நேர்கொண்ட பார்வை..!

“நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
நிமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவதில்லையாம்”

பாரதியாரின் பாடலில் இருக்கும் ஒரு வரியே தலைப்பாகவும் , பரத் சுப்ரமணியமாக கதையின் நாயகனுக்கு பெயர் சூட்டுவது என ஆரம்பமே அதகளம் செய்திருக்கிறார்கள் ..!

விஸ்வாசம் என்ற மாபெரும் வர்த்தகரீதியான வெற்றிக்கு பிறகு அஜித்குமார் எந்த மாதிரியான படத்தை தேர்வு செய்வார் என்ற எதிர்பார்ப்பு எல்லாரிடமும் இருக்கும்போது அவர் தேர்ந்தெடுத்த படம் ” பிங்க்”

மீண்டும் தனது பாணியிலான ஒரு கதையையே கூட அவர் தேர்வு செய்து இருந்தால் தயாரிப்பாளர் அஜித்தின் வழிதான் வந்து இருப்பார் இருந்தும் ஒரு ஹீரோயிசம் அதிகம் இல்லாத இந்த கதையை தமிழாக்கம் செய்யலாம் என்ற எண்ணம் அவருக்கு வந்ததற்கே மிகப்பெரிய சல்யூட் …!

இயக்குனர் வினோத் முந்தைய படைப்புகள் இரண்டும் அவரின் சொந்த எழுத்தில் வந்தவை அதுவுமின்றி இரண்டுமே விமர்சனம் மற்றும் வர்த்தக ரீதியாக பெரிய வெற்றி பெற்றவை இருந்தும் அஜித்தின் வேண்டுகோளுக்கிணங்க இந்த படத்தை தமிழாக்கம் செய்ய சம்மதித்தது அவரின் பெருந்தன்மையே ..!

ஒரு படம் நன்றாக வர வேண்டுமெனில் நடிகர்கள் தேர்வு மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வுதான் முக்கியம் அதை சரியாக செய்தாலே படத்தின் வெற்றி நிச்சயம் .வினோத் தனக்கானவர்களை சரியாகவே தேர்ந்தெடுத்துள்ளார் என்பது படத்தை காணும்போது நன்றாக புலப்படுகிறது.  அது பாண்டே முதல் பெண் காவலாளி வரை அனைவருமே தேவைப்பட்ட நடிப்பை வழங்கியுள்ளனர்..!

மூன்று பெண்களை சுற்றி நடக்கும் ஒரு கதைதான் இதில் ஏன் அஜித்குமார் என பல இடங்களில் நிரூபிக்க வைக்கிறார் முதல் விசயம் இந்த மாதிரி கதைகளத்திற்கு இளைஞர்களை திரையரங்கிற்கு அழைத்து வர ஒரு முகம் தேவை அந்த முகமாக அஜித் இருப்பதே படத்திற்கான மொத்த பலம் ரசிகர்கள் அரங்கிற்கு வந்தால்தான் நாம் சொல்ல நினைக்கும் அனைத்தையும் சொல்ல முடியும் ,அடுத்து தமிழ்நாட்டில் ஒரு பெரிய உச்ச நட்சத்திரமாக இருக்கும் ஒருவர் இத்தகைய கருத்தினை சொல்வதால் அது பல பேரிடம் நிச்சயமாக சிறு மாற்றத்தையாவது ஏற்படுத்தும் அல்லது குறைந்தபட்சம் ஒரு விவாதத்தையாவது ஏற்படுத்தும் …!

கடந்த பத்து வருடங்களில் அஜித் மீதான எதிர்மறையான விமர்சனங்களில் ஒன்று  நடிகர் அஜித்தை பார்க்க முடியவில்லை என்பது அதனை இந்த படத்தில் முழுமையாக முறியடித்துள்ளார் சின்ன சின்ன கண் அசைவுகள் , அளவான பேச்சு என ஒரு கிளாசிக் அஜித்தை நிச்சயமாக காணலாம்..!

யுவனின் பிண்ணனி இசை படத்தின் கதையோட்டத்திற்கு ஏற்ற வகையில் சிறப்பாக அமைந்துள்ளது முக்கியமாக இடைவேளைக்கு முந்திய சண்டைக் காட்சிகளில் பிண்ணனி இசையில் மிரட்டி உள்ளார் யுவன்..!

ஷரத்தாவின் நடிப்பும் , நீரவ் ஷாவின் ஒளிப்பதிவும் படத்திற்கு மிகப்பெரிய பலம் ..!

படத்தோடு நிற்காமல் இது ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினால் அது படத்தின் வெற்றியை இரு‌ மடங்காக்கும் ..!

வினோத்தின் நேர் கொண்ட பார்வை அஜித்குமாரின் கண்‌ வழியாக ஒரு நல்ல கருத்துள்ள திரைப்படத்தை தகுந்த நேரத்தில் தந்துள்ளது  ..!