Penbugs
Coronavirus

ஊரடங்கு முடியும் வரை இலவச உணவு..!

இந்தியாவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் தமிழகத்திலும் அசுர வேகம் எடுத்து இருக்கிறது. கடந்த மூன்று வாரங்களாக தாறுமாறாக உயர்ந்து வந்த கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்று 33 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1,629 ஆக அதிகரித்திருக்கிறது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக இருக்கிறது. கொரோனா பரவுதலை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்களின் அன்றாட வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

அதை நிவர்த்தி செய்ய அரசு சார்பாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் இருக்கும் அம்மா உணவகங்கள் அனைத்தும் முழுநேரமும் செயல்பட்டு வருகின்றன. ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அம்மா உணவகங்களில் உணவு தயாரிக்கப்பட்டு பார்சல் மூலமாகவும் வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் ஆளும் அதிமுக தனது கட்சி நிதியில் அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கும் ஏற்பாட்டைச் செய்துள்ளது. அரசுக்கு சொந்தமான அம்மா உணவகத்தை அதிமுக நிதியில் நடத்த திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. எனினும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் தங்கள் மாவட்டங்களில் இருக்கும் அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் இருக்கும் அம்மா உணவகங்களில் மாநகராட்சி சார்பாக இலவச உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.