Penbugs
Deepak Krishnaசிறுகதைகள்

நட்பின் கதைகள் – நட்பு 2

முன்னுரை

வணக்கம்! நட்பின் கதைகள் என்பது ஒவ்வொரு நண்பர்களுடனும் நான் நட்பான கதை தான்! சுய அனுபவங்களை வாராவாரம் ஒரு கதை வடிவத்தில் தொகுத்து வழங்க உள்ளேன். முதல் நபர் கண்ணோட்டத்திலேயே இதை எழுதலாம் என்றும் முடிவெடுத்துள்ளேன். இதன் முதல் பாகத்தில் ஒவ்வொரு நண்பரிடமும் நான் நட்பான கதைத் தொகுப்புகள் இருக்கும்! ஒவ்வொரு வாரத்திற்கும் தொடர்பு இருக்கும், இல்லாமலும் இருக்கும்! தனியாக ஏதோ ஒரு வாரம் ஒரு பகுதியைப் புறட்டிப் படித்தாலும், அது ஒரு கதையாய் இருக்கும்! இது என் முதல் முயற்சி! படிக்கும் அத்தனை நண்பர்களும் என் நட்பின் கதைகளாய் ஆக உள்ளதை எண்ணும்போதே கிளிர்ச்சிக்கிறது. நன்றிகள்!

கடந்த வாரம் வெளிவந்த கதையைப் படிக்க : நட்பின் கதைகள் – நட்பு 1

                                                                                                                             இப்படிக்கு

‘எழுத்தாணி’ ஆகிய நான்!

பாகம் – 1

நட்பு – 2

சின்னக் குயில் பாடும் பாட்டு கேட்டது

“மிரட்டி ஓட வைக்கும் சென்னை” என்ற தயக்கத்தில் எக்மோர் ரயில் நிலையத்தில் கால் அடியெடுத்துவைத்து; அஷோக் நகர், சைதாப்பேட்டை, மாம்பலம் சங்கமிக்கும் இடத்தில் பள்ளிக்கு அருகாமையில் குடியேறிய ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கு, சமுதாயத்தைக் கீழ்-வீட்டு ‘ஹவுஸ் ஓனரிடம்’ இருந்தே அணுக வேண்டிய எதிர்வினை! ‘மதுரையா?’ என்ற ஏளனப் பார்வை வேறு. அதற்கேற்றதுபோல் அவர் மகனின் மிதிவண்டியை, வந்த அன்றே யாருக்கும் தெரியாமல் காற்றிறக்கி விட்டுத் தோரணைக் காட்டிவிட்டுப் பள்ளிக்கு விரைந்த முதல் நாள் இன்றும் என் நினைவில் இருந்து நீங்கவில்லை.

என்னைப்போல் ‘யூனிஃபார்ம்’ போட்டிருந்த ஏதோ ஒரு மாணவன் முன்னே நடக்க, அவனைப் பின் தொடர்ந்தால் பள்ளி வந்துவிடும் என்று “ஜீ.டி. நாயுடு”வைப்போல் புத்திசாலியாய் உணர்ந்துகொண்டு, ‘பேனா’வை எடுத்து ‘ஷர்ட் பாக்கெட்’ டில் சொருகிக்கொண்டேத் தோள்த்தட்டிக் கொண்டு, என் தந்தயைப் பள்ளிக்கி வழியனுப்ப வரவேண்டாம் என்றேன். மேலும் கீழும் பார்த்தார். அரும்பு மீசையை சொறிந்துகொண்டே, ‘பேண்ட்’-ஐக் கை காட்டி, “நான் ஒன்னும் சின்னப் பையன் இல்லப்பா”, என்று சொன்னதற்கு எங்கப்பா முறைத்துக்கொண்டே எதிரில் என் போல் சீருடை அணிந்துவந்த மாணவி ஒருவளைப் பார்த்துவிட்டு என்னை எகத்தாளமாய்ப் பார்த்தார். “தங்கச்சியும் உன் ஸ்கூல் தான்னு நனைக்கறேன் டா”, என்றதும் “எனக்கு எதற்கு இவ்வளவு சின்ன அத்தை?” என்று மனதிற்குள் புலம்பிக்கொண்டேனேத் தவிற, அவளை என் தங்கச்சி என்று அப்பா சொன்னதைப் பேச்சுக்குக்கூடப் பொருட்படுத்தாமல் நகர்ந்த காட்சி, இன்றும் சீனிவாசாத் தெருப் பக்கம் தெரியாமல் எப்போவாவது ஒதுங்கினால் கூட, நினைவலைகளாய் என் சிந்தையைச் சீண்டும்!

என் முன்னே சென்றுகொண்டிருந்த அந்த மாணவன் என் வகுப்பில் என்னுடன் படித்த “வாயடி”. சரியாகத் தான் படித்திருக்கிறீர்கள்! வாயைக்கொடுத்து உடலிலோ உள்ளத்திலோ அடி வாங்கிக்கொள்வது தான் அவன் ‘ஹாபி’ ! அதனால் தான் வாய்+அடி = வாயடி!  அவனை ‘ஃபாலோ’ செய்தே வீடு திரும்புவதை வழக்கமாக வைத்திருந்த நான், வேறு வழியில்லாமல் அவனுடன் நடப்பதில் நட்பானதில் ஆச்சரியம் இல்லை. “வாயடி”க்கும் இந்த கதைக்கும் தொடர்பு உண்டு. என்னை அந்த நட்பிடம் தொடர்பு படுத்தியதே வாயடி தான்! ஓட்டை வாய்ப் பாலமாக செயல்பட்டான்!

பள்ளியில் நான் சேர்ந்த அந்தத் தருணத்தில் பெண்கள் யாரும் வகுப்பறையில் இல்லை! என் பள்ளிச் சீருடையில் காலையில் கூட ஒரு பெண் என் வீட்டைக் கடந்து சென்றது நினைவுக்கு வந்தது. ஏமாற்றம்! காரணம், எங்களின் இன்னொரு உதிரிப் பள்ளி ஒன்று, ஐந்தாம் வகுப்புவரை இருக்கும் மாணவர்களைக் கொண்டுத் தனியாகப் பக்கத்து ‘ஏரியா’வில் இயங்கிக் கொண்டிருந்தது. பெண்களைப் பொது நலன் கருதி, அங்கே மாற்றம் செய்துவிட்டு, ஒவ்வொரு ஆண்டுக்காரர்களையும் ஒரே ஒரு வகுப்பாக இயக்க நினைத்த கிருக்குத்தனம் தான் அது! பெண்கள் மீது அக்கரையாம்! அப்படி என்றால் எங்கள் மீது நம்பிக்கை இல்லையா? அப்படியே இல்லை என்றாலும் அதைச் சொல்லிக்கொடுக்க வேண்டாமா? அந்த வயது தானே அது? மாணவர்களுக்குள் அதுவரைப் பாகுபாடு இருந்ததாகத் தெரியவில்லை! அப்போது தான் முதல்முறையாய் நண்பர்களாகப் பார்க்கவேண்டியத் தோழிகளை, எதிரினப் பாலாகப் பார்க்க வைத்தப் “பிளவு” ஒன்று உருவாகியது, இவர்களது அறிவுகெட்டக் கலாச்சார அற நெறிகளால்! நிர்வாகத்தில் யாருக்கோ அறிவு ‘அலாரம்’ அடித்துத் தட்டி எழுப்ப, மூன்று மாதத்தில் பெண்களை மீண்டும் எங்கள் பள்ளியுடன் மீட்டு இணைக்கச் செய்தனர்!

பெண்கள் இல்லாப் பாலைவனப் பள்ளியில் நாங்கள் தவித்துக்கொண்டிருந்த (இப்போது பிளவு வந்துவிட்டது அல்லவா?) அந்த மூன்று மாதச் சிறைவாசத்தில், தவித்தக் காதுகளில் அதிகமாய்க் கேட்கப்பட்டது, நான் “குக்கூ” என்று குறிப்பிட நினைக்கும் அந்தப் பாட்டு நாயகியைப் பற்றி தான்! அவளை நான் முதல் முறைப் பார்ப்பதற்கு முன்பாகவே எனக்கு அவளைப் பிடித்திருந்தது! அவள் நம் ‘நண்பி’ ஆகப் போகின்றவள் என்று முன்கூட்டியே ‘ஃபிக்ஸ்’-ம் செய்துவிட்டேன்! ‘பில்ட்-அப்’ செய்ததில் ஏற்பட்ட எதிர்ப்பார்ப்பு! வேறு ஒன்றும் இல்லை! நானும் படு ஒழுக்கமானவனாய்க் காட்சியளிப்பதற்காக, முகத்திற்குப் பயன்படுத்தும் ‘பாண்ட்ஸ் பவுடரினால்’(Powder) விபூதி இட்டுக்கொண்டு, அப்பாவியாய்த் தோன்ற முயற்சித்துக் கொண்டிருந்தேன்! சொல்லப்போனால் அன்று என் துவைக்காத ‘ஷூ சாக்ஸ்’-இல் ‘பெர்ஃஃப்யூம்’ அடித்துக்கொண்டு வந்ததை அறிவியல் அறிவு வளர்ந்துவிட்டு, “யார் மனசுலே யாரு? உங்க மனசுலே யாரு? அவங்களுக்கு என்னப் பேரு?”, என்று “க்ராண்ட் மாஸ்டர்” போட்டியில் பங்கேற்கும் அளவிற்கு தேர்ந்துவிட்டதாக வேறு நினைத்தக் கொண்டேன்.

நவம்பரில் நாடோடும் வேடந்தாங்கல் பறவைகளைப் போல் என் வகுப்பு மாணவிகள் சிறகடித்து உள்ளே வந்ததும், மேகமாய் வழிந்த நண்பர்களின் முகத்தைப் பார்க்க சகிக்க முடியாமல் எனக்குள் நானே சிரித்துக் கொண்டிருந்தேன்! நான் மட்டும் யோக்கியனா என்ன? அன்று இடைவெளியில் கழிவறைப் பக்கம் கூட போகாமல் வகுப்பறையிலேயே அமர்ந்துக் கொண்டிருந்தக் கடைசி ‘பென்ச்’ கழிசடைதானே நானும்! அதை அன்றையத் தமிழ் ஆசிரியை மட்டும் கண்டுகொண்டு, “ஏன்-டா தம்பி சிரிச்சுட்டே இருக்க?” என்று வினவியபோது தான் புரிந்தது, என் கழுத்திற்கு மேலும் முகம் இல்லை மேகம் இருந்திருக்கிகிறது என்று! வழிந்துகொண்டு இருந்திருக்கேன்!

அப்போது நான் என் மதுரை கெத்தில் இருந்தும் “டி.வி.எஸ் பள்ளி”யின் மிராசு கௌரவத்தில் இருந்தும் வெளிவர மறுத்துக்கொண்டிருந்தக் காலக்கட்டம்! நான் தான் வகுப்பின் மாணவத் தலைவன்! (‘தி க்ளாஸ் லீடர்’)! இப்போது மட்ராஸ்க்காரனாக இருப்பதில் இருக்கும் கெத்து அப்போது புரியாததால், வீம்பிற்கென்றே வம்பு இழுக்கப்பட்ட நான், விடாப்பிடியாய் ஈடுக்கட்டி முட்டுக்கொடுப்பேன்! வெறுப்பை சம்பாதித்தும் கொள்வேன்! சில அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்தப் போட்டிகளில் மாநில-தேசிய அளவில் நானும் என் நண்பன் “அப்பாவி”யும் பள்ளிக்குப் பெருமை சேர்த்ததில் எங்கள் பெயர், பெண்கள் தனியாக படித்த உதிரிப் பள்ளிக் காலக்கட்டத்திலேயே ‘பாப்புலர்’! அப்படி என்றால் கெத்து என்று நினைத்துக்கொண்டிருந்தேன்! நமக்கு பிடித்த சினிமாவைக் கொஞ்சம் தூக்கலாக சொல்லி நன்றாக இருக்கிறது என்று சொன்னாலே, “அப்படி என்ன நல்லா இருக்குன்னு பாக்கத்தான போறோம்!” என்று ஏளனமாய் அனுகுமுறை செய்து, “நீ சொன்ன அளவுக்குல்லாம் ஒன்னும் இல்ல!” என்று அதை வெறுக்கவும் செய்யும் இன்றைய காலக்கட்டத்தின் ஆரம்பப் புள்ளி நாட்கள் அது! அதனால் அப்படி யாரையாவது பாராட்டினால் காண்டாகிவிடுவார்கள் என்று குக்கூவும் அவள் நெருங்கிய ஸ்நேகிதியும் என்னைப் பார்த்தப் பார்வையிலேயேப் புரிந்துவிட்டது. “இவன் தானா?” என்ற ஏளனம் மைண்ட் வாய்ஸ்-ஆக இருந்தாலும், முகம் கண்ணாடியாய் வெளிப்படித்தியது!

பற்றாக்குறைக்கு என் இன்றைய நெருங்கியத் தோழியான “மருத்துவ நண்பி” ஒருவள் வேறு! முறைக்கிறாளா? சிரிக்கிராளா? நக்கலாய்ப் பார்க்கிறாளா? இல்லை நான் ‘சைட்’ அடிக்கிறேன் என்று தவறாகுப் புரிந்துகொண்டு ஆசிரியர்களிடம் போட்டுக் கொடுப்பதற்காக “LHS = RHS” என்று உறுதிப் படுத்திக்கொண்டு இருக்கிறாளா என்று  புரியாத அளவு முகபாவணை செய்துகொண்டிருந்தாள்.  கண் சிமிட்டாமல் சில நொடிகள் அவள் பார்க்கும்போது மிகப்பெரிய  கோபக்காரிப்போல் தோன்றுவாள்! ஆனால் ‘டம்மிப் பீஸ்’ என்று அன்று எனக்குத் தெரியவில்லை!

அப்படியே ஒரு வாரம் கடந்தது! பசங்களாக இருந்தாலும் சரி! பெண்களாக இருந்தாலும் சரி! என்னைப் பொறுத்தவரை அவர்கள் மதுரையை வெறுக்கும் ‘மதராஸி’கள். அவ்வளவுதான்! அப்படி நான் வெறுத்த ஒரு “மதராஸி”யுடன் சமாந்தாரமாய்ப் (PARALELL-ஆகப்) பயணித்து, நானும் ஒரு ‘தி மதராஸி’ ஆகப்போகின்றவன் என்று அன்றைய காலக்கட்டத்தில் எனக்கேத் தெரியாது! மெட்ராஸ்-ஐப் பிடிக்க எனக்கு இருக்கும் நூற்றுக்கணக்கான… இல்லை இல்லை! ‘ஆயிரக்’ கணக்கானக் காரணங்களில் “குக்கூ”வும் ஒன்று!

அவ்வாறு மதுரைக்கார மாணவத் தலைவனான நான் வம்பிற்குத் தூண்டப்படும்போதெல்லாம், ‘சேகுவேரா’வின் சிஷ்யப்பிள்ளையாய் மாறி கரும்பலகையில் வெள்ளைச் ‘சாக் பீஸ்’-னால் பெயர்களைக் ‘கிரு’க்குவேன்(பிழை எழுத்தில் இல்லை எண்ணத்தில்). நல்லவேலை நான் நானாகப் பிறந்திருந்தேன்! நான் மட்டும் என் வகுப்பின் வேறு ஒரு மாணவனாய்ப் பிறந்திருந்து, என்னை நானே எதிரே அணுகும் அவலம் மட்டும் ஏற்பட்டு இருந்தால், நானே என்னை அடித்து வெளுத்திருப்பேன்! அவ்வளவு கடுப்பாக இருக்கும் ‘க்ளாஸ் லீடர்’ என்ற பெயரில் நான் செய்யும் இம்சைகள்!

அப்படி கரும்பலகையில் நான் அடிக்கடி எழுதும் முதல் பெயர் “குக்கூ”வின் பெயர் தான். அவள் பெயரை எழுத்துப்பிழையாய் எழுதுவதை, நாசூக்காகக் கலாய்க்கிறேன் என்று எண்ணிக்கொண்டு, உணர்ச்சிவசப்பட்டுக் கத்திக்- கத்தி மானத்தை வாங்குவாள். நான் அவளை முறைப்பதும், அவள் சமாளித்து என்னிடமே எழுத்துப்பிழையைத் திருத்தச் சொல்லிக் கேட்பதும் தான், வாழ்க்கையின் அதிக பட்ச கோபத்தை ஏற்படுத்தக் கூடிய அவமானமுமாய் விளங்கியதன் நிம்மதியை இன்றைப் போல், அன்று என்னால் உணரமுடியவில்லை! சொல்லியது ஒரு பெண். சிரிப்பது அவளது பெண் தோழிகள். கவனித்துக்கொண்டிருப்பது ஆண் தோழமைகள் என்பதால், அவமானம் தலைக்கேறியது. கண்ணால் பார்ப்பதற்கு முன்னே எனக்குப் பிடித்தப்போன அவளது பிம்பத்தை, வரட்டு கௌரவத்தால் அந்த நொடியில் பார்க்கக் கூடப் பிடிக்காமல் வெறுக்கத் துவங்கினேன்! காரணம் ஒன்றும் இல்லை. இதேப்போல் எனக்கும் குக்கூவிற்கும் தினசரி குழந்தைத்தனமான ‘சைல்டிஷ்’ சண்டைகள்!

க்ரிக்கெட்”ல் “தாதா சவுரவ் கங்குலி”யின் தீவிற விசிறியாக இருந்த என்னைப் போன்றவர்களும், “பிக் ஃபன் பப்புள் கம்மிற்கு” இலவசமாக வழங்கப்பட்டு வந்த ‘க்ரிக்கெட் கார்ட்’-களில் சச்சின் டெண்டுல்கர் ‘கார்ட்’ கிடைக்கவேண்டும் என்று தவம் கிடப்போம்! அது ஏன்? எதற்கு? என்றெல்லாம் தெரியாது. அது ஒரு இனம்புரியாத உணர்வு! அப்படித்தான், ஏன்? எதற்கு? என்றெல்லாம் தெரியாது. பள்ளியில் “குக்கூ”வின் தொலைப்பேசி எண் எனக்கு அவசியப்பட்டது.

‘க்ளாஸ் லீடர்’ என்றால் பெரிய மந்திரிப் போன்ற உணர்வு வேறு எனக்கு. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், புரட்சிக் கலைஞன் விஜயகாந்த், ஆக்ஷன் கிங்க் அர்ஜீன், இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் மற்றும் கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் தான் இந்திய அரசியல் சட்டமைப்பின் ஆணிவேர்கள் என்று நினைத்துக்கொண்டிருந்த வயதில் நீந்திக்-கொண்டிருந்த சமயம் என்பதை நினைவுகூறக் கடமைப் பட்டுள்ளேன்! அப்பாவியான முகபாவணையுடன் (அப்போது) ஆசிரியர்கள் அறைக்குச் சென்று விடுமுறை ஆனவர்களின் பெயர்களைக் குறித்துக்கொள்கிறேன் என்ற பெயரில், வகுப்பின் ‘ரிஜ்ஜிஸ்டர்’-ஐ வாங்கிக்கொண்டு வந்து, துறு-துறுவென ‘A4 பேப்பர்’ ஒன்றின் பின் பக்கம் “044-2471” எனத் துவங்கும் குக்கூவின் வீட்டு ‘லாண்ட்-லைன் நம்பர்’-ஐ எழுதிவிட்டு, அவசர அவசரமாக ‘பேப்பரின்’ முன் பக்கம் மட்டம் போட்டவர்கள் பெயரைக் கடமைக்கென்றே கிறுக்கிக் கொண்டேன்.

அந்த 100 மீட்டர் அளவு கூட இல்லாத, மண் வழிப்பாதையாய்ப் போய்விட்ட ஒரேக் காரணத்தால், ‘மைதானம்’ என்று அழைக்கப்பட்டு வந்தப் பாதை வழியே நடந்துகொண்டு இருந்தேன். ‘ஹெல்லோ’ என்று ஏதோ ஒரு குளு-குளுக் குரல். ‘அதுக்குள்ளயா?’ என்று குழம்பினேன். “தொலைப்பேசி எண்ணை எழுதியவுடனே ஹெல்லோவா” என்று தோன்றியபோது, ஒரு பெண்ணின் கரு நிழல் என் திங்கட் கிழமை வெள்ளைச் சீருடை மீது விழுந்தது. நிமிர்ந்தேன்! அதே அத்தை… ச்சீ-ச்சீ! அதே மாணவி.  “நீ சீனிவாசா தெருல தான இருக்க?” என்றதும் குப்பென்று வேர்த்தது. தங்கச்சி என்று முதல் நாள் அப்பா சொன்னது தப்பு என்று மீண்டும் உணர்ந்த நொடியில், திங்கட் கிழமையை மறந்து அவள் தவறாக அணிந்து வந்த “+1” சீருடை, அவள் என் சீனியர் என்பதை வெளிக்காட்டியது! அப்போது தான் புரிந்தது, என் பள்ளியின் முதல் நாள் புதன் என்பதால் அவள் வெள்ளைச் சீருடையில் வந்ததும், அந்த பள்ளிப் பெயர் போட்ட ‘பேட்ச்’-ஐ வைத்துதான் அவள் நம்ம பள்ளி என்றே கண்டுகொண்டோமே, என்பதையும் நினைவுகூறினேன்! கவர்ச்சியாய் முறைத்ததும் “கண்ணழகி” என்று புரிந்துகொண்டேன். “ஓவரா சீன் போட்றியாம்?” என்றதும் புரிந்துவிட்டது, இது நம் வகுப்பு எலிகளின் ஏற்பாடு தான் என்று!

கையில் இருக்கும் பேப்பரை பிடுங்கிவிட்டு விளையாடிய கண்ணழகியிடம் எப்படி விளையாடுவது என்று தெரியாமல் ‘பெப்பே’ என்று நின்றுகொண்டிருந்தேன். பேப்பரைப் பின்னால் திருப்பிப் பார்த்தால் ‘க்ளோஸ்’ என்று தோன்றியது. குக்கூவின் நிஜப்பெயரின் கடைசி ஆங்கில மூன்று எழுத்துக்களைத் தான் பெயருக்குப் பதில் எழுதி இருந்தேன் என்றாலும், அவளைச் செல்லமாக அப்படித் தான் அனைவரும் கூப்பிடுவார்கள் என்று எனக்கு நன்கு தெரியும்! அனைத்து ‘டீச்சர்’களிடமும் அப்பாவிப் போல் முகம் வைத்துக்கொண்டே நல்லப் பெயர் வாங்கினாலும், ‘பயாலஜி டீச்சர்’ திருமதி “சந்தேகம்” மட்டும் நான் அப்பாவி இல்லை என்று எடுத்த எடுப்பிலேயே புரிந்துகொண்டிருந்தார்! நான் பயாலஜியை வெறுக்கக் காரணமே “சந்தேகம்” மேடம் தான்! கோபித்துக் கொள்ளமாட்டார்கள் என்று குறிப்பிடுகிறேன்! அப்போது எனக்குப் பாடம் எடுக்காதபோதிலேயே என்னை வெறுத்தவர் அவர்! “பாருங்க மேடம்! சீனியர் பொண்ணுக் கூட வெளையாடிட்டு இருக்கான்!” என்று போட்டுக்கொடுத்தார் என் ‘க்ளாஸ் டீச்சரிடம்’!

‘க்ளாஸ் டீச்சர்’ வந்ததும், எங்களை விசாரிக்க, கண்ணழகி அவர்களது ‘ஃபேவரிட்’ மாணவி என்று புரியவரும் தருவாயில், பேப்பர் விழுந்ததாகச் சொல்லி, எடுத்துக் கொடுத்ததாகக் கூறிவிட்டு, அதை அவர்களிடம் அவள் நீட்டி  சமாளித்தாள். பேப்பரின் பின் பக்கமாக கூக்கூவின் தொலைப்பேசி எண் பளிச்சென்று தெரிந்துகொண்டு இருந்தது! “மன்மதன்” பட ‘டிவிடி’யை அப்பாக்குத் தெரியாமல் வீட்டிற்குள் எடுத்துச் செல்ல நண்பனை மறைத்து முன்னே நின்றதுப்போல், கண்ணழகியின் கண்களில் இருந்து குக்கூவின் தொலைப்பேசி எண் தெரியாமல் இருக்க, டீச்சர் முன்னால் நின்று மறைத்துக்கொண்டேன். டக்கென்று ‘ஜீ.டி. நாயுடு’ என் ‘ஷூ’-வில் உதிரத்தைப் பாய்ச்சினார். டக்கென்று எதார்த்தமாக என் வலது கால் தானே துடி- துடித்து, ‘ஷூ’வினால் தரையின் மண்ணில் அவளதுத் தொலைப்பேசி எண்ணைச் சாதுர்யமாக எழுதிக்கொண்டது. உடனே மனப்பாடம் செய்துகொண்டேன். “2471” அந்த ஏரியா-வின் தொலைப்பேசி ஆரம்ப எண்கள். மீதி நான்கு எண்கள் நினைவில் இருந்தால் போதும். அப்போது ஏன் எட்டு எண்களையும் முழுதாகக் காலால் கோலம் போட்டேன் என்றெல்லாம் தெரியவில்லை. ஒன்பதாம் வகுப்பு மாணவனின் அறிவு அவ்வளவு தான்! மனப்பாடம் செய்துகொண்டதை என் மதுரை நண்பர்களுக்கு ஃபோன் போட்டு சொல்லவேண்டும் என்று தோரணைத் தோள்த்தட்டிக் கொண்டது.

டீச்சர் சென்றவுடன் வேக வேகமாய் மைதானத்திற்கு ஓடி, அந்தத் தொலைப்பேசி எண்ணை அழித்துக்கொண்டிருந்தேன். மாட்டிக்கொள்வேன் என்ற பயமெல்லாம் இல்லை. நான் வியர்வை சிந்தி ரிஸ்க் எடுத்துச் சேகரித்த குக்கூவின் தொலைப்பேசி எண்ணை யாரேனும் சுலபமாக தெரிந்துக்கொண்டு-விடுவார்களோ என்ற பொறாமை தான்! சிக்கினேன் கண்ணழகியிடம். “மவனே நீ ஃப்ராடுன்னு எனக்கு மொதல்லயேத் தெரியும் டா” என்று தான் பேசவேத் துவங்கினாள். யாரு ஃபோன் நம்பர் என்று கேட்டதும், நான் “வாயடி”யின் எண் என்று கூறியதும், அவள் சிரித்த சிரிப்பில், பெண்ணாக இருப்பதன் கெத்தைப் பெண்களே உணரவில்லை என்று நான் புரிந்துகொள்ளத் துவங்கிய முதல் அவமானம். வீராப்புக்கு தான் நம் கெத்தெல்லாம். ஒரு பெண் சிரித்து, ஏளனம் செய்து, உதாசினப்படுத்தி, நக்கலாகப் பார்த்துக் கலாய்த்தால் கோபமும் வராது, நிம்மதியும் இருக்காது. கொள்ளை அழகு! வேண்டாம் ஒதுங்கு, என்று தோன்றும். மொக்கை வாங்கிக்கொண்டே இருந்தேன், இன்றைக்கும் அக்கா என்று கூப்பிட இஷ்டம் இல்லாத கண்ணழகியை! (அவர்களிடம் சொல்லிவிட்டு தான் இதை எழுதுகிறேன்!)

அவள் கண்டே பிடிக்கவில்லை. கண்ணால் பிடித்துவிட்டால். ‘ஹிப்னாடிஸ்ம்’ என்று தோன்றியது. ஆனால் அது ‘மெஸ்மெரிஸ்ம்’! அவள் கண் இட்டக் கட்டளையை என் வாய் பின்பற்றி, குக்கூவின் எண் என்று உலறியதும் தான் புரிந்தது, அப்போது தான் அவள் அதைக் கண்டேப் பிடித்திருந்தாள் என்று. அவள் ‘மெஸ்மரிசத்தில்’ மூழ்கி நானாய் உலறி இருக்கிறேன் என்று டியூப் லைட் லேட்டாக எறிந்தது! அன்றில் இருந்து குக்கூவிடம் தொலைப்பேசி எண்ணைத் திருடியதைச் சொல்லிவிடும் அபாயத்தைக் காட்டியே பல பேக்கரி பஃப்ஸ்கள், கேக்குகள், பாணிப் பூரி, சாண்ட்விச்சுகளாய் என் தந்தையின் காசு, அவருக்கேத் தெரியாமல் அவர் முதல் நாள் தங்கை என்று சொன்ன அதே அத்தை சீனியருக்கு, சீராய்ச் சீரழிந்துப் போனது!

எனக்கு அன்றைய காலக்கட்டத்தில் சுத்தமாக பிடிக்காத ஒரு பெண்ணுடன் என்னை ஒப்பிட்டுக் குக்கூக் கலாய்ப்பதாக வாயடி ஒரு தகவளைத் தட்டி எழுப்பினான். ஏலியன் போல் வகுப்பறையில் முரண்பட்டுத் தனித்துக் “காதல் கொண்டேன் தனுஷ்”-ஐப் போல் நடந்துகொண்டிருந்த நான், ‘வல்லவன் சிம்பு’வாக அப்க்ரெட் ஆகி யோசிக்கத்துவங்கிவிட்டத் தருணம் வந்தது! கடுப்பில் நான் குக்கூவிற்கு ‘வயதான’ ஒரு பட்டப்பெயர் ஒன்றை வைத்தேன். மதுரைக்காரனான எனக்கு பட்டப்பெயர் தானே உயிர் மூச்சு! அங்கே சொந்தப் பெயரை எவனும் பயன்படுத்தமாட்டான்! பட்டப்பெயரைத் தான் பயன்படுத்துவோம்! ஆனால் பெண்களுக்குச் செல்லப் பெயர் கூட வைக்கலாம், பட்டப்பெயர் வைக்கக் கூடாது என்று என் பள்ளி மாணவர்கள் (ஹீரோக்கள் மற்றும் சிலரைத் தவிற) செருப்பால் அடிக்காதக் குறையாய் எனக்கு உணர்த்தினர்!

குக்கூ அழகாய் இருந்தாள்! சந்தோஷமாக சிரிப்பாள்! நெருங்கிய தோழியுடன் சேர்ந்துகொண்டு புத்தகத்தை பெஞ்சிற்கு அடியில் வைத்து காப்பி அடிப்பது, பசங்களுக்கே சவால் விடும் விதத்தில் இருக்கும்! அதாவது ஒருவர் நன்கு படித்து முதலில் எழுதி விடைத் தாளை ஒப்படைத்துவிட்டு, புத்தகத்தை நைசாக பெஞ்ச் அடியில் வைத்து, அந்த இன்னொருவர் பார்த்து எழுதுவதற்கு உதவுவர்! பெருமையாய்ப் பொறாமையாய் இருக்கும் அவர்களது நட்பு!

பெண்களைத் தொந்தரவு செய்வதன் காரணம் புரிதலின்மை தான்! பெரும்பாலான புரிதலின்மைக்குக் காரணம் தாழ்வு மனப்பான்மை தான்! பெண்கள் சந்தோஷமாக இருந்தாளே, அவர்களைத் தவறாக பேசும் உலகில் தான் நாம் இன்னும் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம்! அழகும் உல்லாசமும் சேர்ந்து இருக்கும் இடத்தைக் கண்ட ஒரு பதின்வயது பையன் என்ன ஆவான்? ஈர்க்கப்படுவான்! தவறில்லை! பலர் ஈர்க்கப்பட்டனர். அவளைத் தொந்தரவு செய்யவில்லை என்பது ஒரு நல்ல விஷயமாக இருந்தது! ஆனால் அவளிடம் பேச முடியாதத் தாழ்வு மனப்பான்மையில் அவளைத் தவறாகப் பேசுவது தான் புரிதலின்மை!

எனக்கும் அவளுக்கும் ஒரு ப்ரச்சனை இருந்ததால், நான் அவளுக்குப் பட்டப்பெயர் வைத்தேன்! சரி இல்லை தான்! ஆனால் தப்பாக இருந்தாலும், ஒரு காரணம் எனக்கு இருந்தது! அதை நியாயப்படுத்தக் கூடாது தான்! ஆனால் அந்த பெயர் அன்றுக்குள் மூன்று “செக்ஷன்” பசங்களுக்கும் பரவி, அவள் நடக்கும் இடங்களில் எல்லாம்  அவளை கிண்டல் செய்தனர்! கிண்டல் செய்த அத்தனைப் பேருக்கும் அவளுடன் பேச ஆசை இருந்தது தான் எதார்த்தமான நிதர்சன உண்மை! “நம்மை அவள் மதிக்க மாட்டாலோ?” என்ற என்னத் தாழ்வு மனப்பான்மையில், சும்மா அவளைவிடத் தங்களை கெத்தாகக் காட்டிக்கொள்ள நினைத்ததன் விளைவு தான் இந்த கிண்டல்கள் உதிக்கக் காரணம்! எனக்கே என் மீது வெறுப்பு ஏற்பட்டது!

“இது ஒருவேள ஈவ் டீஸிங்க்-ஆ இருக்குமோ?” என்ற எண்ணம் உதித்து எனக்கே என்னைப் பிடிக்காமல் போனது! என்னதான் நான் தனிப்பட்ட முறையில் பெயர் வைத்திருந்தாலும், அதை வாயடி முன்னே கூறிவிட்டது தான் தவறாகிவிட்டது. மனைவியிடம் பழையக் காதலியப் பற்றிக் கூறுவது குடும்பங்களில் உள்ள அனைவருக்கும் சுய தந்தி அடிப்பதற்கு சமமான ஆபத்து என்றால், அதைவிட பலமடங்கு ஆபத்து வாயடியை வைத்துக்கொண்டே ரகசியம் பேசுவது. அவள் பட்டப்பெயர் “வைக்கோ” கூட்டணி வைக்கிறார் என்று தானேப் பறப்பிக்கொண்டு மார்கெட்டில் தன் மவுஸ்-ஐத் தானேஏற்றிக்கொள்வதைவிட அதிவிரைவில் பரவியது! அவளை அனைவரும் நான் வைத்தப் பட்டைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டுக் கலாய்த்தபோது, எனக்கே பக்கென்று இருந்தது!

ஆனால் சத்தியமாக என்னால் அந்த சூழ்நிலையை அவளைப்போல் கெத்தாக கையாண்டு இருக்கவே முடியாது! அவள் ஒரு பெண்! பெண் என்பவள் எவ்வளவு வலியவள்? பெண்ணே “வலி-அவள்” தான்! உணர்ந்தேன்! தலை நிமிர முடியாமல் தவித்தேன்! இத்தனையும் கடந்து எதார்த்தமாய் வாழும் பக்குவம் இருந்ததால் தான் அவள் பெண்ணாகப் படைக்கப்பட்டிருப்பதும், அவளை அன்றுத் தலை நிமிர்ந்துப் பார்க்கக்கூட வலிமை இல்லாதக் காரணத்தால் தான் நான் ஆணாகப் படைக்கப்-பட்டுள்ளேன் என்றும் உணர்ந்துகொண்டேன்! பற்றாக்குறைக்கு நண்பன் வாயடி வேறு! என்னை அவனுடன் கூட்டிக்கொண்டே அவள் அருகில் சென்று, அவளை நான் வைத்தப் பட்டப்பெயர் சொல்லிக் கூப்பிட்டான். நான் ஒதுங்கினேன். அவள் முறைத்தாள்.

கோபத்தில் சைக்கிள் ஸ்டாண்டில் யாரும் இல்லாத சமயமாய்ப் பார்த்து என்னைக் கடிந்து விட்டுச் சென்றாள். மற்றவர்கள் வரும் அறிகுறித் தெரிந்ததும் கடகடவென்றுக் அவ்விடத்தை விட்டு வெளியே விரைந்தாள்! அவளிடம் இருந்து வந்த கொந்தளிப்பு, தந்தூரி நான் சாப்பிட தக்காளிச் சட்டினித் தொட்டுக்கொள்வதைப் போன்ற உணர்வாய் வெளிப்பட்டது! ஆனால் என் அன்றைய புத்தியில் என்னை யார் திட்டியிருந்தாலும் கடுப்பாகியிருப்பேன்! ஆனால், அன்று நான் நிதானமாய் மௌனம் காத்து நின்றுகொண்டிருந்தேன்! “அவள் இத்தனை அவமானங்களைக் கடந்தும் உன்னைத் தனியாய் இருக்கும்போது தானேத் திட்டினாள்? அவள் படும் துயரத்தைக் கூட உன் மீது ஏவிவிடாமல் ஒதுங்கிப்போகிறாள்” என்று உள்ளுக்குள் தோன்றியது. வாழ்க்கையையே எனக்கு ஒரு நாளில் கற்றுக்கொடுத்தால் குக்கூ! “நான் உன் லைஃப்-ல அப்டி என்ன பண்ணிட்டேன் ப்ரோ” என்று அவள் பலமுறை என்னைக் கேட்டுக்கொண்டிருப்பதன் விடை ஒரு நாள் என் எழுத்தில் வரும் என்று சொன்னேன்! படிப்பாள் என்று நினைக்கிறேன்!

அதனால் அன்று அவள் என்னைத் திட்டியதும், இதற்கு மேலும் என்னைப் பேசலாம்! தப்பில்லை என்று தோன்றியது! வாயடி மட்டும் என்னை உசுப்பினான். ஆனால் நான் கோபிக்க முடியாமல் கடமைக்கென்றே அவனுடன் நடந்தேன். பெண்கள் அனைவரும் மிதிவண்டி சங்கமம் போட்டுக் கூடி ஏதோ பேசிக் கொண்டிருக்கையில், கத்திக் கூப்பாடு போட்டு என்னைத் தான் அவமானப் படுத்தப் போகின்றனர் என்று தயங்கிக்கொண்டே நடக்காமல் நின்றுகொண்டு இருந்தேன்! பெண்கள் கெத்து எல்லாம் வேற லெவல் நண்பர்களே! அவர்கள் நம்மைக் கலாய்ப்பார்கள் என்ற எண்ணமே நம்மை வீழ்த்திவிடும்! எம் பள்ளி மாணவிகள் ஒரு உதாரணம்! இது பெண்கள் மீதேத் திணிக்கப்பட்டுவரும் பலத் தொந்தரவுகளுக்கு முற்றுப்புள்ளியும் வைக்கும் என்று உணர்த்தினர்! ஆனால் அவர்கள் கோரஸ்-ஆகக் கத்திக் கலாய்த்தது வாயடியத் தான் என்றதும், வீட்டுப் பாடம் முடிக்காமல் வந்த வகுப்பில் இருந்து வெளியே, நம்மை வேறு ஒரு டீச்சர் வேறு ஒருக் காரியத்திற்கு அழைத்துக்கொண்டு தப்பிக்கச் செய்தால் எப்படி இருக்குமோ, அப்படி ஒரு சந்தோஷம் எனக்குள் ஏற்பட்டது! புரிந்தது! என் மீது அவர்களுக்கு அவ்வளவு கடுப்பில்லை என்று!

என்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன்! “மைக்கெல் மதனக் காமராஜன்” படத்தின் பாட்டிப்போல் அங்கும் இங்கும் நடந்துகொண்டே அப்பாவின் சட்டைப்பையில் இருந்த சில்லரைகளை நைசாகத் திருடிக்கொண்டு, நான் சேகரித்து வைத்திருந்த அந்தத் தொலைப்பேசி எண்ணைக் கையில் எதற்கும் இருக்கட்டும் என்று எழுதிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினேன்! டெலிபோன் பூத்! ஃபோன் செய்தேன்! அவளது குரல். நுங்கு-இளநீர் குடிக்கும்போது தொண்டையில் என்ன உணர்வு ஏற்படுமோ, அதை என் காதிற்குள் பாய்ச்சிக் கிசுகிசுத்துக் கிளிர்ச்சிட்டது அவள் குரல்! அந்த குரல் எனக்குப் பிடித்திருந்தது. ஆனால் வார்த்தை வரவில்லை. மீண்டும் “ஹெல்லோ யாரு?” என்றதும் புன்னகைத்தது என் மௌனம்!  தொலைப்பேசியை துண்டித்துவிட்டேன்! கடைக்காரன் “என்னடா தம்பி லவ்-ஆ?” என்றான். “தங்கச்சி மாதிரி-ண்ணே” என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன்! ஆனால் அக்கா என்று சொல்லியிருக்க வேண்டும்! வயதிலும் சரி (சில மாதங்கள்), வழிகாட்டுதலிலும் சரி! பின் பலமுறை அவ்வப்போது ஃபோன் பூத்திற்கு சென்று மௌன விரதம் இருப்பதற்கென்றே, கிரிக்கெட்டில் ‘டாஸ்’ போட சில்லரை வேண்டும் என்று பீளா விட்டுவிட்டு, அப்பாவின் சில்லரைகளைக் கரைப்பதையே ஒரு வேலையாக வைத்திருந்தேன்.

“சகுனி” அக்கா சீனியர் ஒருவர் எங்களுக்கு நாட்டாமை செய்து வைத்துத் தலைமைத் தாங்கிக்கொண்டு இருந்தார். அக்காவும் அவளை நான் வைத்தப் பட்டப்பெயர் வைத்துக் கூப்பிட, குக்கூக் கொந்தளித்ததில் வாயடி மீது தான் பெரும் கோபம் என்று மீண்டும் உறுதியானது! குக்கூவும் கூட்டாளிகளும் என்னை அந்தப் பிடிக்காதப் பெண்ணுடன் ஒப்பிட்டதில் தான் நான் உணர்ச்சிவசப்பட்டுப் பட்டப்பெயர் வைத்துவிட்டேன் என்று விளக்கியும் இருக்கிறார், இந்த “சமரச சகுனி”! மனஸ்தாப மருத்துவமனையில், பழைய பேஷன்ட்-ஆன என்னை டிஸ்சார்ஜ் செய்யும் மனப்பான்மை அவர்களுக்கு வந்து ஃபுல் ஃபோக்கஸ்-ஸில் புதிய பேச்ஷன்ட் வாயடியை அட்மிட் செய்துகொண்டனர்! அன்றில் இருந்து அவன் மீது மட்டுமே மனஸ்தாபத்தில் கோபித்துக்கொண்டு இருந்தனர்!

குக்கூ மிதிவண்டியில் சிறகடித்து வீடுத் திரும்புவது தெரிந்த விஷயம் தான்! அடுத்த நாள் அவள் சைக்கிள் ஓட்ட ஓட்ட, அவள் வேகத்திற்கு ஈடுகட்டி, வாயடியோ அவள் அருகில் அவளைத் திட்டிக்கொண்டே ஓடிய காட்சி, படுக் கேவலமாக இருந்தது! நான் விலகி நின்றுகொண்டேன்! நடப்பதில் மட்டும் இல்லை! நட்பிலும்! ஆனால் தெரு முனையில் ஜூனியர் பெண்கள் நிறைந்த பகுதியில் மிதிவண்டியை ஒரு நொடி நிறுத்தி, பசங்களே அவனுக்கு வைத்தப் பட்டப்பெயருடன் புணர்ச்சி செய்து ஒரு “பீப் வார்த்தை” சேர்த்துக்கொண்டு குக்கூ கர்ஜித்தாள்! வாயடி உடைந்தான்! ஜூனியர் மாணவிகள் வெடித்துச் சிரித்தனர். ஏளனக் கடல் சுனாமியாய்த் தெறித்து, வாயடியை வெட்க வெல்லம் அவமானக் கரைக்குத் தள்ளியது! ஓடவிட்டு நகர்ந்தாள்! நான் வாயடைத்து நின்றேன்! சிரிப்பில்!

அடுத்த நாள் யோசிக்காமலேயே பள்ளி முடிந்ததும் சைக்கிள் ஸ்டாண்ட்-இல் அவளை “ஸிஸ்” (சிஸ்டரின் சுருக்கம்) என்று அழைத்தேன்! “உன் ஸிஸ்-அ இப்டி தான் ட்ரீட் பண்ணுவியா?” என்று வாயால் அறைந்தாள்! “சுத்தி ஆள் இருக்கும்போது தான் கலாய்ப்பியா? தனியா ‘எக்ஸ்ப்ளெய்ன்’ பண்ணித் தொலஞ்சுருக்கலாம்!” என்று கூறியதும், கணிதப் பரிட்சைப் போல் விடைத் தெரிந்தும், வினாவை விடையை நோக்கி “சால்வ்” செய்யத் தெரியாத கடைசி பென்ச் மாணவனாய் உள் மனம் தவித்தது! விளக்கம் சொல்லக் கூடத் தகுதி இல்லை என்று எனக்குப் புரிந்தது! நான் கேட்கவேண்டிய மன்னிப்பை அவள் கேட்டாள், என்னை வேறு ஒரு பெண்ணுடன் ஒப்பிட்டுப் பேசியதற்கு! நான் அழுகாதக் குறையாய் முகத்தை வைத்துக்கொண்டு “சாரி” என்றேன்! அவள் புரிந்துகொண்டாள்! பெரும்பாலும் நம் வயதை விட மனதளவில் இரண்டு மூன்று வயது கூடுதல்-ஆன ‘மெச்சூரிட்டி’யுடன் பெண்கள் நடந்துகொள்வார்கள் என்று, அவளை ஆறுதல் படுத்தச் சென்ற என்னை, அவள் ஆறுதல் படுத்தி அனுப்பி வைத்ததில் தான் புரிந்துகொண்டேன்! இனிமேல் நான் அவளுடன் பேசக் கூட மாட்டேன் என்று உறுதிமொழி அளித்துவிட்டு நகர்ந்தேன்! அன்று அவள் என்னைவிட்டுத் தொலைவில் நிம்மதியாய் மிதிவண்டியை மிதித்து அவுட் ஆஃப் ஃபோக்கஸ் ஆன காட்சி இன்றும் என் பள்ளித் தெருவில் ஓவியமாய் நினைவு-கோள் வரைகிறது!

பள்ளியில் அவ்வப்போது எதிரில் வந்தால் முன்னைப்போல் கோபம் இல்லை. அழகாக சிரிப்பால். நானும் பிடிக்காத பக்கத்துவீட்டுக்காரர்களை வெளியூரில் சந்தித்தால், புதுப்பாசம் பிறந்து, பொங்கிப் புன்னகைப்பதுப்- போல் புன்னகைப்பேன்! பேசுவதற்குக் காரணம் கிடைக்கவில்லை! வானத்தில் நாம் ரசித்துக்கொண்டிருந்த பட்டம், டக்கென்று டீல் போட்டு அறுக்கப்பட்டு, நம் மொட்டைமாடியில் தவறி விழுவதைப்போல் ஒரு செய்தி வந்தது! பேட்மிட்டன் ஆட அவள்  தேர்வாகி இருந்தாள் என்று! சொன்னது வாயடி என்றாலும், அவனைக் கழட்டிவிட்டு, வகுப்பு வாசலில் அவளை மடக்கி நின்றுப் பாராட்டினேன்! அவள் ‘தேங்க்ஸ்’ உடன் சேர்த்து என் பெயரை உச்சரித்தாள்! என் பெயர் இவ்வளவு இனிமையாய் இருக்கின்றது என்பதை நானே உணர்ந்த நொடி அது! பின் அவ்வப்போது ‘க்ளாஸ் லீடர்’ என்ற முறையில் என்னைப் பெயர் சொல்லிக் கூப்பிட வேண்டிய கட்டாயம் அவளுக்கு வந்தது! எனக்கு அது பிடித்திருந்தது! அவளுடன் பேச வேண்டும் என்று ஆசையாய் இருந்தது. தயக்கம்! “நான் தான் ‘ஸிஸ்’ என்று சொலிவிட்டேனே! என்னைத் தவறாக நினைத்துக்கொள்ள மாட்டாள்” என்று தோன்றியது! இருந்தாலும் ஒரு தயக்கம் தான்! “மதுரை டூ சென்னை” தேசிய நெடுஞ்சாலை வழியே 462 கிலோமீட்டர் என்றாலும், மனதளவில் இன்னும் பல ஆயிரம் கிலோமீட்டர்களைக் கடக்க வேண்டிய சோர்வு இருந்தது, எனக்கு மட்டுமே தெரிந்திருந்த நவீன உண்மை!

அவள் குரல் பிடித்திருந்தாலும், பிடிக்காதப் பள்ளி பஜன்-களில் அவள் பாடுவது சம்மக் கடுப்பாக இருக்கும்! கோரஸ்-ஆக வேறு பாடுவார்கள். பஜன் எல்லாம் பாட விருப்பம் இல்லை என்று ‘ஸ்ட்ரைக்’ செய்யலாம் என்று தோன்றும் வேளையில், வெள்ளிக் கிழமை பஜன்களுக்குப் பதில், பயாலஜி க்ளாஸ் வைத்துவிட்டால் என்ன ஆவது என்று தோன்றியதும், வாயைப் பொத்திக்கொண்டே வேண்டாவிருப்பாக பஜன்களில் அமருவேன்! ஆனால், குக்கூ இருக்கிறாள் என்றுப் பொறுத்துக்கொள்வேன்! 2003 உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் ரிக்கி பான்டிங்க்-ற்கு அடிப்பட்டிருந்தால் எவ்வளவு மகிழ்ந்திருப்போமோ, அவ்வளவு மகிழ்வாக இருந்தது எங்கள் சொர்ணாக்கா “ஈ.ஓ” மேடம் காய்ச்சலால் பள்ளிக்கு வரவில்லை என்ற நற்செய்தி! எங்கள் புவியியல் ஆசிரியர் “கூலிங்க் க்ளாஸ்” மேம், ஏதோ ஒரு “ஈ.ஓ” மேடத்தின் வேலைக்கு ஈடுகொடுக்க வகுப்பை விட்டுவிட்டுச் சென்றார்கள். முன்னைப்போல் டெர்ரர் க்ளாஸ் லீடர் நான் இல்லை! அதனால் பாட்டுக்குப் பாட்டு (அந்தாக்ஷரி) விளையாடும் வாய்ப்பை உருவாக்கினேன்!

அவள் அவ்வளவு நன்றாகப் பாடுவாள் என்பதை அருகில் இருந்துத் தெரிந்துக் கொள்ளும் வாய்ப்பு! விளையாடினோம், அந்த “கூலிங்க் க்ளாஸ்” மேடம் குடுத்த வகுப்புப் பாடத்தை மறந்து! “உ” வரிசையில் பாடவேண்டிய நான், “உன்னாலே உன்னாலே விண் ஆளச் சென்றேனே” என்ற ‘உன்னாலே உன்னாலே’ படப்பாடலைப் பாடியதும் குக்கூவோ, “ஏ லூசு! அதோட ஸ்டார்ட்டிங்க் ‘முதல் முதலாக முதல் முதலாக பரவசமாகப் பரவசமாக வா வா’ன்னு வரும்! இஷ்டத்துக்குப் பாடவேண்டியது! உன் டர்ன் ஓவர்!” என்று உரிமையாய்க் கலாய்த்து, முனுமுனு முன்கோபத்தை வெளிப்படுத்தி உதட்டை மடக்கி என்னைப் பார்த்த நக்கலில், முதல் முறை நட்பு கலந்திருந்தது புரிந்தது. “லூசு” என்று சொன்னது எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது! யுவன் ஷங்கர் ராஜா உதவினார்! ‘சீ’யில் பாடவேண்டிய நான் “சீ.பி.ஐ எங்கே? தேடச் சொல்லுக் கொஞ்சம்” என்ற பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் இருந்து வீம்பிற்கென்றே பாடினேன். இன்னொரு மாணவி குக்கூவிடம் கிசுகிசுக்க, குக்கூவோ என்னைக் குறுக்கிட்டு “ஹெலோ! உன் இஷ்டத்துக்குப் பாடுவியா?” என்றதும், “ஏன்?” என்று அப்பாவியாய் நடித்தேன்! “லூசு! ஒரு ரோஜா எனைப் பறித்ததுன்னு தான் பாட்டு ஸ்டார்ட் ஆகும்” என்று முன்-பல்லவியைச் சொல்லிக்காட்டி மடக்கி முன்கோபித்தாள்! பாயின்ட் கிடையாது என்றாள். ஆனால் நான் ஸ்கோர் செய்தேன்!

மீண்டும் அந்த “லூசு” என்ற வார்த்தை நெருக்கத்தை உருவாக்கியது! இத்தனை நாள் கோபிக்கும்போது இருந்த அவமானம் இப்போது இல்லை. தலையை சொறிந்துகொண்டே நாக்கைக் கடித்தேன். அவள் சிரித்தாள். சிலிர்த்தது! என்னுடன் பேசியதில் நான் “ஈ.ஓ” மேடத்தின் உலவாளி (தி ஸ்பை) இல்லை என்பதை உணர்ந்துகொண்ட அவள், ஒரு வழியாக என்னை “ஆர்க்குட் இணையதளத்தில்” ஃப்ரெண்ட்-ஆக அக்ஸெப்ட் செய்து கொண்டாள். என் பள்ளி ஆண்களில் அவளுடன் முதல் முதலில் ஆர்குட்-டில் நட்பான பெருமை எனக்கு அன்று மகுடம் சூட்டியதைப்போல் இருந்தது. ஏன் என்றால் நான் அவளை “ஸிஸ்” என்று தான் அழைப்பேனே! அந்த நம்பிக்கை தான்! ஆனால் நேரில் பேச சச்சின் டென்டுல்கர் தொன்னூத்திச் சொச்சம் ரன்-களில் பேட்டிங்க் செய்வதுப்போல் ஒரு தயக்கமும் நடுக்கமும் இருந்துகொண்டே இருந்தது!

பத்தாவது “ரிசல்ட்”ற்கு முந்தைய நாள் அவளுடன் ஆர்க்குட்டில் பேசிக்கொண்டு இருந்தேன்! அவளுக்குத் தேர்வு முடிவுகளை எண்ணி பயம்! நான் அவளை ஆறுதல் செய்ய முயற்சித்துக்கொண்டு இருந்தேன்! நான் முடிவுகளை எண்ணி அஞ்சவில்லை என்று சொன்னதை அவள் நம்புவதாக இல்லை! என்ன செய்தால் தான் நம்புவாள் என்று அவளிடமே கேட்டேன். “ப்ரோ ப்ரோ! ச்சும்மா நடிக்காத! நீ ஜாலியா இருக்கன்னு நான் எப்டி நம்பறது??? நைட் லாம் வண்டி ஓட்டி ஊர் சுத்துவேன்னு சீன் போடுவல்ல? நான் இப்ப வீட்டுக்கு வெளில போய்ப் பக்கத்து வீட்டு நெய்பர்ஸ் கூட வாசல்ல நின்னுப் பேசப்போறேன்! நீ ஊர் சுத்தறத சப்போஸ் என்னால பாக்க முடிஞ்சா, நீ பயப்படலன்னு ஒத்துக்கறேன்” என்று சைல்டிஷ்-ஆக ஒரு கட்டளையிட்டாள்!

மணியோ பத்து! வயதோ பதினைந்து! வீட்டில் விடுவார்களா? அப்போது தான் என் வீட்டிற்கே அன்றைய காலக்கட்டத்தில் பரிட்சியம் இல்லாத நண்பன் ஒருவனை இழுத்தேன். அவன் பாசத்திலும் சரி, நட்பிலும் சரி, பெண்கள் என்று நினைக்கும் அந்த ஒரு நொடியிலும் சரி; பொழிந்து வழிந்துத் தள்ளும் “மழை” அவன்! கண்ணாடிக்காரன். இடது கைக்காரர்கள் உருப்படமாட்டார்கள் என்னும் நம்பிக்கையை மூட நம்பிக்கை ஆக்கிய எதார்த்தமானத் தன்மான சிங்கம்! நண்பன் “மழை” என்பவன், ரிசல்ட்டை நினைத்து பயந்து எலி மருந்து குடித்துவிட்டான் என்றும், அவனை மருத்துவமனைக்குச் சென்றுப் பார்க்க வேண்டும் என்றும் அக்காவை மட்டும் தனியாய்க் கூட்டிக்கொண்டுப் போய் புருடா விட்டு நம்ப வைத்தேன்! அவள் தானும் வருவதாகக் கூறி அக்கரைக் கடுப்புகளை அரங்கேற்ற, நானோ நண்பன் “மழை”யின் தாத்தாவை நான் தான் கூட்டிக்கொண்டுப் போகவேண்டும் என்று நம்ப வைத்து ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டேன்! என் அக்கா வண்டியும் கொடுத்துப் பெட்ரோல் போட “30” ரூபாய்க் காசையும் கொடுத்து அணுப்பி வைத்தாள்! ஆம்! அன்றைக்கு கிட்டத்தட்ட ஒரு லிட்டர் போட்டுக்கொள்ளலாம் என்னும் பாக்கியம் இருந்தது!

ஸ்கூட்டியில் அவள் வீட்டிற்கு முன்னால் சென்று நின்றேன். வீட்டின் காம்பவுண்டிற்குள் ஒரு பெஞ்ச்! பெஞ்ச்சில் அவள்! ரிசல்ட் பயம் தெருவிளக்கு வெளிச்சத்தின் தொலைவிலும் ப்ரகாசித்தது. என்னைப் பார்த்ததும் புருவத்தை உயர்த்தினாள்! நான் தோள் குளிக்கினேன்! பாக்கிஸ்தான் எல்லையில் நிற்பதுப்போல் நடுரோட்டில் நின்றுகொண்டே நான் “ஹாய்! ஆல் தி பெஸ்ட்” சொன்னதும், இந்திய எல்லையில் இருப்பதுப்போல் பாதுகாப்பாக வீட்டு காம்பவுண்டிற்குள் இருந்த  குக்கூ எழுந்து இரண்டு அடி வெளிச்சத்தை நோக்கி முன்னே நடந்து வந்த அந்தத் தருணம் இன்னும் உறைந்த கணமாக என் இதயத்தில் இருக்கின்றது.  என்றோ அவளிடம் இனி பேசக்கூட மாட்டேன் என்று உறுதியளித்ததில், அவள் என்னைவிட்டுத் தொலைவில் நிம்மதியாய் மிதிவண்டியை மிதித்து அவுட் ஆஃப் ஃபோக்கஸ் ஆன உறைந்தக் காட்சி அன்று கரைந்துவிட, அவள் என்னை நோக்கி வந்து “ஹாய்” சொல்லி ஃபோக்கஸ்-ற்கு வந்த நொடி, காட்சி வடிவமாய் இன்றும் உதிரத்தை உலுக்கி நினைவலையை வருடும்!

எனக்கு அவள் கைக் காட்டி “ஹாய்” சொன்னதும், பதிலுக்கு நான் “ஹா-ஹாய்” என்று என்னை அறியாமல் சொன்னது ஒரு விபத்து! ஆனால் இன்றுவரை என் மின்-உரையாடல்களில் ஆரம்பச் சொற்கள் “ஹா-ஹாய்” என்று ஸ்டாம்ப் குத்தப்பட்டு அடையாளம் காணப்படும் அளவு என்னை பாதித்திருக்கிறது, அந்த நாள் அவளை நல்லிரவில் சந்தித்தக் காட்சி! எனக்கு ஒரு முக்கியமான புரிதலையும் அடையாளத்தையும் வழங்கியவள் இந்த குக்கூ தான்! அந்த நொடியை நான் உணர்ந்த கணத்தில் அவள் என் கையில் ராக்கிக் கட்டிக்கொண்டிருந்தால். இம்முறை நான் “ஸிஸ்” என்று கூப்பிட்டப்போது, என்னைத் திட்ட அவளிடம் காரணம் இல்லை! “ப்ரோ”என்று சொல்லும் அளவு நட்பு உருவானது! மெட்ராஸ்-ல் உள்ளவர்களைப் புரிந்துகொள்ளக் கொஞ்சம் காலதாமதம் ஆகின்றது என்றும், புரிந்துகொண்டால் இதைப்போல் ஒரு ஊரில்லை என்றும் தோன்றியது! முதல் முறை என் மதுரை நண்பர்களையே மறக்கடிக்கச் செய்த நட்பு ஒன்று உருவாகியதை உணர்ந்தேன்! இவள் மீது நட்பும், மெட்ராஸ் மீது காதலும் வந்தது!

“வணக்கம் வாழ வைக்கும் சென்னை” என்று புரிந்துகொண்டதற்கு “குக்கூ”விற்கு நன்றிகள்!

– ‘எழுத்தாணி‘ ஆகிய நான்

Related posts

ஸ்மார்ட்போன் , டேப்லேட் சாதனங்களை கொரோனா சிகிக்சை மையத்தில் அனுமதிக்குமாறு மத்திய அரசு சுற்றறிக்கை

Penbugs

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு

Kesavan Madumathy

விளையாட்டு மைதானங்களை திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு – தமிழக அரசு

Penbugs

வாட்ஸ்அப் மூலமும் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் பெறலாம்: புதிய வசதி அறிமுகம்

Penbugs

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

லீ மெரிடியன் ஹோட்டல்களை வாங்கியது எம்ஜிஎம் ஹெல்த் கேர்

Penbugs

ரெம்டெசிவிர் மருந்து வினியோக மையம் நேரு ஸ்டேடியத்திற்கு மாற்றம் – தமிழக அரசு தகவல்

Kesavan Madumathy

ரூ.3000 கோடி உடனடியாக தேவை-பிரதமரிடம் முதலமைச்சர் வேண்டுகோள்

Penbugs

ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

ராயபுரம், தண்டையார்பேட்டையில் 70% பேர் குணம்

Penbugs

மே 1 முதல் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி

Kesavan Madumathy

மெரினா செல்ல இன்று முதல் அனுமதி

Penbugs

1 comment

Comments are closed.