Penbugs
Short Stories

நேர் முகம்(ன் )

“ரமேசு … தம்பி ரமேசு”

அம்மா குரல் கொடுத்தாள்… உள்ளறையில் இழுத்து போர்த்தி தூங்கிக்கொண்டிருந்த ரமேஷ் 
எழுந்து போர்வையும் தலையணை சரி செய்து பாயை சுருட்டி வைத்து விட்டு  சமயலறைக்கு வந்தான்.

“என்னம்மா ?” “
எதுக்கு கூப்பிட்டீங்க ?” என்றான்.

“தம்பி.. உங்க அய்யன் காலைலயே வயக்கட்டுக்கு போய்ட்டாரு அவருக்கு சாப்பாடு 
கொண்டுபோகணும் பா” என்றாள் அம்மா..

“சரிம்மா.. இருங்க பல்லு வெளக்கிட்டு வந்துடறேன் ” என்றான்..

“சரிப்பா நீயும்  சாப்பிட்டு அய்யனுக்கு சாப்பாடு எடுத்துட்டு போ”

ரமேஷ் பல் துலக்கி குளித்து முடித்து வந்தான்.. ஒற்றை படுக்கை அறை கொண்ட  சிறிய ஓட்டு வீட்டில் சுவாமி மாடத்தில் இருந்து திருநீறு சிறிது எடுத்து நெற்றியில் இட்டுக்கொண்டு 
சாப்பிட அமர்ந்தான்..

சுடச்சுட இட்லியும் சின்ன வெங்காய சாம்பாரும் வைத்தாள் அம்மா.. சாப்பிட்டு முடித்து அப்பாவுக்கான சாப்பாட்டை எடுத்துக்கொண்டு வயக்காட்டிற்கு கிளம்பினான்.

நெய்வாசல்.. தஞ்சாவூர்க்கும் திருவாரூருக்கும் இடையில் உள்ள அழகான கிராமம்.
பச்சை புடவை போர்த்தியது போல வயல் வெளிகள் நிறைந்த செழிப்பான ஊர்..

மெல்ல மெல்ல கொஞ்சமாய் 
நாகரீகம் எட்டிப்பார்க்கும் கிராமம். சோழ வள நாடு சோறுடைத்து என்பதற்கு சிறந்த உதாரணமாக 
திகழும் இடம் நெய்வாசல், தஞ்சையிலிருந்து மன்னார்குடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையை
ஒட்டி தெரிந்த வயல்களில் ரமேஷின் அப்பா கருப்பனின் வயல்களும் உண்டு
கொஞ்சம் நஞ்சையும்
கொஞ்சம் புஞ்சையுமாய் ஒரு சில ஏக்கர்கள் சொந்தமாக இருந்தது.

சைக்கிளை வேலி ஓரமாக ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு சாப்பாடு இருந்த கூடையை 
எடுத்து சென்றான் ரமேஷ்.

தூரத்தில் அப்பா வரப்பு மாற்றி தண்ணீர் பாய்ச்சுவது தெரிந்தது.

வெயிலில் உழைத்து மெலிந்த கறுத்த தேகம்.. அப்பாவை பார்க்கும்போது லேசாக கண் கலங்கியது…

ரமேஷ் அந்த விவசாய குடும்பத்தில் முதல் பட்டதாரி தஞ்சை கல்லூரியில்தான்
எஞ்சினீரிங் முடித்தான்..

ரொம்ப கஷ்டப்பட்டு தான்
அவனை படிக்க வைத்தனர்
அங்கு இங்கு கடன் வாங்கியும் நகைகளை அடகு
வைத்தும் படிக்கவைத்தனர்..

“அப்பா ” அழைத்தான்..

“ரமேசு.. வா சாமி…!!
அப்பா மகன் இருவரும் மரநிழலில் அமர்ந்தனர்…

சாப்பாடு தூக்கை எடுத்து கொண்டு வந்து தட்டில் போட்டு கொடுத்தான் ரமேஷ்..

கையில் வாங்கிக்கொண்டே அவனிடம் பேச துவங்கினார்..

“எஞ்சாமி உனக்கு பரிட்சை ரிசல்ட் லாம் வந்தாச்சா ? மேற்கொண்டு என்ன பண்ண போறே ?”

“ரிசல்ட் இன்னும் ஒரு வாரத்துல வந்துடும்பா.. அதுக்கு முன்னாலே காலேஜ்ல கேம்பஸ் இன்டெர்வியூ 
போய்ட்டு இருக்கு நாளைக்கு நானும் கலந்துக்கணும் அதுக்கு காலேஜ் போகணும்.”

“கேப்பை கூழ் மாதிரி ஏதோ சொன்னியே அப்டினா என்ன கண்ணு  இன்னும் ஏதாவது மேற்படிப்பா ?”
வெள்ளந்தியாக விசாரித்தார் தந்தை…

வாய் விட்டு சிரித்த ரமேஷ்..
“கேப்பை கூழ் இல்லப்பா கேம்பஸ் இன்டெர்வியூ
அப்டினா சென்னை மாதிரி பெரிய பெரிய ஊர்ல கம்பெனி 
வெச்சிருக்கறவங்க என்னை மாதிரி காலேஜ் முடிக்கப்போற பசங்கள இன்டெர்வியூ வெச்சு
அதுல செலக்ட் ஆனா அவங்க கம்பெனிக்கு வேலைல சேர்த்துப்பாங்க.”

“அதாவது படிப்பு முடிக்க முன்னாடியே கைல வேலை நிச்சயமா இருக்கும்..”என்றான்.

“அப்படியா கண்ணு.. அப்போ உனக்கு வேல கிடைச்சுடும்ல ?.. இந்த விவசாய தொழில் என்னோடயே போகட்டும்பா நீயாவது நல்ல இடத்துல வேல பார்த்து நிறைய சம்பாதிக்கணும். கஷ்டமில்லாமே வாழணும்பா” என்றார்.

“அடுத்து உன் தங்கச்சி வேற படிச்சிட்டு இருக்கு…அதுக்கும் ஒரு கண்ணாலத்த கட்டி வைக்கணும்”.

“அப்பா.. ஏன்பா இப்படிலாம் பேசறீங்க ? நீங்க பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் விடிவு வரும்…
நான் கண்டிப்பா நல்லா சம்பாரிச்சு நல்ல நிலைமைக்கு வருவேன்.. தங்கச்சி படிப்பு என் பொறுப்புப்பா…
அவளுக்கு அதுக்குளே கல்யாணம்லாம் வேண்டாம்..
அவ எவ்வளவு படிக்கனும்னு நெனக்கிறாளோ அவ்ளோ படிக்கட்டும்
அதுனாலே தங்கச்சிக்கு இப்போதைக்கு கல்யாண பேச்சு லாம் எடுக்காதீங்க..

நான் நாளைக்கு நல்ல 
செய்தியோட வரேன்”. என்றான்..

மகனின் பேச்சை ரசித்துக்கொண்டே
“சரிப்பா” என்றார்.

மறுநாள் காலை எழுந்து குளித்து முடித்து சரியாக 10 மணிக்கு கல்லூரியை அடைந்தான் ரமேஷ்.

நண்பர்களை கண்டதும் சிறிது மகிழ்ச்சியும் கொஞ்சம் பயமுமாய் பேச ஆரம்பித்தான்.

“ஹேய்.. மச்சி ரமேஷு வா வா எப்படி பிரிபேர் பண்ணி இருக்கே கேம்பஸ்க்கு ” என்றான் நண்பன் 
பாலா..

“கம்யூனிகேஷன் தான் மச்சான் கொஞ்சம் பயமா இருக்கு..
ரிட்டன் டெஸ்ட் லாம் கூட பாஸ் பண்ணிடுவேன் ஆனா இங்கிலிஷ்ல பேசணும்னு நினச்சா தான் பக்னு இருக்கு.” என்றான்.

“அதெல்லாம் பயப்படாதேடா.
நீ நல்லா படிக்கிற பையன் உன் மார்க்ஸ்லாம் பாத்தே உன்ன
செலக்ட் பண்ணிடுவாங்கடா.. அது போக நீ நம்ம ப்ரொபசர்களுக்கு செல்ல பையன் வேற டோன்ட் ஒர்ரி ” என்று சமாதானம் செய்தனர் நண்பர்கள்..

ஆனாலும் மனதுக்குள் சிறு அச்சம் ஓடிக்கொண்டே இருந்தது.. மொத்த குடும்பத்தின் எதிர்பார்ப்பும் சுமைகளும் நினைவுக்கு வந்து போனது.. நல்ல வேலை கிடைத்தால் எல்லாத்தையும் ஒரு சில 
வருடங்களிலேயே செட்டில் செய்து விடலாம்.. நடக்குமா தெரியவில்லை.. குலதெய்வம் 
கருப்ப சாமி தான் துணை நிக்கணும்..
காலையில் அம்மா வைத்துவிட்ட திருநீறை அனிச்சையாய் 
தொட்டு பார்த்துக்கொண்டான்..

ஒவ்வொரு ரவுண்ட் ஆக இன்டெர்வியூ முடியும்போதும் இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போனது 
ரமேஷுக்கு..

முதல் இரண்டு ரவுண்ட்கள் நல்ல படியாகத்தான் முடிந்தது..
குரூப் டிஸ்கஷன்ல
சொதப்பியது அவனுக்கே தெரிந்தது.

எல்லாம் முடிந்ததும் வந்திருந்த கம்பனிகள் அனைத்துமே 
சொல்லி வைத்தாற்போல் மெயில் அனுப்பறோம்னு சொல்லி விட்டு போனார்கள்..

ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் பெற்றோரிடம் என்ன சொல்லுவது என்ற கவலை தவிர பெரிதாக 
ஒன்றுமில்லை.. அதே கவலையுடன் வீட்டிற்கு கிளம்பினான்..ரமேஷ்.

அப்பா வாசலிலேயே இருந்தார்.. “என்னப்பா போன வேல என்ன ஆச்சு? வேல குடுக்கறேன்னு சொன்னார்களா?

“இல்லேப்பா போய்ட்டு மெயில் அனுப்பறேன்னு சொல்லிட்டாங்க.. ஆனா எனக்கு நம்பிக்கை இல்லப்பா” என்றான் 

“அப்படிலாம் மனசு விட்டுடாத கண்ணு. வேல கிடைக்கணும்னு இருந்தா வரும். நீ அத நெனச்சு கவலைப்படாதே”
என்று ஆறுதல் சொன்னார் அப்பா.. கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்தான் ரமேஷ்.

அப்பாவை எப்படி சமாளிக்க 
போகிறோம் என்பதே அவனது பெரிய சவாலாக இருந்தது. இப்போது அவரே அப்படி சொன்னது அவனுக்கு
நிம்மதியாக இருந்தது..

அடுத்து வந்த வாரங்களில் ரிசல்ட் வந்தது முதல் வகுப்பில் தேறி இருந்தான் ரமேஷ்.. ஆனால் எதிர்பார்த்த கேம்பஸ் இண்டெர்வியூவில் வேலை கிடைக்கவில்லை…
சோர்ந்து இருந்தவனுக்கு நண்பர்கள்தான் 
ஆறுதல் சொன்னார்கள்…

“நீ ஒன்னும் கவலைப்படாதே மச்சி.. சென்னைல என் ஃபிரெண்ட் இருக்கான் அங்க போய் அவன் ரூம்ல தங்கிட்டு வேல தேடு கண்டிப்பா உனக்கு நல்ல வேலை கிடைக்கும் ” என்றான் நண்பன் பாலா..

வீட்டிற்கு வந்து விவரம் சொன்னான்..
தான் சென்னை போவதாகவும்
அங்கு நண்பனின் அறையில் தங்கி வேலை தேட போவதாயும் சொன்னான்.

அவர்களும் சரி என்றனர்..

சென்னை கிளம்பும் நாளும்
நெருங்கியது…
பெற்றோரின் ஆசி பெற்று தங்கைக்கு நன்றாக படிக்க ஆலோசனையும் சொன்னான்.. 
கிளம்பும் சமயம் திருநீறு எடுத்து அவன் நெற்றியில் இட்டாள்..அம்மா குலதெய்வம்
கருப்பனை வேண்டி அனுப்பினாள்…

அப்பா பஸ் ஸ்டாண்டு வரை வருவதாக கூறி அவனது பைகளில் ஒன்றை கையில் எடுத்துக்கொண்டார்..

“பரவால்லப்பா நான் எடுத்துக்கறேன்”.
என்றவனை தடுத்து 
“நீ வா சாமி அப்பா தூக்கிட்டு வரேன் ” என்றார்..

வழி நெடுகிலும் சில நினைவுகளையும்
சில அறிவுரைகளும் சொல்லிக்கொண்டே வந்தார்.

“தம்பி சென்னைக்கு போற பார்த்து சூதனமா நடந்துக்கோ.. நம்ம ஊர் மாதிரி இல்லே” என்றார்.

“சரிப்பா.. நீங்க கவலைப்படாதீங்க..
நான் பாத்துக்குறேன்..
நீங்க உடம்பு பாத்துக்கோங்க, அம்மா, தங்கச்சிய எல்லாம் 
பார்த்துக்கோங்க..” என்றான் ரமேஷ்..

பேச்சின் இடையே பஸ் நிறுத்தம் வந்தது. அங்கு நண்பன் பாலா நின்றிருந்தான்..

“வாடா எல்லாம் எடுத்துட்டியா? நான் குடுத்த போன் நம்பர் வெச்சிருக்கல? நானும் அவன்ட பேசிட்டேன் ..
அவன் கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட்கே வந்துடுவான் அரவிந்த்னு பேரு.. பாத்துக்கோ” என்றான் அக்கறையுடன்.. 

“டேய்.. நான் பாத்துக்கறேன்டா..
நீ கவலைப்படாதே நீ இங்க அப்பா அம்மா தங்கச்சிய பாத்துக்கோடா” என்றான் ரமேஷ்.

“டேய் என்னடா நீ இதெல்லாம் சொல்லனுமா? நான் பாத்துக்குறேன் நீ உடம்ப பாத்துக்கோ” மூவரையும்  சிறிது நேரம் காக்கவிட்டு வந்தது பேருந்து… 

பேருந்தில் ஏறி ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கை அசைத்ததும்ம் கண்களில் நீர் துளிர்த்தது..
அப்பாவும் கண்களை 
துண்டால் துடைப்பது தெரிந்தது..

பிறந்து வளர்ந்து 22 வருடம் இருந்த ஊரை விட்டு பிரிவது கஷ்டமாகத்தான் இருந்தது ஆனாலும் என்ன செய்வது 
பிழைப்பு தேடி போகவேண்டுமே…
பச்சை ஆடை அணிந்த வயல்கள் பின்னுக்கு நகர்ந்தது அவன் மன ஓட்டங்களை போல…

மறுநாள் காலை..
நினைவலைகளின் தாக்கத்தாலும் எண்ண ஓட்டங்களின் இழுவையாலும் எப்போது கண் உறங்கினான் என்று தெரியவில்லை.

“கோயம்பேடு வந்தாச்சு எல்லாம் எறங்கு” என்ற கண்டக்டரின் லௌட் ஸ்பீக்கர் குரலுக்கு தெறித்து எழுந்தான்
கண்களை 
கசக்கிக்கொண்டு லேசான சோம்பல் முறித்துக்கொண்டு இறங்கினான்..

சுற்றும் முற்றும் பார்த்தபடி மொபைலை
கையில் எடுத்தான்..
அதற்குள் 
“ரமேஷ்.. ரமேஷ் ” என்ற குரல் கேட்டது..
சட்டென திரும்பினால் இவன் வயதொத்த இளைஞன்..
“ஹலோ.. நான்தான் அரவிந்த் ” என்ற படி கை குலுக்கினான்..

“ஹலோ.. எப்படி கண்டுபிடிசீங்க நான்தான் ரமேஷ்னு “
“அது ரொம்ப சிம்பிள்ங்க..
பாலா ஏற்கனவே உங்க போட்டோ அனுப்பிட்டான். அதான்” என்றபடி நல்ல கலகலப்பாக பேசினான்.

ரமேஷுக்கு ஒரு விதத்தில் நம்பிக்கை வந்தது.சென்னையில் எப்படி காலம் தள்ள போகிறோம் என்ற அச்சத்தில் இருந்தவனுக்கு 
இப்படி ஒரு நட்பு கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தது…. இருவரும் பேசிக்கொண்டே வந்து ஷேர் ஆட்டோவில் ஏறினார்கள்.

சென்னையின் மைய்ய பகுதியில் அந்த மேன்ஷன் இருந்தது..
மூவர் தங்கிக்கொள்ளும் வசதியில் இருந்த அறை அது 
இவனுக்கு ஒரு படுக்கை
ஒதுக்க பட்டிருந்தது.. 

“நான் இங்க ஓனர் கிட்டே எல்லாம் பேசிட்டேன் பாஸ்.. நீங்க கவலைப் பட வேண்டாம்.. ஏற்கனவே எங்க ரூம்லேயே ஒரு பெட் காலியா 
இருந்தது வசதியா போச்சு..
உங்க திங்ஸ்லாம் இங்க வெச்சுக்கோங்க.. பாத்ரூம் அங்க இருக்கு.. போய் பிரெஷ் ஆயிட்டு வாங்க வெளில போய் சாப்பிடலாம்..”
நிறுத்தாமல் பேசினான் அரவிந்த்..

குளித்து முடித்து இருவரும் அறையை பூட்டிக்கொண்டு கிளம்பினர். 

“என்ன பாஸ் நீங்க பூட்டிட்டு வந்துடீங்க அந்த இன்னொரு ஆள் எப்படி வருவார்..”

“ரமேஷ் கவலைபடாதிங்க அவருக்கு மார்னிங் ஷிப்ட்  காலையிலேயே கிளம்பி போய்ட்டார் ஈவினிங் தான் வருவார்.. அவர்கிட்டே 
தனியா ஒரு சாவி இருக்கு..
ரூம்க்கு போனதும் உங்களுக்கும் ஒரு சாவி குடுத்திடறேன்.. அப்புறம் மூணு பேரும் எப்போ வேணா போயிட்டு 
வந்துக்கலாம்..” என்றான் 

“சரிங்க பாஸ் “… சிரித்தனர் இருவரும்

சாப்பிட்டு முடித்ததும் பக்கத்தில் உள்ள கடையிலிருந்து சில செய்தித்தாள்களை அரவிந்த் வாங்கி ரமேஷிடம் கொடுத்தான்.

“ரமேஷ் இதுல Classifieds Coloum பார்த்து போன் நம்பர்ஸ் நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. அப்புறம் அதுல மெயில் ஐடி இருந்தா உங்க
ரெசுயுமேவ பக்கத்துல நெட் சென்டர் இருக்கு அங்க போய் மெயில் பண்ணிவிடுங்க….
எல்லாம் ஒரு ஒருவராம், ரெண்டுவாரம்ல ரிப்ளை 
வரும்..
அடிக்கடி மெயில் செக் பண்ணிட்டு நம்பிக்கையா இருங்க வேல கிடைச்சுடும்..” என்றான்..

ரமேஷின் கண்களிலும் நம்பிக்கை துளிர்த்தது.. 

“ரொம்ப தேங்க்ஸ் பாஸ் ” என்றான்.
“அட … இதுக்கு எதுக்கு தேங்க்ஸ் எல்லாம்… நான் சென்னை வந்த டைம்ல எனக்கு உதவி செய்ய யாருமே இல்லே 
ரொம்ப கஷ்டப்பட்டு இன்னைக்கு இந்த வேலைல இருக்கேன்..

அதுனாலே தான் யார் என்னை நம்பி வந்தாலும் உதவி செய்யறேன்.. ஏன்னா கஷ்டம் அனுபவிச்சவங்களுக்கு தான் தெரியும் அதோட வலி..
சரி சரி ரொம்ப எமோஷனல்லாம் போகவேண்டாம்.. நீங்க பேப்பர் பாத்து அப்ளை பண்ணுங்க
நான் ஆபீஸ் போயிட்டு 
வந்துடறேன்..

சாயந்திரம் சீக்கிரமே வந்துடறேன் நம்ம வெளில போகலாம் ” என்றான் அரவிந்த்..

நண்பன் போனதும்
அறையில் தனிமையும் வெறுமையும் சூழ்ந்து கொண்டது ஏதோ ஒரு நம்பிக்கையில் சென்னை வந்தாகி விட்டது..
மேற்கொண்டு என்ன செய்ய போகிறோம் நினைத்தபடி வேலை கிடைத்துவிடுமா ? என்று 
கவலைப்பட்டபடி பேப்பரில் மேய்ந்தான்..

சில நம்பர்களுக்கு போன் செய்தான்.. அவர்கள் கொடுத்த முகவரிகளை 
குறித்துக்கொண்டான்..
சில மெயில் ஐடிக்களுக்கு போன்ல இருந்தே மெயில் அனுப்பினான்..

இப்படியாக இரண்டு வாரங்கள் கழிந்தது.. சில இடங்களில் இருந்து அழைப்பு வந்தது..
நேர்முகத்தேர்வு சென்று வந்த இடங்களில் எல்லாம் மெயில் 
பண்றோம் என்ற பதில்களும் உங்க கம்யூனிகேஷன் இம்ப்ரூவ் பண்ணிட்டு வாங்க என்ற பதில்களுமே கிடைத்தன..

இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் சோர்வை நோக்கி நகர ஆரம்பித்தது..

அறை நண்பன் அரவிந்த் மட்டும் விடாமல் நம்பிக்கை கொடுத்துக்கொண்டு இருந்தான்…

அந்த நேரத்தில்தான் ஒரு MNC
கம்பெனியில் இருந்து நேர்முக தேர்வுக்கான அழைப்பு வந்தது.. 

ரெசுயும் எடுத்துக்கொண்டு HR மேனேஜரை பார்க்கவேண்டும் 
என்று மெயில் அனுப்பியிருந்தார்கள்..

மிகவும் நல்ல கம்பெனி நிச்சயம் வேலை கிடைக்கும் என்று உற்சாகப்படுத்தி நண்பன் 
அரவிந்த் அனுப்பி வைத்தான்..

மறுநாள் காலை குளித்து முடித்து நல்ல திருத்தமான உடை அணிந்துகொண்டு கிளம்பினான் ரமேஷ்..

“ரமேஷ்.. All the best..
மெஸ்ல டிபன் சாப்டுட்டு போங்க.. ” என்றான் அரவிந்த்..

“ரொம்ப தேங்க்ஸ் பாஸ் நீங்க சாப்பிடலயா” என்றான்.

“எனக்கு மத்தியான ஷிபிட்..
நான் அப்புறம் வந்து சாப்டுக்கறேன் நீங்க சாப்பிட்டு கிளம்புங்க.. ” என்றான் அரவிந்த்.

வெளியில் வந்து தெருமுக்கு பிள்ளையாருக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு மெஸ்ஸில் சாப்பிட்டுவிட்டு கிளம்பினான்..

உள்ளுக்குள் பதட்டம் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தான்..
பல சிந்தனைகளுக்கிடையே 
பேருந்தில் ஏறி இறங்க வேண்டிய நிறுத்தம் வந்ததும் இறங்கி நடந்தான்..

ஆபீஸ் காம்பௌண்டு நெருங்க நெருங்கவே அந்த அலுவலகத்தின் 
பிரம்மாண்டம் தெரிந்தது.. கொஞ்சம் உள்ளுக்குள் கலக்கமாக இருந்தது.

மெல்ல ரிஸ்ப்ஷனை நெருங்கி நேர்முகத் தேர்வுக்கு 
வந்த விபரத்தை சொன்னான்.. அந்த நவநாகரீக பெண் தன் லிப்ஸ்டிக் அணிந்த உதட்டால் 
“திஸ் வே ப்ளீஸ்” என்று ஆங்கில நுனிப்புல் மேய்ந்தாள்..

வழுக்கும் கண்ணடித் தரைகளும், உட்கார்ந்த உடன் உள் வாங்கிக்கொண்ட சோபாவும் அந்த நிறுவனத்தின் பிரம்மாண்டத்தை 
சொன்னது..

காணாமல் போய் இருந்த பயம் மொத்தமும் பந்தாக வயிற்றுக்குள் சுருண்டது..

உண்மையிலேயே இங்கு 
வேலை கிடைத்தால் நன்றாக இருக்கும் வாழ்க்கையில் செட்டில் ஆகி விடலாம் என்று தோன்றியது..

நான்கைந்து பேர் வந்திருந்தனர். ஒவ்வொருவராக சென்று வர இவன் முறை வந்தது..

உள்ளே இரு ஆண்கள் அமர்ந்திருந்தனர்..
பல வகையிலும் இவனை சோதித்தனர்..
இவனது certificate பார்த்துவிட்டு..

“ப்ளீஸ்.. ஸ்டே அவுட்சைட் அவர் யூனிட் லீடர் வில் கால் யூ ” என்றனர்.

மீண்டும் ஒரு மணிநேர காத்திருப்பு கடந்து இவனை அழைத்தனர்.. 

யூனிட் லீடர்  என்று சொல்லப்பட்ட 
அறைக்கு சென்றான்..

உள்ளே ஒரு பெண்.

“மே ஐ கம் இன் மேடம்”

“எஸ் Mr  ரமேஷ் ப்ளீஸ் டேக் யுவர் சீட் “

அவனோடு பத்து பதினைந்து நிமிடங்கள் உரையாடி விட்டு.. அவனைப் பற்றி ஏற்கனவே தன டேபிள் மேல் இருந்த 
ரிப்போர்ட் படித்துவிட்டு.. 
தலை நிமிர்த்தினாள்.. 

“ஐ ம் சாரி Mr.ரமேஷ்..
உங்க கம்யூனிகேஷன் இன்னும் இம்ப்ரூவ் பண்ணனும்..and more over  உங்க Age-க்கு
இந்த டெசிக்னேஷின் தர முடியாது.. சோ பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் “.. என்றாள்..

எத்தனை எதிர்பார்ப்புகளை சுமந்து சென்றானோ அத்தனை ஏமாற்றத்தை சுமந்து வந்தான்.. கண் முன்னே வீட்டின் சூழ்நிலை ஓடியது என்ன செய்வதென்று தெரியவில்லை..

வந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. இன்னும் அப்பாவின் கையை எதிர் நோக்கி இருக்கும் சூழ்நிலையை மாற்ற வேண்டும்.. ஊரில் உள்ள அனைத்து சொந்தங்களின் முன் தலைநிமிர்ந்து நடக்க வேண்டும்.. ஆனால் போகும் இடமெல்லாம் இப்படி நிராகரிப்புகளை பார்த்து 
மனதில் இருந்த மொத்த தன்னம்பிக்கையும் குறைந்தது.. என்ன செய்வதென தெரியாமல் அறைக்கு சென்று களைப்பில் 
உறங்கி விட்டான்.

இரவு நேரம் திரும்பி வந்த அரவிந்த்..

“என்ன ரமேஷ் போன வேல என்ன ஆச்சு ?” என்றான்.

“கம்யூனிகேஷின் சரியில்லே அப்புறம் ஏஜ் கம்மியா இருக்குனு ரிஜெக்ட் பண்ணிட்டாங்க” என்றான்.. 

“அட.. விடுப்பா வேற வேல தேடலாம்” என்றான் அரவிந்த் 

“இல்லே பாஸ் இப்போவே ஒரு மாசத்துக்கு மேல ஆச்சு இன்னும் அப்பாட்ட வாங்கி தான் ரூம் ரெண்ட் மெஸ் பணமெல்லாம் 
கட்டறேன் அவரை இன்னும் தொல்லை பண்ண விரும்பல”

“புரியுது ரமேஷ்.. நான் ஒரு யோசனை சொல்லட்டா..
நீங்க ஒரு ஸ்போக்கன் இங்கிலிஷ் கோர்ஸ் சேருங்க ரெண்டு மாசத்துல 
கம்யூனிகேஷின் டெவெலப் ஆய்டும்.
அப்புறம் நல்ல வேல தேடினா கிடைச்சுடும்..” என்றான்.

“அதுக்கு எவ்வளோ செலவு ஆகும்?”

” அது ஒரு 4 இல்ல 5 ஆயிரம் ஆகலாம் நீங்க ஒன்ஸ் ஊருக்கு போய் அப்பாவை பார்த்து பேசிட்டு கோர்ஸ் பீஸ் வாங்கிட்டு 
வாங்க அப்புறம் அவரை நம்ம தொந்தரவு பண்ண வேணாம்” என்றான் அரவிந்த்.. 

அந்த யோசனை சரியாகப் படவே அடுத்தநாள் இரவு பஸ் ஏறினான் ஊருக்கு.

அந்த புழுதிக் காட்டில் இருந்த நிறுத்தத்தில் நின்றது அந்த பேருந்து. சில பேர்களை உதிர்த்து
ராமேசும் ஒருவன்.

நண்பன் பாலா பைக்கோடு நின்றிருந்தான்.
“ரமேஷு … வாடா மச்சான் எப்படி இருக்கே?.. வேலை ஏதாவது கிடைச்சிதா ?” என்றான்.

“இல்லேடா.. அது பத்தி பேசத்தான் அப்பாவை பார்க்க வந்திருக்கேன்..” என்றான் ரமேஷ்.. 

ஓடிக்கொண்டிருந்த வண்டியை ‘சட் ‘ என்று பிரேக் போட்டு நிறுத்தினான் பாலா 

“என்னடா ஏதாவது பிரச்சனையா ?”

“பிரச்சனைனு ஒண்ணும் இல்லேடா.. அதே கம்யூனிகேஷன் ப்ராப்ளம் தான்..நீ வண்டிய எடு 
வீட்டுக்கு போய் பேசலாம்” என்றான்…

வீட்டிற்கு வந்து வண்டியை நிறுத்தினான்..
இருவரும் வீட்டிற்குள் வந்தனர்.. அப்பா அம்மா மற்றும் தங்கை 
அனைவரும் அவனை ஆவலோடு வரவேற்றனர்.. 

“தம்பி ரமேஷு… எப்படிப்பா இருக்கே?’ என்றால் அம்மா.. 

“நல்ல இருக்கேன்மா “

“சரி குளிச்சிட்டு வா சாப்பிடலாம்” என்றாள் 

ரமேஷ் குளித்து முடித்து வந்தததும் அப்பாவும் அவனும் சாப்பிட உட்காந்தனர்.. 

“வேல தேடற முயற்சிலாம் எப்படி போகுது தம்பி ?” அப்பாவே ஆரம்பித்தார்..

“தேடிட்டே இருக்கேன்பா..
அத சொல்லத்தான் ஊருக்கு வந்தேன்..”

“என்ன விஷயம் சொல்லுப்பா”

“எங்க போனாலும் நல்லா இங்கிலிஷ்ல
பேசத்தெரியல்லேனு திருப்பி அனுப்பிடறாங்கப்பா “

“ஏங்கண்ணு..
நீ காலேசிலே படிச்சது பத்ததாமா?”

“படிச்சது சரி ஆனா பேச சரியா வரல்லேனு சொல்றாங்க “

“அதுக்கு என்ன பண்ணணுமாம் ” அம்மா நேராக விஷயத்துக்கு வந்தாள்.

“அம்மா! அதுக்குன்னு கோச்சிங் சென்டர்லாம் இருக்கு சென்னைல அதுல சேர்ந்து படிக்கணும்..

ஒரு ரெண்டு மாசம் படிச்சா போறும்.. “

” மேல் படிப்பு மாதிரியாபா ?” அப்பா கேட்டார்..

” இல்லேப்பா.. இப்ப படிச்ச படிப்புக்கு ஒரு உதவி மாதிரி “

“அதுக்கு எவ்வளோ செலவாகும்?”

“ஒரு 4000 இல்ல 5000 ஆகும்பா”

ரொம்ப தயங்கி தயங்கி தயங்கியே சொன்னான் ரமேஷ்.

“சரி. நீ கவலைப்படாதே நான்
ரெடி பண்றேன்.. சாப்ட்டு வீட்ல இரு ” என்றார் அப்பா..

அப்பாவை பார்க்க ரொம்ப கவலையாய் இருந்தது
ரமேஷ்க்கு..

பேசாமல் எல்லாத்தையும் விட்டு விட்டு விவசாயத்தை 
கையில் எடுத்துக்கொள்ளலாமா என்று யோசித்தான்..

சாயங்காலம் அப்பாவை மீண்டும் சந்தித்தவன் மிகுந்த வருத்தத்துடன் பேசினான்.. 

“அப்பா பேசாமே எல்லாத்தையும் விட்டுட்டு நானும் உங்ககூட விவசாயம் பண்ண வந்துரட்டுமா ?
உங்களை இப்படி கஷ்டப்படுத்தி காசு கேட்டு ஒவ்வொரு தடவையும் உங்ககிட்டேயே வந்து நிக்கறது 
ஒரு மாதிரி இருக்குபா..

உங்களை உக்காரவெச்சி சாப்பாடு போடணும் நான்..
ஆனா மேல மேல 
உங்களுக்கு கஷ்டம் கொடுத்துட்டு இருக்கேன்.” என்றான்..

“நீ கஷ்டம் குடுக்கறேனு யார் சாமி சொன்னா ? அப்படிலாம் மனசு விட்டுடாதே தம்பி..

விவசாயம் நீ நினைக்கற அளவுக்கு சுலபம் இல்லே..
அந்த கஷ்டம் என்னோடயே போகட்டும்னு தான் உன்னை 
படிக்க வெச்சு ஆளாக்கணும்னு துடிக்கறேன்.. நீ சொன்ன அந்த கிளாஸ் போய் படி உனக்கு நல்ல வேல கிடைக்கும் கவலைப்படாதே” என்று சொன்னார்.

சொன்னபடி அடுத்தநாளே பணத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டார்.. எப்படி செய்தார் என்று கேட்க வில்லை 
ஏனனில் அம்மாவின் கைகளை பார்த்தபோது விளங்கியது..

கூடிய சீக்கிரம் இதை எல்லாம் சரி செய்ய வேண்டும் என்ற வெறி மனதில் தோன்றியது..

அந்த எண்ணத்தோடு மீண்டும் சென்னைக்கு பேருந்து ஏறினான்.

சென்னை வந்து சேர்ந்ததும் நண்பன் அரவிந்தின் ஆலோசனைப் படி ஸ்போக்கன் இங்கிலிஷ் கோர்ஸ் சேர்ந்தான்.

நாட்கள் செல்ல செல்ல ஆங்கிலம் நன்றாக பேச வந்தது.. பேச பேச தொலைந்த தன்னம்பிக்கை வந்து சேர்ந்தது.

சில இடங்களில் நேர்முகத் தேர்வுகள் சென்று வந்தான்.. அதன் இடையில் கிடைத்த சிறு சிறு வேலைகளை செய்தான்.

சின்ன சின்ன கால் சென்டர் வேலைகள்.. இரவு பகல் மாறி மாறி வரும் ஷிப்ட்கள்  இப்படி நேரம் காலம் தெரியாமல் 
பாடுபட்டான்..

கிடைத்த சொற்ப வருமானத்தையும் தனக்கு போனது போக வீட்டிற்கு அனுப்பி வைத்தான்..

ஆறு மாதங்கள் கடந்த நிலையில் மீண்டும் அதே பெரிய MNCல் இருந்து அழைப்பு வந்தது ரமேஷுக்கே 

அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. ஏற்கனவே குறைந்த வயது உள்ள அவனுக்கு அந்த பெரிய பதவியை தரமுடியாது என்று சொல்லி விரட்டிய கம்பெனி இன்று அவனை தானே மீண்டும் அழைக்கிறது ஏன் என்று தெரியவில்லை. 

அறை நண்பன் அரவிந்திடம்  சொன்னான் ” ஏற்கனவே வேணாம்னு சொன்னாங்க இப்போ எதுக்கு திருப்பி 
கூப்படறாங்க னு தெரில பாஸ்” என்றான்.

“போய்த்தான் பாருங்க என்ன சொல்றாங்கனு.. கிடைச்சா நல்லது தானே..
பெரிய கம்பெனி நல்ல சம்பளம் 
கிடைச்சா செட்டில் ஆகி விடலாம்.. போயிட்டு பார்த்துட்டு வாங்க ரமேஷ்” என்றான் அரவிந்த்..

மறுநாள் காலை எப்போதும் இண்டெர்வியூ செல்வது போல் கிளம்பினான் ரமேஷ் இருந்தாலும் மனதிற்குள் 
ஆயிரம் கேள்விகள்.. 

பஸ் பிடித்து ஸ்டாப்பிங்ல் இறங்கி கம்பெனி நோக்கி நடந்து போனான்..

சென்ற முறை பார்த்த 
அதே பிரம்மாண்டம் கண்களில் அறைந்தது.. மீண்டும் ரிசப்ஷனில் தான் வந்த விபரத்தை சொல்லி அனுமதி கேட்டான்..

உள்ளே பலர் பிஸியாக குறுக்கும் நெடுக்கும் அலைந்து கொண்டிருக்க முதலில் வந்து அமர்ந்த அதே சோபாவில் அமர்ந்தான்.. அரைமணி நேரம் போனதும் அவன் பெயரை சொல்லி அழைத்து முன்பு போலவே அனைத்து விவரத்தையும் சேகரித்தனர்..

அப்போது அவர்களிடம்
“Last time same positionக்கு Age கம்மியா இருக்குனு சொல்லி அனுப்பிட்டாங்க.. இப்போ திரும்பவும் கூப்ட்டிருக்காங்க 
again same reason க்காக reject பண்ணிட மாட்டாங்க இல்லே..”

“அதெல்லாம் இருக்காது ரமேஷ். மேடம் உங்கள கூப்பிடுவாங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க” என்றார்கள்..

மீண்டும் சென்று காத்திருந்தான்.. ஒரு மணிநேரம் கழித்து அங்கிருந்தவரை விசாரித்தான்.

“மேடம் இன்னும் கூப்பிடலியே லேட் ஆகுமா ?”

“அவங்க ஒரு மீட்டிங்ல இருக்காங்க வெயிட் பண்ணுங்க கூப்பிடுவாங்க “.

சரி என்று வந்து அமர்ந்தான்.. ஒரு மணிநேரம், இரண்டு மணிநேரம் என்று போனதே தவிர அவனை யாரும் அழைப்பதாய் தெரியவில்லை..

மதிய உணவு நேரமும் வந்தது.. அவன் மீண்டும் அவர்களிடம் சென்றான்.. 
“லஞ்ச் டைம் வந்திடுச்சு இன்னும் மேடம் வரலீங்களா ?”

” இல்லே சார் மேடம் வந்துட்டு லஞ்ச் சாப்பிட போய் இருக்காங்க ” என்றான் 

இவனுக்கும் பசி வயிற்றை கிள்ளியது..
போகலாம் என்றால் இவர்கள் என்ன சொல்லுவார்களோ தெரியவில்லை.

கேட்டே விட்டான்
“சார் நான் வேணா வெளில போய் லஞ்ச் சாப்பிட்டு வந்துடட்டுமா ” என்றான்.

” வெயிட் பண்ணுங்க..Suppose நீங்க வெளில போய்  இருக்கறச்சே மேடம் வந்துட்டா என்ன பண்ணுவீங்க ?”

“இப்போ வந்துடுவாங்க முடிச்சிட்டு ஒருவழியா போய் சாப்பிடுங்க ” என்றனர்.

ஏன்டா நீங்கலாம் கார்ப்பொரேட் கம்பனில இருந்தா அதுக்காக ஒரு மனுஷனோட பசியை கூட கண்டுக்க மாட்டீங்களா.. 
என்று மனதிற்குள் நினைத்து நொந்து நூடுல்ஸ் ஆனான்..

ஊருக்கே சோறு போடும் விவசாயியின் மகன் ஒரு வேளை உணவருந்த முடியாமல் கிடந்தான்..

பசியின் தாக்கமோ நேரம் ஆனதால் வந்த கோபமோ
தெரியவில்லை உள்ளுக்குள் கனன்று கொண்டு இருந்தது..

ஒரு வழியாக 3 மணிக்கு உள்ளே அழைத்தார்கள் மீண்டும் அதே யூனிட் லீடர் அறை..

உள்ளே சென்றான்..
“yes  Mr. ரமேஷ் சொல்லுங்க ” என்றாள்..

“உங்க கம்பெனிலர்ந்து தான் இண்டெர்வியூ கால் வந்தது மேடம்.. ” என்றான் 

“ஓ .. அப்படியா.. ஆனா ஏற்கனவே சொன்னோமே அந்த போஸ்ட்க்கு உங்க ஏஜ் ரொம்ப கம்மினு.. இவ்வளோ சின்ன வயசுக்கு அவ்வளோ பெரிய போஸ்ட்லாம் தர முடியாது”

“என்ன மேடம் இப்படி சொல்றீங்க.. நீங்க தான் எனக்கு மெயில் அனுப்பி கூப்டீங்க இப்போ நீங்களே திரும்பவும் இப்படி
சொல்றீங்க?”

“அதெல்லாம் எனக்கு தெரியாது.. யார் உங்களுக்கு மெயில் பண்ணதுனு I don’t know…
நீங்க என்கிட்டே கேட்டு Use இல்லே.”

“என்ன மேடம் இப்படி பேசறீங்க உங்க ஆபீஸ்ல கேட்டதுக்கு
ஏஜ்லாம் இப்போ நோ ப்ராபளம்னு சொன்னாங்க இப்போ நீங்க என்னனா இப்படி பேசறீங்க”

“இதோ பாருங்க Mr.
உங்க கேள்விகளுக்கு எல்லாம் explanation குடுக்கணும்னு அவசியம் எனக்கு இல்லே..
யார் மெயில் அனுப்பினாங்கனு எனக்கு தெரியாது.
Now this the fact 
அவ்வளோதான் “..

“மேடம் this too much.. அப்படி இருந்தா அதை முன்னாடியே சொல்லி அனுப்பிருக்கலாமே.
why you made me unnecessarily wait here? you literally wasted my time.
இதுக்காக உங்க ஆளுங்க என்னை லஞ்ச்க்கு கூட போகவிடாம நிறுத்தினாங்க..”

“How dare you Mr .? அவங்க சொன்னதுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும் ?”

“ஆகனும் மேடம் அவங்களுக்கு மேனேஜர் நீங்க தானே.?
அப்போ நீங்க தான் பொறுப்பெடுத்துக்கணும்..
atleast மறுத்து சொல்ற வார்தைகளாவது 
சாதாரணமா சொன்னிங்களா.. This shows your manners.”
யூனிட் லீடரின் அறை ஒரே கூச்சலும் குழப்பமுமாய் இருந்தது..

அவனை இன்டெர்வியூ செய்த மற்ற உதவியாளர்களும் அறைக்குள் வந்தனர்..

அவனை மிரட்டி
விரட்டும் நோக்கிலேயே பேசினர்… 

நீண்ட நேரம் பசியோடு இருந்த களைப்பா ?
வேலை இல்லை என்று சொன்ன ஏமாற்றமா ?
இல்லை இதுபோல கார்ப்பொரேட் கம்பனிகள் மேல் உள்ள கோவமா? 

எது அவனை செலுத்தியது
என்று தெரியவில்லை…

உறுதியாக எழுந்தான் தான் கொண்டு வந்த அந்த Resume நான்காக கிழித்து அந்த பெண்ணின் முகத்திற்கு நேராக
பறக்கவிட்டான்..

அவனை பிடிக்க வந்தவர்களை தடுத்து நிறுத்தி
அழுத்தம் திருத்தமாக பேசத் தொடங்கினான்..

” உங்கள மாதிரி Corporate companyகளுக்கு எங்களை மாதிரி இருக்கவங்கன்னா இளக்காரமா போச்சா..
நாங்களும் மனுஷங்க தான் மேடம்.

நானா உங்க கம்பெனி தேடி ரெண்டாவது வந்தேனா? நீங்க மெயில் அனுப்பினீங்க வந்தேன்..
அட வேலை இல்லன்னு தான் சொல்லுங்க அதுக்கு ஒரு முறை வேண்டாமா?
நீங்க பெரிய பதவில இருந்த
அது உங்களோட.. புரியுதா?

நான் உங்களுக்கு எல்லாம் 
மேல பெரிய பதவில இருக்கேன்.. ஒரு விவசாயியோட மகன் என்கிற பதவி..

ஊருக்கெல்லாம் சோறு போடற ஆளை இன்னைக்கு ஒரு வேளை கூட சாப்பிடவிடாமே 
பண்ணிட்டு அந்த குற்ற உணர்ச்சியே இல்லமே பேசிட்டே போறீங்க..
உங்க பேச்சுகளையும், ஏச்சுகளையும் கேக்கணும்னு இனி எனக்கொண்ணும் அவசியம் இல்லே..

உங்க வேலைகளை விட விவசாயம் எவ்வளவோ மேல்னு உணர்ந்துட்டேன்..
இனி நான் என் ஊருக்கு போய் விவசாயத்தை பாத்துக்கறேன்..

நீங்க உங்க அடிமை வேலையை 
பாருங்க atleast இனிமே வரவங்க கிட்டேயாவது கொஞ்சம் கனிவா நடந்துக்க பாருங்க..
பதவில மேல இருக்கோம்னு ஆட்டம் போடாதீங்க..
ஒரு நாள் எல்லாருமே 
கீழ வரணும்.. அதை மனசுல வெச்சுக்கோங்க.. உங்களுக்கும் உங்க வேலைக்கும் ஒரு பெரிய good bye “என்று சொல்லி..

நேர்முகத் தேர்வுக்கு வந்தவன் நிமிர்ந்து நேரான கம்பீர முகத்தோடு திரும்பி நடந்தான்.

—முற்றும்—

Related posts

கோடையில மழை!

Shiva Chelliah

வித்யாசாகர் எனும் சேமிப்பு காதலன்

Shiva Chelliah

சிட்டு..!

கரைகின்ற நொடிகளில்..!!

Shiva Chelliah

ஆட்டோ டிரைவர் மாணிக்கம்

Shiva Chelliah

இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்,

Shiva Chelliah

என் இனிய தனிமையே..!

Shiva Chelliah

World Tea Day..!

Shiva Chelliah

திரு.குரல்..!

ஈகை பெருநாள் வாழ்த்துக்கள்..!

Shiva Chelliah

உலக இசை தினம் இன்று …!

Kesavan Madumathy

மொழி – ஓர் உந்துதல் !!

Shiva Chelliah