ரகுவரன் ஏன் ஸ்பெஷல் …?

ரகுவரன் ஏன் ஸ்பெஷல் …?

நல்ல ஆஜானுபாகுவான உடல் அமைப்புதான் சினிமா வில்லன்களுக்கு அடையாளம் என்ற கூற்றை உடைத்து எறிந்து தன் ஒல்லியான உடல் அமைப்பை வைத்தே வில்லத்தனம் செய்தவர் இவர்..!

நானூறுக்கும் மேற்பட்ட படங்கள் நடித்த ரகுவரன் அனைத்து வகையான கதாபாத்திரங்களுக்கும் தன் நடிப்பால் உயிர்ப்பை தர முடியும் என்று நிரூபித்தவர் …!

மிமிக்ரி ஆர்டிஸ்ட்கள் முதன்முதலாக பேசிப் பழகுவது இவரின் குரலில்தான் வெகுஜனங்களின் மத்தியில் அவ்வளவு பரிட்சயமான குரலுக்கு சொந்தக்காரர்….!

“ஐ நோ” இந்த வார்த்தை சாதரணமாக தெரியலாம் ஆனால் இதையே தன்னுடைய உடல் மொழியாலும் ,சொல் மொழியாலும் சினிமா உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தது ரகுவரனின் அசாத்தியம் …!

அவர் நடித்த கதைகளில் பல நடிகர்களை பொருத்தி பார்க்கலாம் ஆனால் சில கதாப்பாத்திரங்கள் அவரைத் தவிர வேறு யாராலும் நியாப்படுத்தி இருக்க இயலாது என சில படங்கள் எங்கள் பார்வையில் இதோ :

1.சம்சாரம் அது மின்சாரம் :

விசுவின் வழக்கமான குடும்ப பாணியில் வந்த இந்த திரைப்படத்தில் ஒரு வீட்டின் தலைமகனாக அதுவும் கஞ்சனாக வந்து அசத்தி இருப்பார் ரகுவரன் சராசரி ஒரு நடுத்தர குடும்பத்தின் பிரதிபலிப்பாக வந்த இப்படத்தில் ரகுவரனின் நடிப்பு தத்ரூபமாக இருந்தது ‌‌…!

2 ‌.அஞ்சலி :

மணிரத்னத்தின் கிளாசிக்குகளில் ஒன்றான இப்படத்தில் உயிருக்கு போராடும் குழந்தையை வளர்க்கும் தந்தையாக நெகிழ வைத்து இருப்பார் அதுவும் ஏன்பா அஞ்சலி பாப்பா நம்ம வீட்டுல ஏன் பொறந்துச்சு வேற‌ யாருக்கான பொறந்து இருக்கலாம் இல்ல என்ற கேள்விக்கு அவர் பதில் சொல்லும் விதம் எழுதிய விதமும் அதனை ரகுவரன் வெளிப்படுத்திய விதமும் ரகுவரனின் பெயரை காலம் முழுவதும் சொல்லும் …!

3.பாட்ஷா :

தமிழ் சினிமாவின் கமர்சியல் சினிமாவிற்கு அரிச்சுவடியாக இன்று வரை இருக்கும் படம் பாட்ஷா . சூப்பர்ஸ்டாரிடம் பாட்ஷா ரீமேக் பண்ணா யார் நடிக்கலாம் என்ற கேள்விக்கு இங்கு பாட்ஷாக்கு பல பேர் இருக்காங்க ஆனா ஆன்டனிக்கு ஆளே இல்லையேனு சொன்னது ஒன்று போதும் ஆன்டனி அதிரி புதிரி மாஸை நாம் தெரிந்து கொள்ள …!

மன்னிக்க நான் ஒன்றும் பாட்ஷா இல்ல ஆன்டனி மார்க் ஆன்டனி என்று வசனம் பேசி தியேட்டரை அதிர வைத்தது ரகுவரனின் நடிப்பு …!

4.முதல்வன் :

” என்னை சமாளிக்கவே முடியல இல்ல “

இந்த வசனம் அவருக்காகவே எழுதப்பட்டது போல் இருக்கும் கதையின் நாயகர்கள் நடிப்பில் அவரை சமாளிக்கவே அதிகமாக ஓட வேண்டி இருந்தது ‌. சங்கரின் எழுத்திற்கும் ,சுஜாதாவின் வசனத்திற்கும் தன் நடிப்பால் அரங்கநாதனாகவே வாழ்ந்தார் . திருக்குறள் சொல்லும் விதம் , பேட்டியின் போது ஒரு நாள் ஒரு நாள் நீ இருந்து பாரு அப்ப தெரியும் எத்தனை துறை ,எவ்ளோ பிரச்சினைனு அவர் சொல்வதெல்லாம் வேற லெவலில் காட்சியை பலப்படுத்தின.‌.!

5.முகவரி :

பெரிய வில்லன் நடிகராக இருந்தாலும் குணச்சித்திர நடிப்பிலும் கலக்கி வந்தார் ரகுவரன் முதல்வனுக்கு அடுத்த ஆண்டு வந்த முகவரியில் வில்லத்தனம் எதுவும் இல்லாமல் ஒரு அன்பான அண்ணனாக வந்து ஆச்சரியப்படுத்தி இருப்பார் .

“தங்கம் கிடைக்கற வரை தோண்டனும் ,ஜெயிக்கற வரை போராடனும்” என்று கோல்டன் ராக் கதையை அவர் சொல்லும் விதம் ஒரு அழகிய கவிதை ..!

இந்த படங்கள் மட்டுமில்லாமல் ஆஹா , அமர்க்களம் , கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் என பல படங்களில் ரகுவரனின் நடிப்பை பார்த்து தமிழ் சினிமா ரசிகர்கள் அசந்து உள்ளனர்..!

தமிழ் சினிமா சீக்கிரம் இழந்த ஒரு பொக்கிஷம் ரகுவரன் ..!

ரகுவரனின் பிறந்தநாள் இன்று..!