Penbugs
Cinema Inspiring

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வைகை புயல் வடிவேலு!

தமிழக அரசியல் காரணக் காரியங்களுக்காக சினிமாவில் புறந்தளப்பட்டு இருந்தாலும் , தமிழர் சார்ந்த சமூக வலைதளங்களில் இவர் முகம் பார்க்காமல் நாள் முடிவுராமல் இருந்ததில்லை.

“நேசமணி” கதாபாத்திரம் உலகம் முழுதும் ட்ரெண்ட், தான் சொல்லவந்ததை சொல்ல எல்லா மீம் கிரியேட்டர்களும் மாட்டிக்கொள்ளும் முகம் “வடிவேலு” தான்.

நான் சொல்றது மிகைப்படுத்தி பேசுற மாதிரி இருந்தாலும், நடிகர் சிவாஜிக்கு பிறகு original actor னா.. அது வடிவேலு தான்“என்று வெற்றிமாறன் ஒரு பேட்டியில் சொல்லி இருப்பார். அது எந்த அளவுக்கு உண்மை என்றால் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், “தேவர்மகன்” படத்தில் வரும் “இசக்கி” நம்மை பரிதாபத்திற்கும், “எம்மகன்” படத்தில் வரும் சித்தப்பா கதாபாத்திரம், “கிழக்கு சீமையிலே” படத்தில் வரும் ஒச்சு கதாபாத்திரம் என நம்மை பல இடங்களில் அழ வைக்கவும் செய்யும்.

கிட்டத்தட்ட கதாபாத்திரத்தின் எல்லா உணர்ச்சிகளையும் ரசிகர்களிடத்தில் கடத்த கூடிய ஆற்றல் உடையவராகவே வடிவேலு இருக்கிறார்.

“ஒரு சர்க்கஸ் காரனை கூட்டிட்டு வந்து நடிக்க சொன்னா, என்ன பண்ணுவாரோ அப்படியான நடிப்பு சந்திர பாபு அவர்கள் உடைய நடிப்பு”
என்று நடிகர் குருசோமசுந்தரம் குறிப்பிட்டு இருப்பார். அந்த கூற்று அப்படியே வடிவேலுவுக்கும் பொருந்தும்.

“காதலன்” படத்தில் வரும் பைக் ஓட்டும் காட்சியாகட்டும், “இம்சை அரசன்” படத்தில் வரும் சில சாகச காட்சிகள் என பல படங்களில் நடிகனான சர்க்கஸ் காரராகவே தெரிவார்.

வெள்ளந்தி தனம் கலந்து மேற்கத்திய உடல்மொழி கலந்து பேசும் ஆங்கிலமும் சரி, மதுரை தமிழிலும் மனுசன் அனாயசமாக நடித்து விடுவார்.

“சிங்காரவேலன்”, “மனதை திருடிவிட்டாய்” போன்ற படங்களில் வடிவேலு அவர்களுடைய கதாபாத்திரமும், நடிப்பும் உதாரணம்.

S.P.ஜனநாதன் இயக்கத்தில் வந்த “பேராண்மை” படத்தில் வடிவேலு சொன்னால் அது பல கோடி மக்களுக்கு சென்றடையும் என நம்பி சொல்ல வைத்த வசனங்கள்,

“ஏன், எங்க கூட்டத்திலிருந்து ஒருத்தன் படிச்சு மேல வர கூடாதா,
கடைசி வரை கக்கூஸ் தான் கழுவனுமா??”

“இனிமேலாச்சும் மத்தவனுக்கு கொடுக்கிறது விட்டுட்டு, நம்ம புள்ளைங்களுக்கு குடுத்து படிக்க வைங்கடா”

ஓர் குறிப்பிட்ட குழுவால் மட்டுமே கையாளப்பட்ட/அடையாளப்படுத்த பட்ட தமிழ் நகைச்சுவை காட்சிகளை தன்னை அறியாமலே அடுத்த தளத்திற்கு கொண்டு சென்ற புரட்சியாளன்.

தமிழக திரை வரலாற்றில் “ராகதேவன்” இசையில் என்று போஸ்டர் ஒட்டப்பட்டு வணிக ரீதியில் விற்கப்பட்ட படங்களை போலவே, “வைகை புயல்” வடிவேலு நடிக்கும் என்று அச்சிட்டு வெளியாக பெரும் வெற்றி படங்களும் ஏராளம். சந்திரமுகி படத்தின் கதையை சூப்பர்ஸ்டார் ரஜினிக்காந்திடம் சொல்லப்பட்டபோது,
“வடிவேலு கிட்ட கால்ஷீட் வாங்கிடுங்க” னு சொன்னதாக பி.வாசு ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருப்பார். இந்த ஒரு நிகழ்வு போதும் வடிவேலுவின் திறனை சொல்ல.

கலைஞன் இருந்தாலும் இல்லாமல் போனால், அவன் செய்த கலை நிலைத்து நிற்கும் என்று சொல்லுவார்கள். அது வடிவேலுவிற்கு அப்படியே நடந்தது. வெவ்வேறு அரசியல் சார்ந்த காரணங்களுக்காக தமிழ் சினிமா அவரை புறக்கணித்து கொண்டு இருக்கிறது. ஆனால், அவர் நடித்த கதாபாத்திரங்களும், அவரின் வசனங்களும் தினமும் யாரோ ஒருவரால் பேசப்பட்டு தான் வருகிறது. காலமும், கலையும் விரைவில் அந்த கலைஞனை அரவணைத்து கொண்டாடும் என நம்புவோமாக.

அவரின் அடுத்த சினிமா நகர்வை பற்றி அவரே ஸ்டைலாக கூறியதுதான் நினைவுக்கு வருகிறது,

“Netflix ல வர போறேன் இப்போ, வந்து netflix ல அடிச்சு, வேல்டு லெவல் ல வரேன் பாருங்க” .

இதுவரை சமூகவலைத்தளங்களில் கொண்டாடப்பட்டு வரும் வடிவேலு, இனிவரும் காலங்களில் அவரை ஓரங்கட்டிய சினிமாவிலும் தான் ஏற்காத, முயற்சிக்காத பல கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க வேண்டும் அதுபோல அவரை, அவரின் நடிப்பை மக்கள் இன்னமும் கொண்டாட வேண்டும்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வைகை புயல் வடிவேலு 🙏

Related posts

Leave a Comment