மகேந்திரன்..!

முள்ளும் மலரும்..!
பூட்டாத பூட்டுக்கள் ..!
உதிரிப்பூக்கள் ..!
நெஞ்சத்தை கிள்ளாதே …!

ஒரு கலைஞனின் பார்வை எவ்வாறு இருக்கும் என்று அவனின் படைப்புகளின் தலைப்புகளே கதை சொல்லும் அழகியலில்தான். ஆம் இவர் சாதாரண படைப்புகளுக்கு சொந்தக்காரர் இல்லை தமிழ் சினிமாவின் உயரத்தை #கை கொடுக்கும் கை”யாக இருந்து தூக்கி விட்டவர் .தமிழ் சினிமாவில் தனது “சாசனத்தை” ஆணித்தரமாக பதித்து விட்டு சென்றவர் .

இவர் பார் போற்றப்படுபவராக இருப்பார் எனத் தெரிந்துதான் என்னவோ அலெக்சாண்டர் என பெயர் சூட்டப்பட்ட இவர் மகேந்திர பல்லவன் மற்றும் தனது கல்லுாரி விளையாட்டு வீரரின் மேல் ஏற்பட்ட ஈர்ப்பால் தனது பேரை மகேந்திரனாக்கி கொண்டார் . கல்லுாரி விழாவில் பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் முன்னால் அவரின் மேடைப் பேச்சுதான் அவரின் வாழ்வின் மிகப்பெரிய திருப்புமுனை …!

அன்று அவர் எம்ஜீஆர் முன்னால் பேசிய பேச்சு :

அதுவரை வந்த சினிமாக்கள் தன் யதார்த்தத்தை மீறிவிட்டது என்பதே , அந்த பேச்சே எம்ஜீஆர் இவருக்கு பொன்னியின் செல்வனுக்கு திரைக்கதை அமைக்க சொல்லும் அளவிற்கு கொண்டு சென்றது‌‌..!

முதலில் கதை ஆசிரியாராக  தனது பணியை தொடங்கின மகேந்திரன் எழுதிய முதல் கதை “நாம் மூவர் ” தலைப்பே ஆயிரம் கதைகள் சொல்லும் அதுதான் மகேந்திரன் ..!

மூன்று படங்களுக்கு பிறகு வழக்கமான பாணி திரைப்படங்களாக எழுதிக் கொண்டிருக்கிறோம் என்று எண்ணி தன் சொந்த ஊருக்கே ஓடிவிட்டார் ஆனால் கலைத்தாய் எப்பொழுதும் தனக்கானவர் களை தானே உரிமையோடு எடுத்து கொள்ளும் என்பதற்கு ஏற்ப மீண்டும் அவர் வந்து எழுதியது தான் “நிறைகுடம் ”

நிறைகுடம் இயக்கிய முக்தா சீனிவாசன் அவர்கள் மகேந்திரனிடம் படத்தை திரையிட்டு காட்டி உங்க கருத்து என்னவென்று கேட்க மகேந்திரனின் பதில்

“அடப்போங்க சார் நல்ல கதை கொடுத்தேன் கிளைமேக்ஸ்ல நாசம் பண்ணீட்டிங்களே என்பது ”

இந்த நேர்மையான விமர்சனம்தான் அவரை துக்ளக் பத்திரிகை வரை கொண்டு சென்றது…!

அடுத்த திருப்புமுனை :

மகேந்திரனின் எழுத்தில் உருவான “தங்கப்பதக்கம்” நாடகமாக அரங்கேற்றம் பண்ணப்பட்டு 42 வது  திரையிடலின் போது வந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இதனை திரைப்படமாக நடிக்க முன்வந்தார் தங்கப்பதக்கம் இன்று வரை நடிகர் திலகத்தின் ஆக சிறந்த நடிப்பாக இருப்பதின் காரணம் மகேந்திரன் எழுத்தும் கூட..!

தங்கப்பதக்க காட்சி :

மனைவி இறந்த காட்சிக்கு சிவாஜியும் , இயக்குனரும் நீண்ட வசனத்தை எழுதுமாறு சொன்ன பிறகும்  மகேந்திரன் எழுதியதோ

“நான் வந்து ரொம்ப நேரம் ஆச்சு எப்பவும் நான் லேட்டா வந்தாலும் நீ முழிச்சிட்டு இருப்ப இன்னிக்கு நான் சீக்கிரம் வந்துட்டேன் இன்னமும் தூங்கிட்டு இருக்கியே”

என்ற வசனம் யதார்த்தத்தை வெளிக் கொணர்ந்தது யதார்த்தத்தை தன்னால் முடிந்தவரை தன் எழுத்தில் வைத்தவர் மகேந்திரன்…!

பல வெற்றிப்படங்களுக்கு கதை எழுதிய பின் தன் எழுத்தின் மீதான கோபம் அவரை உந்தி தள்ளவே நாம் எழுதும் கதைகள் சாதாரண கதைகளாகவே இருக்கிறதே என்று எண்ணி இயக்குனர் மகேந்திரனாக அவதாரம் எடுத்தார்.

” மகேந்திரன் கூறியது கண்ணை மூடிக்கொண்டு அமர்ந்தால் கூட கணிக்க கூடிய படங்களை எடுத்து கொண்டிருந்தால் அடுத்த கட்டத்திற்கு நகரவே இயலாது என்பதே ”

அதன் பிறகு மகேந்திரன் எடுத்த படங்கள் எல்லாமே தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றன எழுத்து மட்டுமே திரைப்படம் அல்ல அதையும் தாண்டி சினிமா என்பது ஒரு “காட்சி ஊடகம் ” என்பதை தன் இறுதி மூச்சு வரை நம்பியவர் மகேந்திரன்.

மகேந்திரனின் கதை மாந்தர்கள் அசகாய சூரர்கள் இல்லை யதார்த்தவாதிகள் .முடி திருத்துபவர் , ஆப்ரேட்டர் என அன்றாட நம் வாழ்வில் காண்பவர்களே அவரின் நாயகர்கள். யதார்த்தம் என்பது பெயரில் இருந்து கதைக்களம் வரை கொண்டிருப்பதால்தான் பாமரனும் அவரின் விழி வழியே திரைப்படத்தை பார்த்தான்.

முள்ளும் மலரின் காளியின் தன்மானத்தை கொண்டவர்தான் மகேந்திரன் நேர்மையும் ,துணிவும் ஒருங்கே இருந்தால் காலத்தையும் தாண்டி நிற்கலாம் என்பது இவர் மூலம் நாம் கற்றுக் கொள்ள வேண்டி பாடம்…!

வாழ்க்கைக்கு மகேந்திரனின் வரிகள்தான் என்றென்றும் :

” இந்த உலகத்துல எதை எடுத்தாலும்  ஒண்ண விட ஒண்ணு பெட்டராகத்தான் இருக்கும் அதுக்கு ஒரு முடிவே இல்லை  அதுக்காக நம்ம முடிவை மாத்திட்டே இருக்க கூடாது  ஓகே ”

இவ்ளோதான் சார் வாழ்க்கை ❤️

தமிழ்சினிமாவின் நல்ல மீட்பர்  மகேந்திரனின் பிறந்தநாள் இன்று …!