சாலையில்…

P.C : P. Eniyavan

P.C : ENIYAVAN. P

1) வாழ்க்கையும் கூட
சாலைப் போக்குவரத்தில்
வண்டி ஓட்டுவதைப்போல் தான்!
எந்த வண்டி நம்மை
முந்திக்கொண்டுச் சென்றாலும்,
அதை முந்தி அடித்து
முன்னேறிவிடவேண்டும்
என்ற வேகம் வரும்!
ஆனால் நாம்
எத்தனை வண்டிகளை முந்தினாலும்,
நமக்கு முன்னே,
நாம் முந்தத்
துடிக்கும் வண்டிகள்
சென்றுகொண்டே தான் இருக்கும்!
நாம் போக வேண்டியே
வேகத்தில் பயணித்தாலே,
சேர வேண்டிய இடத்திற்குச்
சரியான நேரத்தில் சென்றடையலாம்!

2) மாலை நேரச் சாலையில்
இருச்சக்கர வாகனத்தில்
நம்மை ஆச்சரியப்படுத்த எண்ணி
பின் இருக்கையின்
பின்புறமாகத் திரும்பி
அமர்ந்துகொண்டிருக்கும் சிறுமி,
நம்மையும் நடப்பதையும் பார்த்து
ஆச்சரியப்பட்டுக்கொண்டே
தள்ளித்-தள்ளித் தொலைவில்
தொலைந்துப் போகிறாள்

3) வேகாத வெய்யிலில்
சாலையில் தவித்துக்கொண்டிருக்கும்
கண்களுக்கு ஆறுதலாய்க்
காட்சி அளித்துக்கொண்டிருந்தக்
கானல் நீரையும்,
வீழ்ந்து வீண் அடித்துக்கொண்டிருந்த
லாரி“யின் உதிரி நீரினை
ஆதாரமில்லாமல்
கரைத்துவிடுகிறது,
கதிரவனின் காய்ச்சல்!

4) ஒளி எல்லா நேரங்களிலும்
வழிகாட்டியாக மட்டுமே இருக்காது;
“எச்சரிக்கையாகவும் இருக்கலாம்”
என்று வழிகாட்டியது,
சாலையின் எதிர்ப்புறம் வந்த
வாகனத்தின் முன்விளக்கு!

5) சந்திர ஒளிக்கு
அழகு சேர்க்கும்
அந்தி மாலையின் தெருவிளக்குகள்,
மின்வெட்டில் அணைவதற்கு
“ஒலி”க்கீச்சுகளாய்
நாம் எவ்வளவு
உச்சுக்கொட்டுகிறோமோ;
அவ்வளவு உச்சுக்கொட்டுகள்
நிறைந்த “ஒளி”வீச்சுகளைக்
காலைச்சூரியனின் கதிர்கள்
கொட்டக் கொட்ட,
விடிந்தும் சாலைகளில்
அணையாதத் தெருவிளக்குகள்
மங்கிக்கொண்டே போய்,
இருப்பது தெரியாமல் “ஒளி”க்கீச்சும்!
ஏன் ஒளியின் உச்சுக்கொட்டல்கள்
கண்களின் செவிக்குக் கேட்பதில்லை?

6) நான் ஒருச் சித்திரக் குள்ளனாகப் பிறந்திருந்தால்,
உண்டியலில் “பஸ் பாஸ்-ஐ” மூழ்கடித்துவிட்டு,
சாலையில் என் தாய்த் தந்தையருடன்
டி.வி.எஸ் 50“யில் பயணித்து
வேடிக்கையில் உறைந்து
உல்லாசப்பட்டிருப்பேன்!

இல்லை என்பதால் உள்ளுக்குள் தந்தையோ,
மிதிவண்டி வாங்கித் தரக்கூட வக்கில்லாத
சித்திரக் குள்ள மனதாய்ச்
சுருங்கிப் பயணற்ற
வாழ்க்கையில் உடைந்து
உதாசினப்பட்டிருப்பார்!

உசுப்பேற்றும் மனசாட்சியை
உறங்கடிக்கப் போராடித்
தவித்துக்கொண்டேத் தரையில்
படுத்துக் கிடக்கும்
தந்தையைத் தாழ்வாகக் குனிந்துப்
பார்க்க முடியாமல் தவிக்கிறது,
என் வறுமை என்னும் உயரம்!

7) பத்து ரூபாய்க்கு
பேரம் பேசி ஒத்துவராமல்
சாலை – ஓர “ஆட்டோ“வை
நிராகரித்துவிட்டு
கேப் கார்” ஒன்றை
முன்பதிவிட்டு,
கஞ்சத்தனத்திற்கு-
கௌரவம் சூட்டி,
கண்ணாடி ஏற்றி-
மாசினை மறைத்து,
குளிர்ப் பதனத்தில்-
வெப்பத்தை மறந்துவிட்டு,
கட்டண எண்ணிக்கையில்
இருவது ரூபாயைச் சேர்த்து
ரவுண்ட் ஆஃப்” செய்து வழங்கி-
வள்ளலாகிவிட்டு,
காசே இல்லை என்று புலம்புவதில்
உள்ள உவர்ப்பான எளிமையைப்
புரிந்துக்கொள்வதில்
பொருளாதார வல்லுனர்களே தள்ளாடுகின்றனர்.

8) சாலையில் போக்குவரத்து
நெரிசலின் வெப்பத்தைத்
தாக்குப்பிடிக்க முடியாமல்,
மரத்தோர நிழலில்
ஓரங்கட்டிய சமூக ஆர்வலர்,
சைலன்சரில்” கால் படாமல்,
பைக்“கில் அமர்ந்தவாறு
தூய்மைக்கேடை
நினைத்துக்கொண்டிருக்க;
காக்கையிட்ட
எச்சத்தில் முகம்சுழித்துச்
சட்டையின் அழுக்கை
அடிமரத்தில் தேய்த்துத்
தூய்மையாக்கிக் கொண்டிருப்பதில்,
மரம் அசைந்து காற்றடிக்க,
ரசனையில் மூழ்கிக்கொண்டே,
கீழே உதிர்ந்துக் கிடக்கும்
இலை ஒன்றை எடுத்து
அழுக்கை மேலும்
சுத்தப்படுத்திக் கொண்டு;
மர நிழலின் வலிமையை
உணர்ந்த அந்த நொடியில்,
சட்டென்று பையில் இருக்கும்
நேற்றைய மரமாய் இருந்திருக்கக்கூடிய
வெள்ளைக் காகிதம் ஒன்றை எடுத்துக்கொண்டு
மரத்தின் முக்கியத்துவத்தை எழுதுவதில்
தலைகுனிகிறது நம் சமுதாய அக்கறைகள்!

9) இருச்சக்கர வாகனத்தில்
அப்பாவின்
பின் இருக்கையில் இருக்கும்
அம்மாவின் கவனமான
அணைப்பில் கட்டப்பட்டு,
அப்பாவின் முன்
அடக்க உடக்கமாய்
அமர்ந்துகொண்டிருக்கும்
“வருங்கால வாலிபன்”,
ட்ரிப்பிள்ஸ்“ற்குப் பிடிக்கும்
சாலைப் போக்குவரத்துக் காவலாளியின்
கண்களுக்குத் தெரிவதில்லை!
சற்றே வளர்ந்த
மூன்று “சிக்கென” உடல் கொண்ட
“முன்னால் குழந்தைகளை” மட்டும்
கால்வாய்க் கால்களால்
இடைமறித்து மடக்கும்
காவல் உலகம் இது!
ஆளுக்கொரு நியாயமா?
சமுதாயத்தில் குழந்தைகளுக்கு
மரியாதை இல்லையா?
இல்லை வாலிபர்கள்
வஞ்சிக்கப்படுகிறார்களா?
நடுத்தர வர்க்கத்தைக்
குறி வைத்து
குத்திக் குத்தியே
சட்டத்தில் ஓட்டை விழுந்ததோ என்னவோ?!!

10) “ஸ்விக்கி“யில் உணவுக் கட்டளையிட்டுக்
காத்துக்கொண்டிருந்துப் பொறுமை இழந்தப்
போக்குவரத்துக் காவலாளியின் மகன்,
சாலைப் போக்குவரத்து நிலவரத்தைக்
கைப்பேசியிலேயே பார்வையிட்டுவிட்டு,
நியமிக்கப்பட்டவன் வேகமாக வரவில்லை
என்பதற்காக அவனைத்
திட்டித் தீர்த்துக் கிழித்தெடுத்து
இணையதளத்தில்
புகார் கொடுத்துவிட்டுப்
பணத்திருப்பம் வேண்டிப்
பெருமூச்சு விட்டுக்கொண்டிருப்பதற்கும்;
நியமிக்கப்பட்டவனின் சட்டப்பையில்
அந்த மூச்சுக் காற்றிற்கு
ஆடி அசைந்து எட்டிப்பார்க்கும்
“மிகைவேக அபராதச் சீட்டிற்கும்”
இடையில் உள்ளத் தொலைவில்
துளைந்துப்போய் தான்
திக்கித் தடுமாறிச்
சிக்கிக்கொண்டிருக்கிறது,
சட்டம் என்னும் இடியாப்பச் சிக்கல்

‘எழுத்தாணி’ ஆகிய நான்