Penbugs
Editorial News

சர்ச்சையில் மத்திய ஆயுஷ் அமைச்சகம்

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் காணொளி வகுப்பில் பல்வேறு இந்திய மாநிலங்களை சேர்ந்த சித்த, ஆயுர்வேத மருத்துவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

அதில் பேசியவர்கள் இந்தியில் பேசியதால், இந்தி தங்களுக்கு தெரியாது என்றும் எல்லாருக்கும் புரியும்படி ஆங்கிலத்தில் பேசுமாறும் சிலர் கேட்டதாக கூறப்படுகிறது.

அதற்கு இந்தி தெரியாதவர்கள் தாராளமாக வெளியேறலாம் என அவர்கள் கூறியதாக தெரிகிறது. இதுகுறித்த வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளது.

ஆயுஷ் அமைச்சகத்தின் இத்தகைய செயல்பாட்டிற்கு கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

மத்திய ஆயுஷ் அமைச்சக செயலர் வைத்யா ராஜேஷ் கொட்டேச்சா, அமைச்சகத்தின் பயிற்சி வகுப்பில்,இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம் என்று சொல்லியிருப்பது மத்திய அரசின் இந்தி திணிப்பு கொள்கையை அப்படியே பிரதிபலிப்பதாக இருக்கிறது.

இது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு, உடனடியாக அந்த செயலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் எத்தனை நாள் இந்தி தெரியாது என்றால் அவமதிக்க படுவதை, பொறுத்துக்கொள்ளப் போகிறோம் என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

ஆயுஷ் அமைச்சக அதிகாரிகள் தமிழ் புரியாமல் எப்படி எங்கள் மருத்துவத்தைப் புரிந்து கொள்வர் என்ற கேள்வி எழுப்பாதது எம் மருத்துவர்களின் பெருந்தன்மை. அனைவருக்கும் புரியும் மொழியில் இயங்கவேண்டியது அரசின் கடமை.இது இந்தி அரசல்ல.இந்திய அரசு என்பதை மறந்துவிட வேண்டாம்.வாழிய பாரத மணித்திருநாடு என பதிவிட்டுள்ளார்.

Leave a Comment