Penbugs
CinemaInspiring

கர்ணன் – உரிமைக்காக களம் கண்டவன்!!!

அனைத்து உயிர்களின் சாட்சியாக நம் தெய்வங்களுக்காக நடந்த போர் தான் கர்ணன் என்று இயக்குநர் மாரி அண்ணன் தனது முகப்புத்தக பதிவில் பதிவு செய்திருந்தார், இங்கு தெய்வங்களுக்காக நடந்த போர் என்று அவர் சொல்லியிருப்பதை வைத்து எனது புரிதலில் இருந்து இங்கு கர்ணன் படம் பற்றிய என் அனுபவத்தை தொடங்குகிறேன்,

பொதுவாக நம் ஊரில் நமது குடும்பத்தில் இறந்த ஒருவருக்கு உணவு படைத்து அவர்களுக்கு பிடித்தவற்றை வாங்கி வைத்து அவர்களை சாமி என்று பாவித்து அவர்களை நாம் வணங்குவதுண்டு,இறந்து போனவங்க சாமிகிட்ட போய்ட்டாங்கன்னு சொல்லுவோம்,பிற்காலத்துல நம்ம அவங்களுக்காக மேல நான் சொன்ன மாதிரி அவங்கள நினைச்சு கும்பிடுறப்போ அவங்க தெய்வம் ஆகுறாங்க,

திருநெல்வேலி வட்டாரத்தில் இருப்பவர்களுக்கு ” காட்டு பேச்சி ” தெய்வம் பற்றிய வரலாற்று தகவல்கள் நிறைய தெரிய வாய்ப்பு இருக்கு,ரொம்ப துடியான தெய்வம்ன்னு சொல்லுவாங்க அதே நேரத்துல நிறைய பேருக்கு தொன்று தொட்டு காட்டு பேச்சி குல தெய்வமாகவும் வழிபாடு செய்யப்படுகிறது,என் அப்பா ஊரும் திருநெல்வேலி வட்டாரத்தை சார்ந்து வருவதால் இது போன்ற அனுபவங்கள் எனக்கு எளிதான புரிதலை தருகிறது,

அமானுஷ்யம் (Super Natural) என்ற விஷயத்திற்கும் மாரி அண்ணனுக்கும் இருக்கும் தொடர்பு எனை வியக்க வைக்கிறது,அமானுஷ்யத்தை தவறாக புரிந்துகொண்டால் அது நம்ம ஊரில் பேய் படம் என்று சொல்லும் கதையும் உண்டு,ஆனால் மாரி அண்ணன் தன் திரைக்கதையில் கையாளும் அமானுஷ்யம் உயிரோட்டத்துடன் காட்சி அமைக்கப்படுவதால் படம் பார்க்கும் ஒரு வெகுஜன ரசிகனுக்கு அவர் அந்த காட்சியை ஒரு ரசிகனுக்கு எப்படி அவன் மனதில் கடத்த வேண்டும் என்ற நோக்கில் எழுதினாரோ அது சரியான முறையில் அவனுக்கு சென்றடைகிறது,

பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் பரியன் ரயில்வே தண்டவாளத்தில் அடி வாங்கி படுத்திருக்கும் போது அவன் செல்லமாக வளர்த்து இறந்து போன கருப்பி நாய் பரியனின் கன்னத்தில் தன் நாக்கை வைத்து வருடிவிடுவதாகவும் பின் மறைந்து போனவுடன் பரியன் ரயில் வரும் சத்தத்தில் சுய நினைவிற்கு வருவதாக அந்த காட்சி அமைக்கப்பட்டிருக்கும் அமானுஷ்யமாய்,அதே போல் தான் கர்ணனிலும் மாரி அண்ணன் கையாண்ட காட்டு பேச்சி கதாப்பாத்திரம் அமானுஷ்யத்திற்குள் பண்டைய கால தெய்வ முறை பற்றிய விளக்கங்களுடன் சேர்த்து ஏன் நாம் இறந்து போனவர்களை தெய்வமாக வழிபடுகிறோம் என்று நம் நெஞ்சில் பெரிய படபடப்புடன் காட்சியுடன் ஒன்றிணைய வைக்கும்,

இப்படி இறந்து போனவர்களை தெய்வமாக நாம் வழிபடும் போது அப்படி இறந்தவர்கள் எதனால் இறந்தார்கள்,அதற்கு பின்னால் இருக்கும் அடக்குமுறையும்,பின்புலனும் என்ன..? அந்த மக்களின் தவிப்பு எதற்காக..? ஏன் இவர்களின் வாழ்வாதாரத்தில் இப்படி ஒரு ஓர வஞ்சனை..? இதில் ஒருவன் முன் வந்து தங்கள் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் போது அவனுக்கு நிகழ்ந்த இன்னல்கள் தான் என்ன..? அவன் வாள் ஏந்த என்ன காரணம்..? இம்மக்களின் மீது அதிகார வர்க்கம் எதை திணிக்க நினைக்கிறது என இப்படி பல கிளை கதைகளுடன் படம் பயணிக்கிறது,அப்போது அதிகார வர்க்கத்திற்கு எதிராக நடக்கும் உரிமை போராட்டத்தை கூட இங்கு போர் என்று தான் சொல்லவேண்டியிருக்கிறது,இதற்காக தான் இறந்து போன தெய்வங்களுக்காக நடந்த போர் அனைத்து உயிர்களின் சாட்சியுடன் என்று மாரி அண்ணன் தனது பதிவில் கூறியிருந்தார்,

ஒரு இறப்பு அல்லது காரணியாக பயன்படுத்தும் ஒரு விஷயத்திற்கு மாரி அண்ணன் பரியேறும் பெருமாள் படத்தில் கருப்பி நாயை பயன்படுத்தியது போன்று கர்ணனில் பல தரப்பட்ட மிருகங்கள்,பறவைகள்,சிறு புழுவினங்கள் என்று காட்சியில் முன் எடுத்து வைத்து அதன் மூலம் கதையை பயணிக்க வைப்பது என்பது எளிதாக ஒரு ரசிகன் புரிந்து கொள்ளவும் அந்த சூழலை அவன் மனதிற்குள் உணரவும் உதவியாய் இருக்கிறது,ஆறறிவு உள்ள மனிதனை விட ஐந்தறிவு கொண்ட உயிரினத்தை மனிதனுக்கு உதாரணமாக ஒப்பிட்டு காட்டும் போது எனக்கு ஒன்று தான் வியப்பளிக்கிறது,இதை காட்சியாக படமாக்குவதை காட்டிலும் ஒரு எழுத்தாளராக எந்த ஒரு மனநிலையில் எவ்வாறு இது போன்ற ஒரு காட்சியை முதலில் சிந்தித்து எழுதி இருப்பார் என்ற செல்ல பொறாமை கூட மாரி அண்ணன் மீது இருக்கிறது,

நம்ம மனசு எப்போலாம் உண்மையா படபடப்பா அடிச்சுக்கும்,சிறு வயதில் பள்ளியில் படிக்கும் போது இன்லாண்ட் லெட்டரில் வரும் பாஸ்,ஃபெயில் கடிதத்தில் ஆரம்பித்து சாவின் விளிம்பில் பேரன் பேத்திகளுடன் இன்னும் கொஞ்ச நாள் இருந்துவிடமாட்டோமா என்று மனசு கிடந்து படபடப்புல அடிச்சுக்கும்,இப்படி மனசு படபடன்னு அடிச்சுக்கும் போது நம்ம மனசுல ஏற்படுற பயம் சாவ விட கொடுமையானது,அப்படி ஒரு படபடப்பும் பயமும் மாரி அண்ணனின் எழுத்துக்களின் மூலம் திரையில் என்னை தொற்றிக்கொள்கிறது,

நிஜமாகவே உங்கள் வாழ்வில் நீங்கள் அடக்குமுறையின் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே இப்படி ஒரு படைப்பை முதலில் கதையாக எழுத முடியும்,இவர் வாயிலாக கேட்ட கதை,அவர் சொந்தம் வழியாக கேட்டு தெரிந்து கொண்ட கதை என்றெல்லாம் கதை கேட்டு எழுதினால் தன் படைப்பின் மீது இவ்வளவு உண்மையாக ஒருவன் படம் எடுக்க முடியாது,நான் ஏன் இப்படி சொல்கிறேன் என்றால் இந்த நவீன உலகிலும் இப்போது இருக்கும் சூழலிலும் அடக்குமுறையில் நானும் ஒரு மண் புழுவாக மிதித்து நசுக்கி ஓரங்கட்டப்பட்டவன் தான்,உங்கள் கைகளும் கால்களும் கட்டப்பட்டு உஙகள் கால் இடுக்கில் அதிக விஷம் கொண்ட பாம்பு ஒன்று உங்கள் கால்களை சுற்றி இருக்கும் ஒரு மனநிலை போன்ற பாதிப்பில் இருந்து மீண்டு வந்தவன் நான்,ஆக என்னால் மாரி அண்ணனின் எழுத்துடன் எனை முழுவதுமாக இணைத்துக்கொள்ள முடிகிறது,

எப்போதும் போல படத்தின் கதையை பற்றியோ அதில் வேலை செய்தவர்களை பற்றியோ நான் இங்கே விவரிக்கப்போவது இல்லை,
இங்கு கர்ணன் என்ற இந்த படத்தை பார்க்கும் போது எனக்கு நடந்த நிகழ்வையும் என் அனுபவத்தையும் சேர்த்து நான் எழுதுகிறேன்,என் அனுபவம் உங்கள் வாழ்வுடன் ஒப்பீடு செய்ய முடிந்தால் நான் அடைந்த பாதிப்பை நீங்களும் உணர்ந்தால் கர்ணன் ஈடு இணை செய்ய முடியாத ஒரு தனிப்பெரும் படைப்பு,

Related posts

தனுஷின் கர்ணன் பட டீசர் வெளியானது

Kesavan Madumathy

கர்ணன் டைட்டில் லுக் வெளியானது..!

Kesavan Madumathy

Karnan Review- A Must Watch

Penbugs

Director Pa Ranjith and Anitha blessed with a boy child

Penbugs

Leave a Comment