகப்பனாக
பல வழிகளில் கை பிடித்து கூட்டிச்சென்று
எங்களுக்கு நல் வழிகளை காட்டினாய்,

வாழ்க்கையின் அவசியத்தையும்
அதில் உள்ள பேரன்பையும்
ஆசிரியர் ஸ்தானத்தில் இருந்து மாணவர்களாகிய எங்களுக்கு கற்றுத்தந்தாய்,

தாய் மொழியாம் தமிழ் மொழியின்
செய்யுளையும் இலக்கணத்தையும்
எழுத்து வடிவில் தமிழ் ஐயா ரூபத்தில்
பிரம்பு கம்பில் அடிக்காமல் எங்களுக்கு
தமிழ் மீதுள்ள ஆர்வத்தை தூண்டினாய்,

போதும்!
கரையில் வாழ்ந்தது சலித்து விட்டது
என மீண்டும் கடலுக்குள் சென்று விட்டாய்,

கரையில் காத்திருக்கிறோம்
நீ வருவாய் என்று இல்லை
நீ வராவிட்டாலும் உன்னை சரணடைய,


காயங்களை கட்டிக்கொண்டு
உன்னிடம் வந்து விட்டேன்
என் பாவம் யாவும் தூயவனே
எங்கோ மறந்து விட்டேன்,

லவ் யூ அப்பா : )

HappyBirthdayNaMuthukumarAppa!

Related posts

பேரன்புக்காரனின் தினம்!

Shiva Chelliah

என் பேரன்புடைய அப்பாவுக்கு!

Shiva Chelliah

ஆனந்தயாழ் | முத்துகுமார் | Na. Muthukumar

Kesavan Madumathy

He is an engineer, a lyricist and a short film maker

Penbugs

Leave a Comment