ஆனந்தயாழ் | முத்துகுமார் | Na. Muthukumar

“கோயில் மூடினால் கூட கிளி கவலைப்படுவதே இல்லை அந்த வாசல் கோபுரம் மீது அதன் காதல் குறைவதே இல்லை “

முத்துகுமார் மரணித்து இருந்தாலும் அவரின் நினைவுகளும் , அவர் மீதான காதலும் குறைந்ததே இல்லை .

வெறும் பன்னிரண்டு ஆண்டுகள் மட்டுமே பாடலாசிரியாராக இருந்த முத்துகுமார் நம் தமிழ் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது .

ஒரு கலைஞன் எப்போது வெற்றி பெறுகிறான் என்றால் அவன் வாழும் காலத்தில் உள்ள இளைஞர்களை தன்பால் இழுக்கும்போதுதான்  அதனை கச்சிதமாக செய்தவர் முத்துகுமார்…!

கண்ணதாசன் , வாலி , வைரமுத்து வரிசையில் ஒரு நல்ல படைப்பாளியாக வருவது என்பது சாதரண காரியமில்லை அவர் கொண்ட தமிழ் அவரை அந்த அளவிற்கு உயர்த்தியது …!

காதல் கொண்டேன் பாடல் வரிகளை நண்பர் ஒருவரிடம் காண்பித்தபோது என்னயா தமிழ் ஆளுமையே இல்லை என குறைப்பட்டு கொண்டாராம் அதற்கு முத்துகுமார் கூறிய பதில் வெகுஜன மக்களின் தமிழாக இருக்கவே விரும்புகிறேன் நிச்சயம் இது மக்களை மகிழ்விக்கும் என நம்புகிறேன் என்பதே ….!

சங்க காலம் முதல் திரையிசை பாடல்கள் வரை பெண்பாலினை நிலவுக்கு நிகராகவும் (அ)அவளின் புற  அழகினையும் வைத்தே பெரும்பாலும் பாடப்பட்டன இதனை தவிடு பொடியாக்க முத்துகுமார் என்ற கவிஞன் எத்தனை பிரயத்தனம் பட்டுள்ளான் …!

பாடல் முழுவதும் இல்லை என சொல்லி இருந்தும் அவளை பிடிக்கின்றது என யதார்த்தமான உணர்வுகளை வெளிபடுத்தியதால்தான் குறுகிய காலமே இருந்தாலும் அனைவரின் நெஞ்சில் நீங்காமல் வாழ்கின்றான் ….!

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை
அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை
அவளைப் படித்தேன் முடிக்கவில்லை
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை
இருந்தும் கவனிக்க மறக்கவில்லை….!

காதல் – இவரின் பல பாடல்கள்தான் இன்றும் இளைஞர்களுக்கு காதலுக்கு ஒரு முகவரியாக உள்ளது …!

காதல் தோல்வியா நினைத்து நினைத்து பார்த்தால் , போகாதே ,முதல் முறை பார்த்த நியாபகம்..!

வாழ்க்கை பாடமா ஒருநாள் ஒரு வாழ்க்கை ..!

தந்தைக்காக தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் …!

மகளுக்காக ஆனந்த யாழை மீட்டுகிறாள் ..!

என அனைத்திற்குமான பாடல்களை தந்துள்ளார் முத்துகுமார் யுவனின் அரசவையில் கவி ராஜாங்கமே செய்தவர் தற்போது நம்மிடையே இல்லை என்பது வருத்தமே…!

திரையிசை பாடல்கள் தவிர தனி புத்தகங்களையும் பல எழுதியுள்ளார் முத்துகுமார் அதிலும் தன் யதார்த்தத்தை மீறாமல் சொல்லியதுதான் அவரின் வெற்றி ..!

சில ஹைக்கூக்கள் இங்கே :

வாழ்க்கை :

கடவுளிடம் சீட்டாடுவது கொஞ்சம் கடினமானது எவ்வளவு கவனமாக இருந்தாலும் பார்க்காமலே அறிந்து கொள்கிறார் …!

ஒரு  ஆணின் நாணத்திற்கு :

உள்ளாடைக் கடைகளில் அளவுகள் குறித்தான பணிப்பெண்ணிண் கேள்விக்கு தலைக் குனிகிற ஆணின் செயலுக்கு “வெட்கம்”என்று பெயர்…!

ஒருவனின் யதார்த்த மனநிலை :

அப்பாவின் சாயலில் உள்ள பெட்டிக் கடைக்காரரிடம் சிகரெட் வாங்கும்போதெல்லாம் விரல்கள் நடுங்குகின்றன…..!

முத்துகுமாரின் மரணத்திற்கும் அவரின் வரிகளையே மேற்கோளாக காட்ட வேண்டி உள்ளது .!

“தொடர்ந்து வந்த நிழல்கள் இங்கே தீயில் சேர்ந்து போகும்
திருட்டு போன தடயம் பார்த்தும் நம்பவில்லை நானும்
ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய் என்றே வாழ்கிறேன் நானும்”