Penbugs
CinemaEditorial News

காலத்தை வென்ற கவியரசர் கண்ணதாசன் ..!

நான் நிரந்தரமானவன்-என்றும் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கொரு மரணமில்லை….!

அவரின் வரிகள் அவருக்கே பொருந்தும் அதுதான் கவியரசர் கண்ணதாசன் …!

வெறும் 53 வயது வரைதான் வாழ்ந்த மனிதன் ஆனாலும் அவர் இறந்து முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அவரின்றி கடந்த நாட்கள் மிக குறைவு ,.தமிழ் சமூகத்திற்கு அவர் தந்த பாடல்களும் சரி , புத்தகங்களும் சரி ,தனிக்கவிதை தொகுப்புகளும் சரி ஒவ்வொன்றும் தமிழ்த்தாயின் மகுடத்தில் பொதிந்துள்ள ரத்தின கற்கள்….!

கண்ணதாசனின் பாடல் வரிகளை என்றும் எழுத மாட்டார் , பிறகு வாருங்கள் எனவும் கூற மாட்டார் கதையின் சிச்சுவேசனை சொன்ன உடனே மணி மணியாக முத்துக்கள் சிதறுவதை போல் வார்த்தைகள் விழ அதை பெற்றுகொள்ள வேண்டும் அந்த வேகம் இதுவரை எந்த கவிஞர்களிடமும் காணாத வேகம் தமிழ்த்தாயின் முழு அருளினை பெற்று தமிழ்த்தாயின் மகனாக இருந்தவர் கவியரசர் ….!

ஒவ்வொருவர் வாழ்விலும் பல்வேறு கட்டங்களில் எதிர்கொள்ளும் துன்பங்களை கடக்க அவர் எழுத்துக்கள் ஒன்றே போதுமானது, அதற்கு அவர் சொல்லும் விளக்கம்

“எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான். அதனால் இப்படித்தான் வாழ வேண்டும் என்று அறிவுரை சொல்லும் தகுதி எனக்கு இருக்கிறது “

சுய எள்ளல்தான் என்றாலும் ஒருபோதும் தன்னை பற்றிய உண்மைகளை மறைத்தது இல்லை .

இங்கு நான் வியந்த சில கண்ணதாசனின் வரிகளை குறிப்பிடுகிறேன் .

நாம் வாழும் வாழ்க்கையே ஒரு நாடக மேடை என்பதை சிம்லா படத்தில்

“கால் கொண்டு ஆடும் பிள்ளை
நூல் கொண்டு ஆடும் பொம்மை
உன் கையில் அந்த நூலா
நீ சொல்லு நந்தலாலா”.

ஆபூர்வ ராகங்கள் ஷூட்டிங் ஸ்பாட் பாடல் எழுத வந்த கவிஞர் கண்ணயர்ந்து விட கேபி கோபமாக பெரிய கவிஞர்தான் அதுக்காக இப்படியா , இவருக்காக சூட்டிங் தள்ளி வைக்க முடியுமா எதனா கேளுங்கயா அவரை என்று கத்த அரை தூக்கத்தில் இருந்த கண்ணதாசன் ஒரு மணி நேரத்தில் அந்த இடத்தை விட்டு சென்று விட்டாராம் . பாடல் மேலே உள்ளது என உதவியாளர் கூற கமலும் ,அனந்துவும் சென்று பார்க்க ஒரு பாடலுக்கு எட்டு பக்கத்திற்கு கவிதை மழையை தூவி இருந்தாராம் கவியரசர் ..! அதில் மிகவும் நல்ல நல்ல வரிகளை பொறுக்கி எடுத்த பாட்டுதான் ” ஏழு ஸ்வரங்களுக்கு எத்தனை பாடல் “

“ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை – இதில்
அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் – அதில்
பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்”

என்ற வரிகளை மெய்சிலிர்க்க எழுதியவர் கண்ணதாசன் ….!

உலக வாழ்க்கை நிலையில்லை என்பதை உலக அறிஞர் பெருமக்கள் பலரும் சொல்லி இருக்கின்றனர்.நம்மூரில் வள்ளுவர் முதல் பட்டினத்தார் வரை பெரும்பாலும் சொல்வதும் அதுதான் .அதை நம் கவியரசரின் வழியாக “போனால் போகட்டும் போடா “பாடலில் கவனிக்கலாம்

” இரவல் தந்தவன் கேட்கின்றான் – அதை
இல்லையென்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது – இது
கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது – அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா “

பாமரனுக்கு புரிகின்ற வகையில் எளிதாக சொல்வதுதான் கவியரசர் கண்ணதாசன்…!

இந்த பாட்டின் தாக்கம் எத்தகையது என்றால் இந்த பாடலை கேட்டு மனம் கலங்கிய மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் அண்ணே இனிமே அவச்சொல் இருக்கிற பாட்டு வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாராம்.

அடுத்த பாடல் இன்றுவரை நடக்கும் ஆத்திகம் நாத்திகம் சண்டைக்கு ஏனெனில் அவர் ஆத்திகராகவும் இருந்துள்ளார் ,நாத்திகராகவும் இருந்துள்ளார்

“தெய்வம் என்றால் அது தெய்வம் – அது
சிலை என்றால் வெறும் சிலை தான்”

அனைத்துமே நாம் பார்க்கும் கண்ணோட்டத்தில்தான் இருக்கிறது என்று பொருள்படும் வைர வரிகள் …!

அடுத்த பாடல் “கவலை இல்லாத மனிதன் “எனும் படத்தில்

“அன்னையின் கையில் ஆடுவதின்பம்
கன்னியின் கையில் சாய்வதுமின்பம்
தன்னையறிந்தால் உண்மையில் இன்பம்
தன்னலம் மறந்தால் பெரும் பேரின்பம்”

நான்கே வரிகளில் மனித வாழ்வின் சாராம்சங்களை பாமர மக்களுக்கு எது இன்பம் ,எது பேரின்பம் என விளக்கி இருக்கிறார் கண்ணதாசன்….!

அடுத்த பாடல் ” மருதமலை மாமுனியே “
இசையமைப்பாளர் குன்னக்குடி வைத்தியநாதன் இந்த பாடலின்
முடிவில் வேண்டுமென்றே வயலினில் சம்பந்தம் இல்லாமல் நிச நிச நிச நிச என்று மிகக்கடினமாகவும் வேகமாகவும் வாசித்துவிட்டு கவிஞரை சீண்டும் விதமாக இதற்கு எழுதுங்கள் என்று பார்த்தாராம் நொடிப்பொழுதில் கவிஞரின் வாயிலிருந்து

“பனியது மழையது நதியது கடலது
சகலமும் உனதொரு கருணையில் எழுவது
வருவாய் குகனே வேலய்யா “

என்ற வரிகளை சொன்னவுடன் குன்னக்குடி வைத்தியநாதன் நெகிழ்ந்து கண்ணதாசன் அவர்களை கை எடுத்து கும்பிட்டாராம் ‌…!

கண்ணதாசன் பாடல்களை சொல்லிகொண்டே போனால் இந்ல கட்டுரை முடியாது ராஜா – கண்ணதாசனின் காம்போவில் வந்த மூன்றாம் பிறை பாடல்களை குறிப்பிட்டே ஆக வேண்டும் கவிஞரின் கடைசி பாடல் இடம்பெற்ற படம் என்பதாலும் மேலும் அதன் வரிகள் கொண்ட தாக்கமும் அதிகம் ‌‌ .

” பூங்காற்று புதிரானது ” பாடலில்

நதியெங்கு செல்லும்
கடல் தன்னைத்தேடி
பொன்வண்டோடும் மலர் தேடி
என் வாழ்வில் நீ வந்தது விதியானால்
நீ எந்தன் உயிரன்றோ “

ஒட்டுமொத்த கதையையும் நாலு வரிகளில் முடித்து இருப்பார் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் …!

இதை விட ஒருபடி மேலே சென்று கண்ணே கலைமானே பாடலில்

“ஊமை என்றால் ஒருவகை அமைதி
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி “

இதுதான் இந்த சமூக நிலை ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பதை தன்னுடைய பாணியில் அழகாக சொல்லி இருப்பார் கவிஞர் …!

அடுத்த அதே பாடலில்

“ஏனோ தெய்வம் சதி செய்தது
பேதை போல விதி செய்தது”

பேதைனா என்றவுடன் பெண்ணை குறிக்கிறார் நினைப்போம் ஆனால் பேதையின் உட்பொருள் அது
பெண்ணின் ஏழு பருவங்களில் ஒன்று

பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்…!

பேதை – ஐந்து முதல் ஏழு வயது ..!

படத்தின் நாயகி மனதளவில் குழந்தையா இருப்பதை குறிக்கவே அந்த வார்த்தையை போட்டார் கவியரசர் …!

சக போட்டியாளர் என கருதப்பட்ட வாலியே மீண்டும் பாடல் எழுத திரும்ப காரணம் கண்ணதாசனின் “மயக்கமா கலக்கமா ” பாடலின் வரிதான் .வாலி கண்ணதாசனிடமே யோவ் உன் கடைக்கு எதிர்கடை நான் போட காரணமே உன் பாட்டுதான்யா என்று சொன்னாராம் .

அந்த வரிகள்

“உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்து பார்த்து நிம்மதி நாடு”

பாடல்களில் தன்னுடைய நிலையை உணர்த்துவது கவிஞரின் வழக்கம் .

அண்ணா நோய்வாய்ப்பட்டு இருந்தபோது அவரை காண இயலாத சூழலில் அவர் போட்ட வரிதான்

” நலந்தானா நல்ந்தானா உடலும் உள்ளமும் நலந்தானா “

பிறிதொரு காலத்தில் காமராஜரிடம் பேச இயலாத போது அவர் போட்ட வரி

“அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி
என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி
வேலன் இல்லாமல் தோகை ஏதடி “

காமராஜரின் அம்மா பெயர் சிவகாமி இரண்டாம் கட்ட தலைவர்கள் அவரை சந்திக்க விடாமல் செய்கிறார்கள் என்பதை பாடல் மூலமாகவே செய்தி அனுப்பினார் கவிஞர் …!

திரை இசை பாடல்கள் மட்டுமில்லாமல் கண்ணதாசனின் புத்தகங்களும் மதிப்பு வாய்ந்த ஒன்று அதிலும் அர்த்தமுள்ள இந்துமதம் புத்தகம் அதிகம் இன்றும் விற்பனையாகும் புத்தகமாக உள்ளது…!

ஒரு படத்தின் பாடல் பதிவு கண்ணதாசனும் ,டைரக்டர் , இசையமைப்பாளர் ஆகியோர் அமர்ந்து பாடலை உருவாக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டியூனுக்கு ஏற்ற வரிகளை கண்ணதாசன் கூற டைரக்டருக்கும் , இசையமைப்பாளருக்கும் பரம திருப்தி அந்த நேரத்தில் அந்த அலுவலகத்தில் உதவியாளராக இருக்கும் ஒரு நபர் அறையின் உள்ளே வந்தார் அப்போது அவரிடம் கண்ணதாசன் பாடல் வரிகளை கூறி பிடித்துள்ளதா என்று கேட்க அவர் ஐயா புரிந்துகொள்ள கடினமாய் இருப்பதாக தெரிவித்தார் . உடனே கவிஞர் பாடல் வரிகளை முழுவதும் மாற்ற போவதாக தெரிவிக்க டைரக்டர் இல்லை இது நன்றாக உள்ளது அவருக்கு புரியவில்லை என்றால் என்ன என கோபித்து கொள்ள அதற்கு கவிஞர் எனது பாடல் முழுக்க முழுக்க பாமர அடித்தட்டு மக்களுக்கானது அவர்களை போய் சேரும் வகையில்தான் பாட்டினை எழுதுவேன் என்று கூறி எழுதிய பாடல்தான்

” கேட்டதை கொடுப்பவனே கிருஷ்ணா ” எனும் பாடல் …!

சுபவீ அவர்கள் கண்ணதாசனை பற்றி ஒரு அரங்கத்தில் பேசியது

” கவிஞரின் மனம் நிலையானது அல்ல ஆனால் கவிஞரின் தமிழ் என்றும் நிலையானது ” அவரை எதிர்ப்பவர்கள் கூட அவரின் தமிழ் புலமையை எதிர்க்க இயலாது எதிர்த்தால் அது தமிழின் மீதான தாக்குதலே அன்றி வேறில்லை “

கவிஞரின் தனிக்கவிதை தொகுப்புகளும் மிகவும் அழகானவை நான் மிகவும் ரசித்த ஒரு கவிதை அதையே இந்த கட்டுரைக்கு முடிவுரையாகவும்

“பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
‘அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்’ எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
‘அனுபவம் என்பதே நான்தான்’ என்றான்…!

கவிஞரின் பிறந்தநாள் இன்று …!

Related posts

பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை

Penbugs

அபூர்வ ராகம் | பத்ம விபூசண் ஜேசுதாஸ்..!

Kesavan Madumathy