Penbugs
Cinema

பேரன்புக்காரனின் தினம்!

நாள் : ஆகஸ்ட் 14 2016,

ஆகஸ்ட் 13 இரவு 11:30 க்கு
வேலை செய்யும் ஊரான
கோயம்புத்தூரில் இருந்து
சொந்த ஊரான மதுரைக்கு
மூன்று நாட்கள் விடுமுறை காரணமாக
செல்ல பேருந்தில் ஏறி வழக்கம் போல்
ஜன்னல் சீட்டில் அமர்ந்தேன்,

குடிக்க தண்ணி பாட்டில்,
சாப்பிட 50 – 50 பிஸ்கட்ஸ் என
பேருந்து நிலைய கடையில் MRP – யை விட
இரண்டு ருபாய் அதிகம் விலை கொடுத்து
என்னிடமே என் கையில் இருந்தே ஒருவன்
லட்சம் வாங்கி பிழைப்பு நடத்துகிறான்
என வாய் மொழியை மனதில்
சொல்லிக்கொண்டே ஹெட்செட் எடுத்து
காதில் யுவன் Playlist – ஐ ஒலிக்க விட்டேன்,

வண்டி கோவை சிங்காநல்லூர்
பேருந்து நிலையத்தில் இருந்து
கிளம்பியது, என்ன இரவு நேரம்
என்பதால் திருநங்கை அக்காக்களை
பேருந்து நிலையத்தில் ஒப்பனையுடன்
பார்க்கமுடியவில்லை,

யுவன் ஒரு பக்கம் செவிக்கு
இனிமையான இசையை
கொடுக்க இன்னொரு பக்கம்
பாட்டு எழுதிய கவிஞர்கள்
மனதுக்கு இன்பம் சேர்க்கும் பாடல்
வரிகளில் என்னை மூழ்க செய்தனர்,

கொஞ்சம் தூக்கம் நிறைய பாடல்
என அந்த பயணம் தொடர்ந்தது
இடை இடையே ஹாரிஸ்,ரஹ்மான்,
ஜிவி – இவர்களின் Playlist பாடலும்
வந்து சென்ற வண்ணம் இருந்தன,

4:30 மணிக்கு ஆரப்பாளையம்
தாண்டி இன்று ஸ்மார்ட் சிட்டிக்காக
தடமே தெரியாமல் இடிக்கப்பட்ட
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில்
வந்து இறங்கினேன்,

வழக்கம் போல பேருந்து நிலைய
ஆட்டோக்கார அண்ணாத்தைகள்
சத்தம் என் காதில் ஒலிக்க ஒருவரிடம்
சென்று ஜெய்ஹிந்த்புறம் போகணும்
என்று தூக்க கலக்கத்தில் கூறினேன்,
சரி தம்பி போகலாம் 200 ரூபாய் என்றார்,

தூக்க கலக்கம் சட்டென கலைந்தது,

என்னது 200 – ரூபாயா..?

ணே, ஒரு பாலம் ஏறி எறங்குனா
வரப்போற ஜெய்ஹிந்த்புறத்துக்கு 200
ருபாயா..? என்ன ணே இது..?

ஆட்டோக்காரர் : தம்பி வாங்க உக்காருங்க,

குறிப்பு :

அது ஒன்னு இல்ல
தூக்கம் கலைஞ்சு பேசுனோனா
ஊர் ஸ்லாங் வந்துருச்சு ரைட்டு!
பையன் நம்ம ஊரு தான் போலன்னு
ஆட்டோ டிரைவர் உஷார் ஆயிட்டாரு,

ஊர்க்காரன்கிட்டயே ஹ்ம்ம்
என மனதில் வசவு பாடிக்கொண்டே
வீட்டிற்கு சென்றேன் ஆட்டோவில்,

இறுதியாக 80 ருபாய் கொடுத்தேன்
அதுவே ஜாஸ்தி தான்,

பிறகு ஒரு குட்டி தூக்கத்தை போட்டுவிட்டு
வழக்கம் போல் காலை எந்திரிந்து கிளம்பி
சாப்புடாம கூட அடித்து பிடித்து மீண்டும்
அதே பேருந்து நிலையத்துக்கு ஓடினேன்,

அவசரம் அவசரமாக இவன் எங்கு
போகிறான் என யோசிக்க வேணாம்,

வழக்கம் போல் என் காதலியை
சந்திக்க அதே பூங்காவிற்கு தான்,

அவள் வருகை தரும் நேரத்திற்கு
சரியாக நானும் சென்றுவிட்டேன்,
பெண்களின் வருகைக்கு முன் அங்கு
ஆணின் வருகை பதிவு என்பது
மிகவும் முக்கியமானது காதலில்,
இதை புரிந்துகொண்டவன்
நல்ல காதலன் என வருங்காலம் பேசும்,

பிறகு அவள் கொண்டு வந்த
சப்பாத்தியை அவளுக்கு கொஞ்சம்
கூட கொடுக்காமல் தானே சாப்பிட்டுவிட்டு
முழு பாட்டில் தண்ணீரையும் குடித்து விட்டு
நல்ல கும்பகர்ணன் போல் அமர்ந்து
அவளுடனான அரட்டையை தொடர்ந்தேன்,

இரண்டு மாதத்திற்கு ஒரு முறை தான்
ஊருக்கு வருவதால் கதைக்க ஆயிரம்
கதைகள் எங்களுக்கு கிடைக்கும்,

அப்படி அன்றும் நிறைய விஷயங்களை
பற்றி சல்லடை போட்டு பேசிய நொடியில்
முகப்புத்தக தோழி ஒருவர் திடீரென கால்
செய்தார்,அந்த தோழி நா.முத்துக்குமாரை
ரசிக்கும் ஒரு கவிபேரரசு வைரமுத்துவின்
தீவிர ரசிகை என்று சொல்லலாம்,

சிவா,
விஷயம் தெரியுமா..?
Messenger – ல பார்த்தேன்
நீ ஆன்லைன்ல இல்ல
அதான் Call பண்ணேன்,

ஹ்ம்ம்!!
சொல்லு மா என்ன விஷயம்..?

நா.முத்துக்குமார் இறந்துட்டாரு சிவா,

ஹே,என்ன சொல்ற..?

ஆமா,FB வா !!

சரி நீ கட் பண்ணு நான் வரேன்,

முகப்புத்தகத்தை திறந்தேன்
கண்ணில் பட்ட பதிவுகள் அனைத்தும்
முத்துக்குமாரின் கண்ணீர் அஞ்சலி
பதிவாக தான் இருந்தது,

காதலியிடம் சொல்லிவிட்டு
கனத்த இதயத்துடன் அந்த
பூங்காவில் இருந்து நான் கிளம்பினேன்,

பூங்காவிற்குள் நுழையும் போது
காலை சூரியனின் கதிரொளி பட்டு
படர்ந்து இருந்த பூக்கள் அனைத்தும்
மதிய நேரத்தில் கதிரவனின்
கருணையில்லா தாக்கத்தால்
சற்று வாடி காணப்பட்டது,

பூக்கள் கூட பருவ நிலைக்கு ஏற்றவாறு
தன்னை உயிர்ப்பித்துக்கொள்கிறது என
நினைத்துக்கொண்டே வீட்டிற்கு சென்று
தனியாக அறையில் உட்கார்ந்தேன்,

அன்று முழுவதும் முத்துக்குமார் எழுதிய
பாடல்கள் ஒவ்வொன்றையும் கேட்டு கேட்டு
திகைத்தேன்,அவ்வப்போது கண்ணீரும்
வெளியுலகை என் கண்களில் இருந்து
கொஞ்சம் எட்டிப்பார்த்தது,

தனிமையை ரசிக்கும்
நான் அன்று தனிமையின்
கோரத்தாண்டவத்தையும்
பார்த்து பயந்தேன்,

என் எழுத்துக்கு வடிவம் கொடுத்த
குரு என்று சொல்லுவேன்,

என் தமிழுக்கு அழகு சேர்த்த
அப்பன் என்று சொல்லுவேன்,

அத்தனை பேரன்புகளை
எனக்கு கற்றுக்கொடுத்தவர் அவர்,

கண்ணை மூடி திறக்கிறேன் இன்று
அவர் உலகத்தை விட்டு பிரிந்த
நான்காவது வருடம் தொடங்குகிறது,

காணும் காட்சியெங்கிலும்
தனிப்பெருந்துணையாக
முத்துக்குமார் மட்டுமே என் வாழ்வில்
என்று இருக்கிறேன் இன்றும்,

யார் அவன்..?
என் மனம் நினைப்பதை
பாட்டில் சொன்ன
பரிசுத்தமான பேரன்புக்காரன் அவன்,

இன்று ரசிக்க அவனும் இல்லை
அன்று கதைத்த காதலியும் இல்லை,

உன் எழுத்துக்கள் வழியே என்
எழுத்துக்களில் ஒட்டிக்கொண்டு
என்னையும் என் எழுத்தையும் மேலும்
அழகு சேர்த்துக்கொண்டிருக்கிறாய்
நான் வணங்கும் நான் ரசிக்கும் நான்
காதலிக்கும் நான் போற்றும் என் தமிழே,

  • இப்படிக்கு இவனாக !! ❤️

Related posts

Leave a Comment