Penbugs
Cinema

கசடதபற – சினிமா விமர்சனம்

கொரோனா தொற்று காரணமாக ஓடிடி தளங்களில் தமிழ்ப்படங்கள் அதிகமாக வெளி‌வந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று சிம்புதேவன் இயக்கியிருக்கும் கசடதபற படம் சோனி ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

படக்குழு ஏற்கனவே சொன்னதை போல பல தனித்தனி குறும்படம் போல் காட்சியளித்தாலும், ஒரு முழு நீளத் திரைப்படத்தை காண்பது போல்தான் உள்ளது.

நடிகர்கள் குழுவில் சந்தீப் கிஷன், ஹரீஷ் கல்யாண், சாந்தனு, ரெஜினா கஸண்ட்ரா, ப்ரியா பவானிசங்கர், விஜயலட்சுமி, ப்ரேம்ஜி, வெங்கட் பிரபு, யூகி சேது

இசைமைப்பாளர்கள் குழுவில் யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், கிப்ரான், ப்ரேம்ஜி, சாம் சிஎஸ், ஷான் ரோல்டன்.

ஒளிப்பதிவாளர்கள் குழுவில் எம்.எஸ். பிரபு, விஜய் மில்டன், பாலசுப்ரமணியெம், ஆர்.டி. ராஜசேகர், சக்தி சரவணன், எஸ்.ஆர். கதிர்

என ஒரு தமிழ் சினிமாவின் பெரிய நட்சத்திர பட்டாளத்தோடு படத்தை எழுதி இயக்கியுள்ளார் சிம்புதேவன்.

மொத்தம் ஆறு கதைகள் அந்த ஆறு கதைகளும் ஒரு புள்ளியில் இணைக்க இயக்குனர் திரைக்கதையை நகர்த்தியுள்ளார்.

ஆறு கதைகளில் மிகவும் ரசிக்க வைத்த கதை பிரேம்ஜி அமரின் கதைதான்.
பிரேம்ஜி க்கு நடிக்க தெரியாது என்ற விமர்சனங்களை மாற்றி தன்னை யாரும் நடிகராக பயன்படுத்தி கொள்ளவில்லை என்று தன்னை நிரூபித்து இருக்கிறார்.

சிம்புதேவனின் அறை‌எண் 305 ல் கடவுள் நினைவுக்கு வந்தாலும் தனது வசனங்களாலும் அதனை பிரேம்ஜி சொல்லும் விதத்திலும் படம் ரசிக்க வைக்கிறது ‌.

நிலா செம அழகுல என்று சொல்லி அங்கு இயக்குனர் வைத்த சஸ்பெண்ஸ் ரசிக்க வைத்தது ‌.

அதற்கு அடுத்து ஹரிஷ் கல்யாண் நடித்த கதையும் சுவாரசியமாக உள்ளது.சாக்லேட் பாய் இமேஜை தாண்டி தன்னால் நடிக்க முடியும் என்பதை ஹரிஷ் கல்யாண் உணர்த்தி உள்ளார்.

சந்திப் கிஷண் நடித்த போலிஸ் கதையும் ஒரு அளவிற்கு அங்கு அங்கு சுவாரசியத்தை தருகிறது.

மற்ற கதைகளில் அந்த அளவிற்கு கதையின் அழுத்தம் இல்லாதது தொய்வை ஏற்படுத்துகிறது.

அனைத்து கதைகளும் ஒரு புள்ளியில் இணைக்கும் பகுதியை‌ இன்னும் சிறப்பாக எழுதி இருக்கலாம்.

ஆறு கதைகளின் பாத்திரங்கள் ஒவ்வொன்றின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களும் அது எவ்வாறு மற்றொரு பாத்திரத்தின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதுதான் முழு திரைப்படமாக விரிவடைகிறது.

படத்தின் மிகப்பெரிய பலம் சிம்புதேவனின் முத்திரையான வசனங்கள்

தனது முந்தைய படங்களிலும் அங்கு அங்கு தனது வசனங்கள் மூலம் அட போட வைத்து இருக்கும் சிம்புதேவன் இந்த படத்திலும் பல இடங்களில் தனது வசனங்களால் புருவங்களை உயர்த்த வைத்து உள்ளார்.

  • அரசியல்வாதியா இருந்தா துண்டை சேர்ல போட்டு இருப்ப நீ ஆர்டினரி மனுசன்தான துண்டு கட்டில்ல தான் இருக்கு
  • என்னையும் ( கடவுளையும்) பொண்ணையும் நீ லாஜிக் வச்சி பாக்க முடியாது அது ஒரு மேஜிக்‌.
  • எல்லாம் சென்ட்ரல் பண்ற வேலையாத்தான் இருக்கும்.‌நான் சொன்ன சென்ட்ரல் வேறங்க
  • இந்த மாதிரி பர்சலனா விஷயத்திற்கு பண்ணவேதான் நாட்ல வெதர் ரிபோரட்லாம் தப்பு தப்பா இருக்கு.
  • பணம் வந்தா தப்பு இல்லை வர்லனா கவலைப்படவும் தேவையில்ல
  • எந்த ஒரு பறவையும் , மிருகமும் தனது எதிர்காலத்தை தேடி வாழ்க்கையை தொலைக்கிறது இல்லையே
  • ஏமாத்தறது ஒரு கலை சும்மா கிடைப்பாளா சுகுமாரி
  • தப்பு பன்னாம ஒருத்தன் மாட்டியிருக்கான்னா மாட்டிக்காம ஒருத்தன் தப்பு பன்னியிருக்கான்னு அர்த்தம்

என சிம்புதேவனின் தனது களமான வசனத்தில் சிக்ஸர்களாக அடித்து உள்ளார்.

வசனங்களில் நேர்த்தியை தந்த சிம்புதேவன் மற்ற கதைகளின் திரைக்கதையிலும் கவனம் செலுத்தி இருந்தால் ஆகச் சிறந்த படைப்பாக இருந்து இருக்கும்.

ஒட்டு மொத்தமாக அங்கு அங்கு சின்ன சின்ன சர்ப்ரைஸ் , நல்ல வசனங்கள் ,நல்ல நடிகர்கள் தேர்வு என ஒரு நல்ல கலவையை சிம்புதேவன் தந்துள்ளார்.

Leave a Comment