நிரந்தர இளைஞன்…!

உலகநாயகன்…!

கேபி வளர்த்த பேபி (கிரெடிட் :அமரர் வாலி)

கமலை பொறுத்தவரை நடிப்பே நாடி துடிப்பு என்று சொல்வது மிகையல்ல, நாடியும் நடித்து காட்டும் என்பது ஆகச் சிறந்த கூற்று …!

நவரசங்களையும் திரையில் காட்ட தெரிந்த மாபெரும் கலைஞன் , மிகைப்படுத்தியும் நடிக்க தெரியும் , மிகைப்படுத்தாமலும் நடிக்க தெரியும் ,
தன் இயல்பை மட்டும் காட்டி அசர வைக்கவும் தெரியும்..!

நடிகர் , நடன இயக்குனர் , இயக்குனர் ,பாடலாசிரியர் , பாடகர் , ,இசையமைப்பாளர் , வசனகர்த்தா என இவர் தொடாத பகுதிகள் குறைவு சினிமாவில் பொதுவாக 24 வகையான கலைகள் உள்ளன அதில் அனைத்திலும் தேர்ந்த ஒரு கலைஞன் என்றால் கலைஞானி மட்டுமே ‌‌….!

ஆளுமை இயக்குனர்கள் முதல் புதிய இயக்குனர்கள் வரை அவர் நடித்திருந்தாலும் அது கமல் படமாக மட்டுமே தெரியும் , இயக்குனரின் பங்கை விட கமலின் ஆத்மார்த்தமான நடிப்பு அனைத்தையும் மறக்கச்செய்து கமல் மட்டுமே முழுவதும் தெரிவார் …!

கேபிக்கு தெரியும் தான் அறிமுகப்படுத்தியவர்களில் கமலை வைத்து மட்டுமே படம் (இயக்கம்) பண்ண முடியும் மற்றவர்களை வைத்து பணம்தான் (தயாரிப்பு) பண்ண முடியும் என்று அதனால்தான் கமலை வைத்து இருபத்தைந்துக்கும் மேற்பட்ட படங்களை இயக்கினார்…!

கமல் குறித்து ரஜினியின் பேட்டிகள் :

சமகால போட்டியாளர்களாக இருந்தும் ரஜினி கமல் நட்பு எப்பொழுதுமே ஸ்பெஷல் :

நான் கமலுடன் நடிக்க வாய்ப்பு பெற்றதே என் பெரும் பாக்கியம் ஏதோ கொஞ்சம் பெரிய நடிகன் ஆகி விட்டதால் கமல் என் போட்டியாளராக நான் கருதியதே இல்லை இன்றும் நான் கமலை ஒரு ஆச்சிரியமாகதான் பார்க்கிறேன் என்று கூறியுள்ளார் ரஜினிகாந்த், பலப்பல நட்சத்திரங்கள் திரையில் வந்தாலும் எவரும் அசைக்க முடியாத சூரியனாய் என்றும் நிலைத்து நிற்பவர் கமல் , தன் கலையுலுக அண்ணா கமல் ,
கலைத்தாயின் மூத்த புதல்வன் என்றும் ,கமல் நடிகர்களின் நடிகன் மகா நடிகன் என்றும் மனம் விட்டு பாராட்டி உள்ளார் நம் சூப்பர் ஸ்டார்…!

இறந்தகால , நிகழ்கால படங்களையும், நாம் இதுதான் கமர்சியல் என்று நினைத்து கொண்டிருக்கும் படங்களையும் போல் வருடத்திற்கு பன்னிரெண்டு படம் தர அவரால் இயலும் ஆனால் அவரின் படங்கள் எதிர்காலத்தை பற்றி பேசுபவை கமர்சியல் என்ற குறுகிய வட்டத்தில் தன்னை அகப்படுத்தி கொள்ளாமல் இருப்பதால்தான் அவர் உலக நாயகன் ..!

ஃபிலிம் ஃபேர் விருதை 18 முறைக்கும் மேல் வாங்கிய ஒரே இந்திய நடிகர் கமலஹாசன்தான். இனி எனக்கு விருது தராதீர்கள் புதிய இளைஞர்களுக்கு தாருங்கள் என்று ஃபிலிம் ஃபேருக்கு கமல் கடிதம் எழுதியதால், இந்த எண்ணிக்கை இத்தோடு நின்றது.
ஒரே வருடத்தில் ஐந்து வெள்ளிவிழா படங்களை கொடுத்தவர் கமலஹாசன். இந்த சாதனை இதுவரை யாராலும் முறியடிக்கப்படவில்லை. அந்த படங்கள் வாழ்வே மாயம்; மூன்றாம் பிறை; சனம் தேரி கஸம்; சகலகலா வல்லவன், ஹே தோ கமல் ஹோகயா என ஐந்து வெள்ளிவிழா படங்கள்…!

கமலின் படங்கள் குறித்து அனைத்தும் பேச ஒரு கட்டுரை போதாது ஒரு நாளும் போதாது கமல் என்றதும் நினைவுக்கு வரும் மனதை உருக்கும் சில படங்களின் காட்சிகள் பற்றி பேச விரும்புகிறேன்

புன்னகை மன்னன் : மரத்தில் விழுந்து தொங்கும் காட்சியை பாலசந்தர் எடுக்கும்போது கமலை தவிர மற்றவர்களிடம் காட்சியின் அமைப்பை விளக்கி கொண்டிருந்தாராம் கேபி அப்போது அவர் சொன்னது நான் ஒரு‌ மாதிரி இந்த காட்சியை வடிவமைச்சு வைச்சி இருக்கேன் ஆனா அந்த ராஸ்கல் எப்படி பண்ண போறான் பாருங்க என்று அதன் பிறகு கமலின் நடிப்பை பார்த்து மொத்த யூனிட்டுமே மிரண்டு போனாதாம் இது குறித்து கேபி சொல்லியது இந்த படவா என்ன இப்படி எந்த சீன் சொன்னாலும் பிச்சு உதறானே இவனுக்கு தீனி போடவே இன்னும் நல்லா சீன் யோசிக்கனும் என்று கேபியே ஒரு பேட்டியில் கூறினார் .

மகாநதி :
இப்படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்களின் பெயர்கள் நதிகளின் பெயர்களை தாங்கி நிற்கும்.

கிருஷ்ணா, #யமுனா, #கோதாவரி,#கங்கா,#பரணி,#காவேரி என அனைத்தும் நதியின் பெயர்கள்.அதேபோல் தன் மகளை தேடி கல்கத்தா செல்லும் காட்சிகள் கொடுமையிலும் கொடுமை.எந்த ஒரு தந்தைக்கும் அப்படி ஒரு நிலை வரக்கூடாது. தன் மகள் அரைகுறை ஆடையுடன் இருப்பதை காணும் காட்சியில் தன் மகளை அவர் அடையாளம் கொள்ளும் விதம் உணர்வு பூர்வமாக இருக்கும். பாதி திறந்த கதவுகள் வழியே தன் உருவம் ஓவியமாக தீட்டப்பட்டு சுவற்றில் ஒட்டப்பட்டிருப்பதை பார்த்து பயத்துடன் அந்த அறை நோக்கி வந்து கதவை திறக்க , தொந்தரவு பன்னாதீங்கடா

என்று சலித்து கொண்டு திரும்பும் மகளை பார்த்ததும் வீறிட்டு அழுகிறார், அவள் அப்பாஎன்று குறுக.
கண்களை ஆறாக மாற்றும் காட்சி அவை.
பிறகு ஓர் போர்வையை சுருட்டி
மகளை தூக்கி கொண்டு ஓடுகிறார்,
அப்போது ஒரு சுவறை கடந்து போகையிலேகேமரா கடக்காமல் அங்கு
மாட்டப்பட்டிருக்கும் #துர்கை படத்தை சில
வினாடிகள் காட்டும் , பெண்களை கடவுளாக நினைக்கும் நாட்டிலா நாம் இருக்கிறோம் என்று உணர வைக்கும் தருணம் , மகளை வீட்டுக்கு அழைத்து வந்த பிறகு இரவில் தூக்கத்தில் படுக்கையிலிருக்கும் தன் பெண் காவேரி தூக்கத்தில் “என்ன விடுங்கடா ஒருநாளைக்கு எத்தன பேருடா வருவீங்க”, என்று சொல்ல , “காவேரி கனவ கலைக்கமுடியாதே யமுனா என ” கதறி அழும் காட்சியை போல் கனமான காட்சி எந்த திரைப்படத்திலும் இதுவரை கண்டதில்லை.தமிழ் சினிமாவை புரட்டி போட்ட ஒரு படம் மகாநதி …!

குணா :
உலகில் இருக்கும்சுற்றுலா பகுதிகளையும் தேடிச்சென்று தமிழ்சினிமா படமாக்குகிறது.ஆனால் ஷூட் செய்த ஒரு இடத்தைப் பின்னாளில் சுற்றுலாத்தளமாக மாற்றியபெருமை குணா திரைப்படத்தையேச் சாரும்.
‘மரணத்தின் சமையலறை’ என்று அழைக்கப்பட்டபாறைகள் பின்னாளில் ‘குணா பாறை’களாகமாறின.
சுமார் 600-700 அடி ஆழமுள்ள குகையில்,இக்கட்டாண நிலையிலும் நடிப்பின் மறுமுகத்தைக் காட்டியிருந்தார் கமல்ஹாசன். மொத்த யூனிட்டும், கொடைக்கானலின் கடும் குளிரில் உறைந்தது.ஆபத்தான அந்தப் பாறைகளில் கஷ்டப்பட்டு படப்பிடிப்பு நடத்தியதன் விளைவு தான் நாம்,இன்றும் குணாவை பற்றிப் பேசிக் கொண்டிருகிறோம்.படத்தின் ஒரு காட்சியில், ‘உனக்கு என்ன வேணும்? நான் வேணுமா? என் உடம்பு வேணுமா?’ என்று நாயகி கேட்கும்போது, ‘இல்லை, கல்யாணம்’ என்று நாயகன் சொல்வான்.
காதல் வெறும் உடல் சார்ந்த
உணர்வில்லை என்பதை மிக
அற்புதமாகச் சொன்ன இடத்தில்தான் குணா வெற்றியடைகிறது…! இங்க எல்லாருமே பைத்தியம் தான் பொம்பள பைத்தியம் , பண பைத்தியம் என நாயகி கூறுவது சமூகத்தின் மீதான சவுக்கடி …!

காமெடி ஈஸ் சீரியஸ் பிசினஸ் என்ற சொல்லாடல் ஒன்று உள்ளது எவ்வளோ பெரிய மாஸா ஹீரோவாக வளர்ந்து விடலாம் ஆனால் திரையில் காமெடி அதுவும் ரசிக்கும்படி செய்வது ஒரு தனி திறமை வேண்டும் அது கமலுக்கே உரித்தான கலைகளில் ஒன்று.
ஒரு பெரிய ஹீரோ என்றாலும் முழு நீள நகைச்சுவை படத்தில் நடிக்க தயங்கியதில்லை மைக்கேல் மதன காமராசன் , காதலா காதலா , பம்மல் கே சம்பந்தம் ,பஞ்ச தந்திரம் , அவ்வை சண்முகி , தெனாலி , வசூல்ராஜா , என எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காமெடி படங்கள் ..!

கமலின் குரல் : ஜேசுதாஸ் ஒரு விழாவில் சொன்னது கமல் அதிகம் பாடாமல் இருப்பது பாடகர்களின் அதிர்ஷ்டம் என்ன மாதிரியான பாடகர்யா இவர் என்ன குரல் , என்ன லயம் என பாராட்டினார் கமல் குரலில் வந்த அன்பே சிவம் , போட்டு வைத்த காதல் திட்டம் , சுந்தரி நீயும் , நீல வானம் , ஹே ராம் என பல பாடல்கள் என்றும் பிளே லிஸ்ட்டில் இருக்கும் .

வயது என்பது ஒரு எண் மட்டுமே என்பதை என்றும் இளமையாக இருந்து நிரூபித்து கொண்டிருக்கும் கலையுலக இந்திரன் பெண்களின் சந்திரனுக்கு இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் …!