Penbugs
Coronavirus Short Stories

தகவல் தொழில்நுட்ப பூங்கா!!

எங்களைப்பற்றி சொல்வதற்கு என்ன இருக்கிறது என்று நினைக்க வேண்டாம்
நிறையவே இருக்கிறது..!!

உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை எத்தனையோ பேருக்கு வேலை வாய்ப்பு உறுதியாக
இடம் கொடுத்தவர்கள்..!!

இந்த வளாகத்தில் நிறைய கட்டிடங்கள் அதில் நிறைய தளங்கள் உண்டு,வெவ்வேறு நிறுவனங்கள், வெவ்வேறு மனிதர்கள்..பல்வேறு பணிகள்.
பொதுவாக கணினியில் வேலை கணிசமான ஊதியம்
ஒரே பெயர் ஐ.டி. ஊழியர்கள்.

நாங்கள் இங்கு பலவிதமான மனிதர்களை பார்த்திருக்கிறோம்.

எப்போதும் வேலை வேலை என்று உழைக்கும் ஊழியனும் உண்டு, அட விடுடா கடைசியில பாத்துக்கலாம் என்று ஊர் சுற்றி வருபவனும் உண்டு.

புகை பிடிப்பதும் தேநீர் அருந்துவதும் இவர்களில் சிலரின் தவிர்க்க இயலாத தலையாய கடமைகளில் ஒன்று.

தொடர்ச்சியாக இரண்டு மூன்று சிகரெட் பிடிப்பவர்களை பார்த்து வியந்து இருக்கிறோம்.

கடலை போடுவதும்
காதல் பிறப்பதும் மற்றவருக்கு தெரியாமல் போகலாம் ஆனால் எங்களுக்கு காதுகள் மட்டுமல்ல கண்காணிப்பு கண்களும் உண்டு.

ஒவ்வொரு வருடமும் ஊதிய/பணி உயர்வின்போதும் இன்பம் துன்பம் இரண்டையும் கண்டு சுவர்களே ஆனாலும் அரண்டு போனவர்கள் நாங்கள்.

வேலையில் அழுத்தம்
உயர் அதிகாரியின் கட்டளை குரல்கள் யாவும் கண்ணீருடன் கேட்ட கழிப்பறைகள் இன்னும் நிறைய கதைகள் சொல்லும்.

இங்கு வேலை செய்யும் பெண்களின் உலகை
நாங்கள் வெகுவாக ரசித்தோம்..!!

அத்தனை கடினமான வேலையிலும் கூந்தலில் பூக்கள் இல்லாமல் உதட்டில் கொஞ்சம் புன்னகை பூ பூத்து
வார இறுதியில் சேர்ந்து எடுக்கும் செல்ஃபி, கலாச்சார நாளில் அணியும் சேலை..

ஆண்களுக்கு சமமாக எதிலும் விட்டுக்கொடுக்காமல் போராடும் மனம்/குணம்.

கல்லாக இருக்கும் கட்டிடம் எங்களுக்கே அவர்கள் மீது மரியாதையான காதல் வரும்..!!

எப்போது சிறு இடைவேளை வரும் என காத்திருந்து வெளியில் ஓடி வந்து தத்தமது வழக்கமான இடங்களில் அமர்ந்து கேலி பேசி கிண்டல் செய்து கொத்து கொத்தாய் கலைந்து போவது கார்ப்பொரேட்டில் தனி அழகு.

இவற்றை எல்லாம் ஏன் சொல்கிறோம் எதற்காக இப்படி புலம்புகிறோம்..

ஆம்..கல்லும் மண்ணும் கம்பிகளும் வைத்து
கட்டிடமாக கட்டி இருந்தாலும்
இத்தனை ஆயிரம் பேர் வந்து சென்று பரபரப்பாக இருந்த இடம்

இன்று இந்த கொரொனாவால் வெறிச்சோடி தனித்திருக்கிறது.

ஆம்.. நாங்கள் கட்டிடங்கள் சமூக இடைவெளி விட்டு தனித்தனியே நின்று உங்கள் நலனை பற்றி நினைவுகளை பற்றி ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொண்டிருக்கிறோம்..!!

எங்களைப்போலவே நீங்களும் பாதுகாப்பாக இருந்து எல்லாம் சரியானதும் மீண்டும் இங்கு வருவீர்கள் என வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறோம்.

இப்படிக்கு
கார்ப்பொரேட் கட்டிடங்கள்.