Penbugs
Editorial News

போலீஸ் என்கவுண்டரில் விகாஸ் துபே சுட்டுக்கொலை

உத்தர பிரதேசத்தில் பிரபல ரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உத்தரபிரதேசத்தின் கான்பூரில் பிரபல ரவுடியாக விளங்கி வந்த விகாஸ் துபே என்பவனை கொலை முயற்சி வழக்கு ஒன்றில் கைது செய்வதற்காக கடந்த 2-ந்தேதி இரவில் அவனது கிராமமான பிக்ருவுக்கு போலீசார் சென்றனர். அப்போது தனது கூட்டாளிகளுடன் இணைந்து போலீசார் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு விகாஸ் துபே தப்பினான்.

இந்த பரபரப்பு சம்பவத்தில் துணை சூப்பிரண்டு உள்பட 8 போலீஸ்காரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயமடைந்தனர். மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் தொடர்புடைய விகாஸ் துபே மற்றும் அவனது கூட்டாளிகளை பிடிக்க 25-க்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் களத்தில் இறக்கப்பட்டனர்.

இதில் உடனடி பலனாக துபேயின் 2 கூட்டாளிகள் 3-ந்தேதி சுட்டுக்கொல்லப்பட்டனர். இதைப்போல அவனது வலது கரமாக விளங்கிய தயாசங்கர், போலீசார் வருகை பற்றி துபேவுக்கு துப்பு கொடுத்த போலீஸ்காரர்கள் என பலர் கைது செய்யப்பட்டனர். ஆனாலும் முக்கிய குற்றவாளியான விகாஸ் துபே போலீசிடம் சிக்காமல் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்தான்.

இந்த நிலையில் மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனில் வைத்து நேற்று அந்த மாநில போலீசார் விகாஸ் துபேயை அதிரடியாக கைது செய்தனர். அங்குள்ள புகழ்பெற்ற மகாகாளி கோவிலுக்கு தனது கூட்டாளிகள் இருவருடன் வந்தபோது அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் விகாஸ் துபேயை பிடித்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட விகாஸ் துபே, இன்று காலை கான்பூருக்கு அழைத்து வரப்பட்டான். கான்பூருக்கு காரில் அழைத்து வந்த போது, பாதுகாப்பு பணிக்கு வந்த கார் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இந்த விபத்தை பயன்படுத்தி, விகாஸ் துபே தப்ப முயன்றதாகவும் அப்போது நடைபெற்ற என்கவுண்டரில் விகாஸ் துபே சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன

Leave a Comment