நட்பின் கதைகள் – நட்பு 1

முன்னுரை

வணக்கம்! நட்பின் கதைகள் என்பது ஒவ்வொரு நண்பர்களுடனும் நான் நட்பான கதை தான்! சுய அனுபவங்களை வாராவாரம் ஒரு கதை வடிவத்தில் தொகுத்து வழங்க உள்ளேன். முதல் நபர் கண்ணோட்டத்திலேயே இதை எழுதலாம் என்றும் முடிவெடுத்துள்ளேன். இதன் முதல் பாகத்தில் ஒவ்வொரு நண்பரிடமும் நான் நட்பான கதைத் தொகுப்புகள் இருக்கும்! ஒவ்வொரு வாரத்திற்கும் தொடர்பு இருக்கும், இல்லாமலும் இருக்கும்! தனியாக ஏதோ ஒரு வாரம் ஒரு பகுதியைப் புறட்டிப் படித்தாலும், அது ஒரு கதையாய் இருக்கும்! இதன் இரண்டாம் பாகம், இந்த முதல் பாகத்தின் கதைகளைக் கதாப்பாத்திர அறிமுகங்களாய் ஏற்றுக்கொண்டு, பாத்திரங்கள் அனைவரையும் ஈடுபடுத்தி, அவர்களுக்குத் தெரிந்தோ தெரியாமலோ, அவர்தம் வாழ்வில் திருப்பங்கள் ஏற்படுத்திய ஒரு மையக் கதையின் தொகுப்பாய் இருக்கும்! அதையும் இந்த முதல் பாகத்தைப் படிக்காமலேயே புரிந்துகொள்ளும் அளவில் தான் வழங்க உள்ளேன்! இது என் முதல் முயற்சி! படிக்கும் அத்தனை நண்பர்களும் என் நட்பின் கதைகளாய் ஆக உள்ளதை எண்ணும்போதே கிளிர்ச்சிக்கிறது. நன்றிகள்!

                                                                                                                             இப்படிக்கு

‘எழுத்தாணி’ ஆகிய நான்!

பாகம் – 1

நட்பு – 1

அது தான் ஆரம்பம்

என்றோ ஓர் இரவில், கண்மூடிக் கருப்புத் திரையைப் பார்க்க மறுத்த இமைகள், இருட்டினில் ஒளியைத் தேடிக்கொண்டிருந்தபோது, குவியமிலா கண்களுக்குக் குவியம் பிறக்கச் செய்த ஒளிப்புகுக் கண்ணாடியாக தோன்றியது ஓர் உரையாடல். அந்த உரையாடலைத் தீட்டிய விரல்கள், என்னுடன் பழம் போட்டுக்கொண்டு நட்பானது. அந்த விரல்களுக்குச் சொந்தமான கைகள், என் கைக்கு “ராக்கி” கட்டி சொந்தம் கொண்டாடி “சகோ”-வும் ஆனது. பிறகு அந்த நட்பு, சந்திப்புகளை விரும்பியது! நாடியது! தேடியது! ஓடியது! இறுதியில் ஏமாந்து வாடியது!

"பள்ளி மாற்றம் இவ்வளவு கொடுமையானது என்று நம் சீருடைகளுக்கும்
தெரிந்ததிருந்ததை என்னால் உணர முடிந்தது"

பள்ளி மாற்றம்!!! ஆம்… இன்றோ, இது ஒரு தடுப்புச் சுவரே இல்லை! ஆனால் அன்றோ, செவுற்றைக் கடந்து சிறு நேரம் தட்டி எழுப்பும் “மின்-செய்தி” ஒலியைக் கூட, நம் காதுகளைச் செவுடாக்கிக்கொண்டு மதிய உணவு டப்பா-வில் கைப்பேசியை ஊமையாக்கி உறங்கவைத்துக்கொண்டிருந்தக் காலக்கட்டம். அந்த கைபேசியின் “10 எண்களைக்” கேட்டுத் தெரிந்துகொள்வது “நட்பின் ஆழமா? சுதந்திரத்தின் எல்லையா? நாகரிகக் கோட்பாடா? கலாச்சார சீர்க்கேடா?”, என்றெல்லாம் வேற பல மன விவாதங்கள் நம்மை முதிர்ச்சி அடையச் செய்து கொண்டிருந்தன!

வகுப்பு பதினொன்றில் தொங்கிக்கொண்டிருக்க, வயது பதினாறில் தத்தளித்துக்கொண்டிருந்தக் காலக்கட்டம். தொழில்நுட்பத்தின் முதிர்வில் தான் நெருக்கங்கள் பிறக்கும். தொழில்நுட்பத்தின் வாலிபத்தில் சொச்சமான நெருக்கங்கள் கூட தூரங்கள் ஆகும் அபாயம் இருந்தது! ஒரு பெண்ணுடன் வகுப்பில் படிக்கலாம். எதிரே வந்தால் சிரிக்கலாம். பார்த்தால் பேசலாம்! கூட சேர்ந்து நடக்கலாம். நட்பாகலாம்! அடுத்தக் கட்டம் தொலைப்பேசி எண் தானே? ஆனால் அன்றைய காலக்கட்டத்தில் டெக்னாலஜியின் வாலிபம் என்னை வஞ்சித்தது! “யாஹூ” வில் அவர்களது தனியார் அடையாளப் பெயரைக் (யாஹூ ஐ.டீ) கொடுத்தாலே பெரிது என்ற பிம்பத்தை ஏற்படுத்தியது சூழல்கள்! எனவே மின் செய்திகள் மட்டுமே அனுப்பும் நிலை சுகமாக இருந்தாலும், வலித்தது! வஞ்சித்தது.

டிஜிட்டல் யுகத்தின் உடன்பிறப்பான “90’ஸ் கிட்ஸ்” நாங்கள்! எங்களுக்குப் போன தலைமுறையைப் பின்பற்ற வேண்டிய ஒழுக்க நெறிகளும் அவசியப்பட்டது, அடுத்த தலைமுறையின் விடுதலைக்கு வழிவகுத்துக்கொடுக்க வேண்டிய பொறுப்புணர்வும் இருந்தது! இதில் நானோ, அன்று ஒரு பழைய பள்ளி மாணவன் (தி ஓல்ட் ஸ்கூல் ஸ்டூடன்ட்)! காதலித்தவர்களின் கைபேசி எண்களைக்கூட தைரியமாக கேட்கத் தெரிந்த எனக்கு, இந்த நட்பின் அத்யாவசியத்தின் முக்கியத்துவம் புரிந்ததால், கேட்க முடியாமல் தவித்தப் பல இரவு நேர புரண்டல்களை, என் போர்வையின் சுருக்கங்கள் வெளிப்படுத்தும்.

அவள் வீட்டருகில் ஒரு “ஸ்டேஷனரிஸ்” கடை ஒன்று இருந்தது! அக்காவிடம் ஸ்டேஷனரிஸ்”ற்கு சென்று எழுதுப் பொருட்கள் வாங்கவேண்டி இருந்ததாக புருடா விட்டுவிட்டு, அக்காவின் ஸ்கூட்டியில் அவள் வீட்டின் முன் வளைந்து வண்டி ஓட்டும் அணுபவம் பரவசமாய் இருக்கும்! சூரிய வம்சம் படத்தில் “சனிக்கிழம ஆனாலே போதும்! சின்ராச  கைலயே பிடிக்க முடியாது” என்பதைப்போல், ஸ்கூட்டியை சரத் குமார் புல்லட் ஓட்டும் அளவிற்கு ஃபீல் செய்துகொண்டே குறுக்கும் நெடுக்குமாய் ஓட்டும் காலக்கட்டம் அது! அநேகமாக வாழ்க்கையைப் பற்றிய பயம் கூடிய எண்ணங்கள்  இல்லாமல் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தக் கடைசித் தருணங்கள் அதுவாகத் தான் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்!

பள்ளி! பள்ளி முடிந்தால் வீடு! வீட்டில் இருந்து டியூஷன் என்ற வாழ்க்கையைத் தான் பல மாணவ-மாணவிகள் வாழ்ந்து வந்தனர்! அவளும் தான்! இரவில் தான் அவளுடன் பேச முடியும். வண்டியை எடுத்துக்கொண்டு, போலிஸ் இல்லாதத் தெருக்கள் வழியே சுற்றிக்கொண்டு, பெண்கள் நடமாடும் தெருக்களில் மீசை இல்லாத சிறுவனாக இருந்தாலும், 7ஜி ரெயின்போ காலனி படத்தில் வரும் ரவிக்கிருஷ்ணாவைப்போல் ஃபீல் செய்துகொண்டு கைவிட்டெல்லாம் வண்டி ஓட்டிகொண்டு வருவேன். இன்றைய ஆண்டிகளானப் பலர், அன்று அக்காக்களாய் என்னைச் சிறுவன் என்று எடுத்த எடுப்பிலேயே கண்டுகொண்டு ஏளனம் செய்ததிருப்பார்களோ, என்ற  எண்ணமே, இன்றும் அவ்விடங்களில் வண்டி ஓட்டும்போது சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே அவர்கள் கண்ணில் படாமல் செல்லுமாறு என்னை கவனமாய் வழிகாட்டிக் கூட்டிக்கொண்டுப் போகின்றன!

அவள் வீட்டைக் கடந்து ஒரு நொடி, வண்டி ஆஃப் ஆகும்! சுற்றி இருந்த ஜெராக்ஸ் கடை மற்றும் ஜூஸ் கடையில் என்னைப் பார்ப்பவர்கள் முன்னே, சாவியை கழட்டியும் மாட்டியும், வண்டி அணைந்ததுப்போல் பிம்பத்தை ஏற்படுத்தக் குழந்தைத்தனமாய்ப் போராடியதை, இன்றும் ஜூஸ் கடை அண்ணன் சொல்லிச் சொல்லி சிரிப்பார். அவள் மாடி வீட்டு ஜன்னலில் குழல் விளக்கு (டியூப் லைட்)  வெளிச்சம் இருந்தால், அவளுடன் ‘மின்’ உறையாடலாம்! ஸ்கூட்டியை அடுத்த நொடியே வீரேந்தர் சேவாக்கின் “ஸ்ட்ரைக் ரேட்”ஐப் போல் விறு-விறுப்பு ஏற்றி வீட்டிற்கு விரைவேன்! அந்நேரம் பார்த்து ஏர்ட்டல் எகத்தாலம் செய்து மூன்று லைட்டுகள் மட்டுமே மிண்ணி நான்காவது லைட் எறியாமல் வெறுப்பேற்றும்! அவள் அறையிலே லைட் எரிந்தும், என் இணையத்தளத்தின் மோடம் லைட் எரியாமல் என் வயிறு எரியும்! “தொலைப்பேசி எண் மட்டும் இருந்திருந்தால் இந்த அவலம் ஏற்படுமா?”, என்று தோன்றியது!

அவள் தொலைப்பேசி எண் ஏன் அவ்வளவு முக்கியம்? வாழ்க்கையில் வர்த்தக ரீதியாக என் குடும்பம் தடுக்கி விழுந்ததன் விளைவில் தான் சென்னைக்கே வந்திருந்தோம்! ஒரு நாள் சிலக் காரணங்களால் வாழவே பிடிக்காமல் போன அளவு விரக்தி ஒன்று தலைக்காட்டியது! அப்போது மின் அலை ஒன்று அடித்து, எனக்கு நம்பிக்கைக் கரையைக் கைக்-காட்டியது! “பை-பை டீ.சி… சீ யூ” என்று முறைப்படி மின்-செய்தியில் விடைப்பற்றுக்கொண்டு தூங்கச் சென்ற அவள், நான் அப்போதும் மின் அலையில் முழித்துக்கொண்டு இருந்ததை எண்ணி, எனக்காக உன்னதமாய் ஃபீல் செய்தாள். எனக்காக உணர்வை வெளிப்படுத்திய முதல் பெண் அவள் தான். அடுத்த நாள் சனிக்கிழமை என்பதால், அவள் பள்ளிக்கு விடுமுறை! என் தலையெழுத்துக்குப் பள்ளி இருந்தது! “நான் இன்னும் கொஞ்ச நேரம் உன் கூட பேசறேன் டா! நீ ஏன் சூசைட்டல் தாட்ஸ்-க்கு எல்லாம் போற? அப்பறம் இவ்ளோ லேட் நைட்-ல யாரு என் கூட ச்சாட் பண்றது?” என்று எதார்த்தமாய் கேட்டது என் எண்ணத்தை மாற்றியது. முதல் முறை வாழப் பிடித்தது. இன்று “ப்ரோ” என்பது சாதாரன வார்த்தையாகிவிட்டாலும், அன்று “ப்ரோ” என்று ஒருவரைக் கூப்பிட்டால் அவ்வளவு உணர்ந்து மட்டுமே கூப்பிடுவார்கள் என்று தோன்றியது எனக்கு, இந்த ராக்கி கட்டிய ‘சகோ’வால்! அன்றைய வயதில் அது ஒரு முக்கியமான உரையாடலாய் இருந்தது! என்னை மீட்டெடுத்தது! என் விரக்தியைக் கொன்று, புது மனிதனாய் என்னை மாற்றியது! அதனால் அவளுடன் தொலப்பேசியில் பேசும் அளவு நெருக்கத்தை அடைய வேண்டியக் கட்டாயம், அன்று எனக்கு இருந்தது!

நீச்சல் தெரியாத என்னைப்போன்றவர்கள், திடீரென்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, நீச்சல் குளத்தில் குதிப்பதுபோல், ஒரு நாள் ஆர்க்குட்டில் (ORKUT இணையதளத்தில்) அந்த பத்து எண்களை “ஸ்க்ராப்” செய்தி அனுப்பிக் கேட்டேன்! எதிர்ப்பாராத பதிலை எதிர்ப்பார்க்காத எனக்கோ, எதிர்ப்பார்த்த விடையைவிட எதிர்வினையான ஒரு செய்தி வந்தது! வழக்கமான, “என் அம்மாவின் கைபேசி”யுடன் இன்னொரு கூடுதல் தகவளாக “தம்பியும் நானும் பகிர்ந்து பயன்படுத்துகிறோம்”, என்று தெளிவாகவும் தீர்மானமாகவும் சொல்லியது! அவ்வளவு தான்! அவள் அதைச் சொல்லிவிட்டுத் தூங்கச் சென்றாள். அவள் குரலைப் பல வெறுப்பான, கோவமான, கோரமானக் கட்டைக்குரல்களில் நினைத்து நினைத்துப் பார்த்துக்கொண்டிருந்த நான், சூரியனையேத் தட்டி எழுப்பிவிட்டேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்! அடுத்த நாள் உடல்நிலைக் குறைவு ஏற்பட்டு பள்ளிக்கு மட்டம்போட்டது தான் மிச்சம்.

மன்னிப்பு கேட்டுவிடலாம் என்று தோன்றியது. அப்படிக் கேட்டுவிட்டால், “என் எண்ணத்தில் பிசிறு இருக்கக்கூடும் என்று நினைத்துவிடுவாளோ?” என்ற தயக்கம். “இப்போது மட்டும் என்ன வாழுகிறதாம்?”, என்றான் என் மனசாட்சி! “அறிவுகெட்டவனே! நேற்று மட்டும் நீ விழித்திருந்தால் அந்த எண்ணைக் கேட்டுக்கூட இருக்க மாட்டேனே”, என்றேன்! அன்று நான் என்னை அந்த உறவிடம் இருந்து தனிமைப் படுத்திக்கொள்ளத் துவங்கினேன்! சொல்லப்போனால் அப்படிக் காட்டிக்கொண்டேனே தவிற, நினைவெல்லாம் அவள் மீது தான்!

அவள் ஒரு அழகானப் பெண்! பள்ளியே மாறினாலும், என் பள்ளியில் பலப்பேரின் (குறிப்பாக சீனியர்களின்) தூக்கத்தைத் திருடிய “டீனேஜ் திருடியாகவே” சிறகடித்துக் கொண்டிருந்த “சிரிப்பு தேவதை” அவள்! அதனாலேயே என் நெருங்கிய வட்டத்திற்கே என் மீது நம்பிக்கையில்லை! இது நட்பில்லை! இது காதல் தான் என்று என்னை நம்ப வைக்க, கச்சத் தீவை மீட்டெடுப்பேன் என்று தமிழர்களை அரசியல்வாதிகள் நம்ப வைக்கப் போராடுவதுபோல், பாடுபட்டுக்கொண்டு இருந்தார்கள். எனக்கு அவள் ராக்கி கட்டியதை நினைவுகூறினாலும், ராக்கிக் கயிறுக்கு மரியாதை இல்லை!

குறிப்பாக “வாரணம் ஆயிரம்” என்று நான் குறிப்பிட நினைக்கும் நண்பன்! அவன் என்னைப் பார்க்கும் பார்வையில், எனக்கே என் மீது சந்தேகம் வந்துவிடும்! அவன் வேறுஅவள் வீட்டு எதிரில் தான் இருந்தான். “சந்தோஷ் சுப்ரமணியம்” போல் வாழ்ந்துகொண்டிருந்த நண்பனும், எப்போதும் “சூரியா சிரிப்பு” சிரித்துக்கொண்டே இருக்கும் என் ஊரில் இருந்து இங்கே வந்த நண்பனும், சொகுசாக வாழ்ந்துகொண்டிருந்தாலும் “வாழ்வே மாயம்” பாடும் திருட்டு முழி நண்பனும் என்னை நம்பத் தயாராக இல்லை! வாரணம் ஆயிரத்திற்கு அமோக ஆதரவு அளித்து, நான் காதல் தான் செய்கிறேன் என்று உறுதியாக நம்பிக்கொண்டு என்னைக் கடுப்பேற்றிக்கொண்டு இருந்தனர்!

பற்றாக்குறைக்கு என்னை ஓடவிட்டுக்கொண்டிருந்த அன்றைய எதிரிகளாகவும், இன்று என் மிக மிக மரியாதைக்குரிய ந(ண்)பர்களான எதிர் கேங் வேற! எங்கள் வகுப்பறையைப் படமாக எடுத்தால், அவர்கள் தான் ஹீரோக்களாக இருப்பார்கள்.  இவர்கள் அனைவரும் எனக்கேத் தெரியாத என் காதலைப் பற்றி “தலைவன்” காதில் கிசுகிசுத்துக்கொண்டு இருந்தார்கள்! மேட்ச் ஃபிக்ஸிங்கில்  சிக்கிய அசாருத்தினைப்போல் விளக்கம் சொல்லக் கூட நாதியில்லாமல் கேட்டுக்கொண்டு இருந்தேன்! என்னை மற்ற விஷயத்தில் டம்மிப் பீஸ்-ஆகப் பார்க்க நினைத்து முட்டுக்கொடுத்த இவர்கள், இதில் தான் அப்படிப் பார்த்திருக்க வேண்டும் என்று உள்மனது கதறியது! இருந்தாலும் வெளியே கெத்தாக இருந்ததால் மௌனம் காத்தேன்!

அப்போது என்னை நம்பியது ஒரே ஒரு ஜீவன் தான்! என் வாழ்வின் ஒரு கல் ஒரு கண்ணாடி “பார்த்தா”வாக விளங்கிய, விளங்கிக்கொண்டிருக்கும் நண்பன் அவன்! என்னை, நான் நம்புவதைவிட, என் தாய் நம்புவதை விட அதிகமாக நம்பக்கூடிய நண்பன்! என் உறவுகளுக்கும் மேலானவன் அவன்! ஆனால் அன்று அவன் என்னை நம்பியதற்குக் காரணம், “நீ எப்டி மச்சி அவள உஷார் பண்ண முடியும்? அவளாவ்து உன்னய லவ் பண்றதாவ்து!” என்று உண்மையும் நிதர்சனமும் கலந்து, முற்றிலும் தேர்ந்த ஜென் தத்துவ ஞானி போல் பேசியது என்னை ஆதரித்தா, கலாய்த்தா என்று இன்றுவரைக் குழப்பமாய் இருக்கின்றது!

ஆனால் எது எப்படியோ! என் கேங்க் நண்பர்களே என்னை நம்பாமல், என்னை அவளுடன் ஒப்பிட்டுப் பேசப் பேசதான் எனக்கே என் மீது கூடுதல் மரியாதை வந்தது! உருவத்தைப் பார்த்து காதலிக்கும் சமூகத்தை தான் தொடர்ந்து நம் சினிமா நம் மீது திணித்துக்கொண்டே இருக்கிறது. எனினும் அழகிய ஒரு பெண்ணை நான் காதலிக்க மாட்டேன் என்று உறுதியாக இருந்ததை நினைத்த என் மனதிற்கு நானே பாராட்டு விழா வைத்துக்கொண்டேன்! “என்ன ப்ரயோஜனம்? அவள் தான் நம்மை மதிக்கவில்லையே மடையா” என்று என்னையும் என் இதயத்தையும் நானே திட்டிக்கொண்டேன்!

சரியாய்ப் படிக்காத பொதுத் தேர்வின் முந்தைய நாள் ராட்சச மழை வந்து காப்பாற்றி விடுமுறை வாங்கிக்கொடுப்பது போல், திடீரென்று ஒரு நாள் எங்கிருந்தோ ஒரு தவறான ஆள் ஒருவன் அவள் வாழ்வில் உதித்தான். சொல்லப்போனால் குறுக்கே குதித்தான்! என்னை மிகச் சரியான ஆள் என்பதைத் தான் அவள் நினைத்துக்கொண்டு இருக்கிறாள், என்பதை எனக்கே உணர்த்துவதற்காகப் பிறவி எடுத்து வந்தவன் அவன், என்று நான் நினைத்துக்கொண்டேன். அந்த முன்னால் சீனியரை அவள் தன்னுடன் பேசும் வாய்ப்பைக் கூட வழங்காமல் தவிர்த்துவிட்டது தான் கெத்து. எனினும், அவனைத் தவிர்த்துவிட்டோமா இல்லையா என்று உறுதிப் படுத்திக்கொள்ளவேண்டும் என்று நினைத்தாள்! விளைவு, என் கைபேசியின் பத்து எண்கள் “ஆர்க்குட் ஸ்க்ராப்பாக” அவளின் கட்டளைக்கேற்ப பரிமாற்றம் செய்யப்பட்டது. அடுத்த சில வினாடிகளில் அவளது இனிமையான குரல்! முதல் முறையாக நானே எனக்கு முக்கியமானவனாகத் தோன்றினேன்!

அது தான் ஆரம்பம்!

தொடரும்! 

– ‘எழுத்தாணி‘ ஆகிய நான்